(Reading time: 14 - 27 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 11 - வத்ஸலா

Varthai thavarivitten Kannamma

'ன்னை தான் சொன்னேன் பொறுக்கின்னு.... பின்னே நீ என்ன உத்தமனா???  அன்றொருநாள் அவனை இதே போல் வீட்டு வாசலில் நிற்க வைத்து உச்சரித்த உதடுகளில் இன்று மெல்ல மெல்ல புன்னகை மலர துவங்கியது. ஒரு ஆழமான சுவாசத்துடன் கூடிய புன்னகை. அதில் கண்டிப்பாக போலித்தனம் இல்லை.

அதற்குள் காரிலிருந்து இறங்கி அவனருகில் வந்து நின்றாள் அபர்ணா. அம்மாவின் பார்வை பரத்திலிருந்து அபர்ணாவுக்கும், அபர்ணாவிலிருந்து பரத்துக்கும் மாறி மாறி தாவிக்கொண்டே இருந்தது சில நொடிகள். பின்னர் மெல்ல தன்னிலை பெற்று பரத்தை பார்த்து சொன்னார் அம்மா...

'உள்ளே வாங்க... ஏன் வெளியிலேயே நிக்கறீங்க ..' அம்மாவின் அந்த வார்த்தைகளில் தனது தோல்வியை முழுமனதாக ஏற்றுக்கொள்ளும் பாவம் இருந்தது.

அம்மாவின் வார்த்தைகளுக்கு பதிலாக புன்னகைத்தானே தவிர நகரவில்லை பரத். அவன் பார்வை இப்போது அபர்ணாவின் மீது. பின்னே அவனவள் வாவென சொல்லாமல் எப்படி வீட்டுக்குள் வருவதாம்??? அவனது பார்வையின் அர்த்தம் புரிந்திருக்க வேண்டும் அவளுக்கு. 

'உள்ளே வாங்க பரத்' புன்னகையுடன் சொல்லிவிட்டு அவள் உள்நோக்கி நகரப்போக

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

'இரு இரு.. அதெப்படி உள்ளே போறதாம்??? ஆரத்தி எடுக்க வேண்டாமா??? அவள் கண்களை ஊடுருவிக்கொண்டே சொன்னவனின் பார்வையில் குறும்பின் ரேகைகள். 

'ஆரத்திதானே??? எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்திட்டா கண்டிப்பா எடுக்கறேன்...' அம்மாவும் பட்டென சொல்லிவிட மொத்தமாக மாறிப்போனது அபர்ணாவின் முகம்.

'ஹலோ மேடம்... இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு உங்க முகம் இப்படி மாறுது.. ம்??? என்றவன் அவளது அம்மாவை பார்த்து சொன்னான்

'நான் ஆரத்தி எடுக்க சொன்னது எனக்கில்ல... உங்க பொண்ணுக்கு... முதமுதல்லே சினிமாலே பாடிட்டு வந்திருக்காங்க மேடம்... எல்லார் கண்ணும் பட்டிருக்கும்...' இப்போது அவன் பார்வை மறுபடியும் அவள் முகத்தில் தஞ்சம்.

சினிமாவிலே பாடி இருக்காளா??? அபர்ணாவா??? அம்மாவின் குரலில் சந்தோஷ சாரல் தெரிய இவள் முகத்தில் இன்னமும் மாற்றம் வந்த பாடில்லை.

'ஹேய்... நீ முகத்தை இப்படி தூக்கித்தான் வெச்சுப்பேன்னா நான் இப்படியே கிளம்பறேன்...' அவன் சொல்ல எந்த பதிலும் சொல்லாமல் அவள் உள்ளே செல்ல முயல..

'சரி ஸி... யூ ..' அவன் கார் பக்கம் திரும்ப

'இல்ல இல்ல உள்ளே வாங்க ... ' சின்ன புன்னகையுடன் சொல்லிவிட்டு அவள் நகர... அவன் சிரித்துக்கொண்டே பின் தொடர... இந்த சின்ன விளையாட்டை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அம்மாவால். அதே நேரத்தில் அவனது வார்த்தைகளும், அவள் முக மாற்றமும் எதையோ புரியவைப்பது போலே இருந்தது அம்மாவுக்கு.

வனை பார்த்ததும் முதலில் உற்சாக குரல் கொடுத்தது அஸ்வினி  'ஹாய் பரத்....' கூவினாள் அவள்.

அடுத்து சோபாவில் இருந்து சட்டென எழுந்தான் அஷோக். அபர்ணாவின் அண்ணன். பரத்தை  நோக்கி கை நீட்டியபடியே சொன்னான் அஷோக்

'பரத்!!! ஏம் ஐ ரைட்??? தி கிரேட் சிங்கர்...'

மலர்ந்து சிரித்தான் பரத். கை குலுக்கிய படியே சொன்னான் அவன்

'நான் பரத்தான். பட் அந்த கிரேட் சிங்கர்தான் யாருன்னு தெரியலை..' சிரிப்பில் கலந்துக்கொண்டு அவனுடன் கைகுலுக்கிய அஷோக்கின் மனத்திரையில் அன்று விமான நிலையத்தில் அருணிடம் பரத் கொதித்த நிகழ்வுகள் வந்து போயின.

'உங்க சிஸ்டர் கூட பெரிய சிங்கர் ஆகப்போறாங்க. இன்னைக்கு ரெண்டு பாட்டு பாடிட்டு வந்திருக்காங்க...' குரலில் மகிழ்ச்சி ஊஞ்சலாட சொன்னான் அவன்.

'நான் பாடியதில் என்னை விட  இவனுக்கே மகிழ்ச்சி அதிகமோ???' ஆழ்மனம் சின்னதாக ஒரு கேள்வி எழுப்ப அவனையே பார்த்திருந்தாள் அபர்ணா.

'ஹேய்... ரியலி???" உற்சாகமானாள் அஸ்வினி. எல்லாரிடமும் அங்கே மகிழ்ச்சி அலை.

'அபர்ணா... போ.. போய் காபி போட்டு எடுத்திட்டு வா..' அம்மாவின் குரல் கலைத்தது அபர்ணாவை. பேசாமல் உள்ளே நகர்ந்தாள் அவள்.

அவன் வந்ததில் எல்லாரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது போல் தோன்றியது அபர்ணாவுக்கு. அப்பா இல்லை அங்கே. எங்கோ வெளியில் சென்றிருந்தார்.

சில நிமிடங்களில் உள்ளிருந்து குரல் கொடுத்தாள் அபர்ணா. 'அம்மா..'

அம்மா உள்ளே வர 'நீ கொண்டு போய் கொடு காபியை..' என்றாள் அவள்.

'ஏன்??? நீ கொடுத்தா என்ன..'

'பச்... கொண்டு போய் குடுன்னு சொல்றேன்ல..' ஒரு முறை அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு அம்மா காபியை எடுத்துக்கொண்டு நகர அவரை பின் தொடர்ந்து நடந்தாள் அபர்ணா.

ஒரு முறை அபர்ணாவை பார்த்துவிட்டு காபியை வாங்கிக்கொண்டான் பரத். அங்கே கலகல பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்க பரத் காபியை ஒவ்வொரு துளியாய் ருசித்து ருசித்து பருகிக்கொண்டிருக்க எதிலும் கலந்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் கவனித்த படியே நின்றிருந்தாள் அபர்ணா. அவ்வப்போது அவன் பார்வை அவளை தொட்டு செல்ல மட்டும் தவறவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.