(Reading time: 22 - 43 minutes)

அமேலியா - 10 - சிவாஜிதாசன்

Ameliya

மேலியாவைச் சுற்றி இருந்த மக்கள் இன்னும் மிரட்சி விழிகளோடு நோக்கிக்கொண்டிருந்தனர். அமேலியாவின் அருகில் இன்னொரு பெண்மணியும் விழுந்து கிடந்தாள். சுற்றி நின்றிருந்த மக்களில் சிலர் அவர்களுக்கு உதவ முன்வந்தனர்.  அதற்குள் அமேலியாவின் அருகில் விழுந்து கிடந்த பெண்மணி சுதாரித்து எழுந்தாள். அமேலியாவையும் கை பிடித்து தூக்கி நிறுத்தினாள்.

அமேலியாவிற்கு நடந்தவை அனைத்தும் புரிவதற்கு சில நொடிகள் பிடித்தன. சாலையின் நடுவே நின்றிருந்த தன்னை இடித்துத் தள்ளுவதுபோல் ஒரு வாகனம் வேகமாய் வந்து கொண்டிருந்தது வரை அவளுக்கு நினைவு இருந்தது. அதன் பின் என்ன நடந்தது? திடீரென ஒரு கை அவளை வலுவாகப் பிடித்திழுத்து அவளைக் காப்பாற்றியது. அவர் யார்? என அமேலியா திரும்பிப் பார்த்தாள். மேகலா கலைந்திருந்த தன் ஆடையை சரிபடுத்திக்கொன்டே அருகில் இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். அமேலியாவின் முகத்தில் கண்ணீர் கலந்த புன்னகை உருவானது.

அமேலியாவின் கையைப் பிடித்து இழுத்து வேகமாய் நடந்து சென்றாள் மேகலா. மேகலாவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு வேகமாய் நடந்தாள் அமேலியா.

வேடிக்கை பார்த்தவர்கள் தங்கள் வேலைகளைப் பார்க்க கலைந்து சென்றனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சாய்வு நாற்காலியில் அமர்ந்து ராமாயணம் படித்துக் கொண்டிருந்தார் நாராயணன். அவருக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு புத்தகங்கள் படிப்பது மட்டுமே.  அதுவும் ஆன்மீக புத்தகங்கள் படிப்பதில் தான் அதிகம் ஆர்வம் உண்டு. படிப்பதுபோக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, தன் துணிகளைத் துவைத்துக் கொள்வது என மீதி நேரத்தை செலவழிப்பார்.

வயது எழுபதை தொட்டாலும் இன்னும் தன்னுடைய வேலைகளைத் தானே பார்த்துக்கொள்வார். மற்றவர்களிடம் கூடுமானவரை உதவியை நாடும் பழக்கமில்லாதவர். எல்லா வேலையையும் முடித்துவிட்டு நேரமிருந்தால் பழைய பாடல்களைக் கேட்டபடியே கண்ணுறங்குவது அவரது வழக்கம் . எம் கே தியாகராஜ பாகவதரின் தீவிர விசிறி. அவரது பாடல்களைக் கேட்கவே புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

அன்றும் அந்த வீட்டினுள் பாகவதரின் பாடலான 'கிருஷ்ணா முகுந்தா முராரே! ஜெயகிருஷ்ணா முகுந்தா முராரே' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. 

பள்ளிக்கு விடுமுறை எடுத்த நிலா, காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு தாத்தாவின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. போதாக்குறைக்கு நாராயணனும் பாகவதரோடு சேர்ந்து பாடலைப் பாடியது நிலாவை கோபத்தின் உச்சிக்கே செல்ல வைத்துவிட்டது.

ஓடிச் சென்று பாடலை நிறுத்தினாள் நிலா. திடுக்கிட்டு விழித்தார் நாராயணன்.

"ஏண்டி பாட்டை நிறுத்தின?"

"ஸ்கூல்க்கு லீவு போட்டுட்டு சந்தோசமா இருக்கலாம்னு பாத்தா நீ இந்த மாதிரி பாட்டு போட்டு என்னை கொடுமைபடுத்துற"

"உனக்கு இந்த பாட்டோட அருமை எங்கிருந்து புரியபோகுது . கண்ணாபின்னானு வாசிச்சு கண்டதையும் எழுதி கண்றாவியா பாடுறது தான் உங்களுக்கு பிடிக்கும்..கலிகாலம் முத்திடுச்சுங்கறதுக்கு உதாரணம், எனக்கு பேத்தியா வந்து தொலைச்சிருக்கியே நீ தான்"

"ஏன் தாத்தா அப்படி சொல்லுற"

"அந்த காலத்துல உன் வயசுல எல்லாம் என் அப்பா கோவில் சொற்பொழிவுக்கு கூட்டிட்டு போவாரு. அங்க புராண கதைகள் மட்டுமில்லாம  நல்ல கருத்துக்கள் கொண்ட கதைகளும் சொல்லுவாங்க. அதனால தான் நான் இவ்வளவு நல்லவனா இருக்கேன்"

"பொய் சொல்லாத தாத்தா. நீ தான் இந்த உலகத்துலயே ரொம்ப பெரிய வில்லனாம்"

"யாருடி அப்படி சொன்னது?"

"மாமா தான்"

"அப்படியா சொன்னான்? அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஆசைப்படுற எனக்கு நல்ல பட்டத்தை குடுத்திருக்கான்"

அப்போது, மேகலா படபடவென உள்ளே நுழைந்தாள். அவளது முகம் வியர்த்திருந்தது.

"மார்க்கெட்டுக்கு போயிட்டு என்னம்மா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட"  என்று கேட்டார் நாராயணன்.

மேகலா எப்படி ஆரம்பிப்பது என்று திணறினாள்.

"அப்பா. நான் செஞ்சது..."

"என்ன?"

"நான் செஞ்சது சரியா தப்பான்னு எனக்கு தெரியல"

"அப்படி என்ன செஞ்சிட்ட?"

வாசலில் மறைந்திருந்த அமேலியாவைப் பார்த்து உள்ளே வருமாறு கண்ணசைத்தாள் மேகலா.

அமேலியா சிறிய தயக்கத்தோடு உள்ளே வந்து தலையைத் தாழ்த்தி அமைதியாக நின்றாள்.

நாராயணன் திகைத்தார். என்ன நடக்கிறது என்றே அவருக்கு புரியவில்லை. ஆழ்ந்த அமைதி அவர்களுக்குள் நிலவியது.

அமேலியா நிலாவைப் பார்த்து புன்னகைத்தாள். நிலாவும் பதிலுக்கு புன்னகை செய்தாள்..மேகலாவுக்கோ தன் தந்தையிடம் என்ன விளக்கம் கூறுவது என்றே புரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.