(Reading time: 22 - 43 minutes)

சந்த் புரியாமல் பார்த்தான்.

"இனி ஜான் என்னை தொந்தரவும் செய்யக்கூடாது. அவனை நான் பாக்கவும் கூடாது"

"கண்டிப்பா இனி அவன் உன் வாழ்க்கையிலேயே இருக்கமாட்டான். நான் அதுக்கு பொறுப்பு" என்று கூறியபடி ஜானை தொலைபேசியில் அழைத்து, தன் வீட்டிற்கு வருமாறு கூறிவிட்டு, தான் ஜெயித்துவிட்டதைப் போல பூரிப்பில் ஆழ்ந்தான் வசந்த்.  

சந்தின் வீடு அமைதியில் நிறைந்திருந்தது .நாராயணன் சோபாவில் அமர்ந்துகொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அவரது மனம் முழுதும் பதற்றம் சூழ்ந்திருந்ததால் புத்தகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. புரட்டிய பக்கங்களையே புரட்டிக்கொண்டிருந்தார். அடிக்கடி எதிரில் அமர்ந்திருந்த மேகலாவை பார்வையால் சுட்டெரித்துக்கொண்டிருந்தார்.

மேகலாவுக்கோ இந்த இக்கட்டான சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று புரியவில்லை.  வசந்த் வீடு வந்து சேர்ந்தால் என்ன நடக்குமோ என்று பயந்தாள். மாடியில் அமேலியா படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்தாள். நீண்ட நாட்கள் கழித்து பயமில்லாத நிம்மதியான உறக்கம். உறக்கத்தில் சில கனவுகள் தோன்றினாலும் அது அவளது உறக்கத்திற்கு எந்த தடையும் ஏற்படுத்தவில்லை.

நிலா மாடிக்கு சென்று அமேலியா இருந்த அறைக்குள் நுழைந்து அமேலியாவை எழுப்பினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அக்கா! அக்கா! எழும்புங்க"

அமேலியா மெல்ல கண் விழித்தாள். படுக்கையில் படுத்தபடியே நிலாவைப் பார்த்து புன்னகைத்தாள்.

"அம்மா, உங்களை குளிச்சிட்டு இந்த துணியை போட்டுக்க சொன்னாங்க"

நிலா என்ன கூறுகிறாள் என்று அமேலியாவிற்கு புரியவில்லை. திருதிருவென விழித்தாள்.

அறையை விட்டு ஓடி வந்த நிலா, "அம்மா, இந்த அக்காவுக்கு குளிக்க தெரியலைனு நினைக்கிறேன்"

நாராயணன், நிலாவையும் மேகாலாவையும் ஒரு முறை முறைத்துவிட்டு புத்தகத்தை பார்த்தார்.

'பாத்ரூம் கூட்டிட்டு போய் விடுடி' என்று சைகை முறையில் நிலாவை அதட்டினாள் மேகலா.

அமேலியாவை குளியலறைக்கு அழைத்து சென்று உள்ளே விட்டு வெளியே கதவை சாத்தினாள் நிலா.

சிறிது நேரத்தில் சேலையை அரைகுறையாக சுற்றியபடி குளியலறையை விட்டு வெளியே வந்த அமேலியா காலிடறி தரையில் விழுந்தாள்.

"அம்மா!" வென நிலா கத்தினாள்.

மேகலா மாடியில் வேகமாய் ஏறி அமேலியா இருக்கும் அறைக்கு சென்று கீழே கிடந்த அமேலியாவைத் தூக்கினாள். பின்பு, நிலாவைப் பார்த்து, "என் சுடிதார் எடுத்து குடுக்க வேண்டியது தான? உன்ன  யாருடி புடவை எடுத்து குடுக்க சொன்னது?" என்று கூறிய மேகலா, அலமாரியைத் திறந்து தன்னுடைய சுடிதார் ஒன்றை எடுத்து அமேலியாவிற்கு அணிவித்தாள்.

வசந்தின் கார் சப்தம் கேட்டது. தன் தலையைத் திருப்பி வீட்டினுள் வரும் காரை நோக்கிய நாராயணன், புத்தகத்தை மூடி வைத்து அமைதியாக இருந்தார்.

காரை நிறுத்திவிட்டு சில நிமிடங்களில் வசந்த் உள்ளே நுழைந்தான்.வீட்டில் நிலவிய அமைதி அவனுக்கு புதிதாய்த் தோன்றியது. தன் வீட்டில் இந்த அமைதியை என்றுமே கண்டதில்லை. நிலா அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பாள்.  பாட்டு சத்தம், மேகலா சமையல் செய்யும் சப்தம் கேட்கும். ஆனால், இன்றோ புயலுக்கு பின்னிருக்கும் அமைதியை நினைவு கூர்ந்தது அவ்விடம்.

"என்ன, வீடே அமைதியா இருக்கு?" என்று தன் அப்பாவிடம் கேட்டான். அவர் ஒன்றும் பேசவில்லை. பதில் பேச விரும்பாதவர் போல் மாடியைப் பார்த்தார். அந்த பார்வையின் அர்த்தம் வசந்திற்கு புரியவில்லை.

"அக்கா! நீ எங்கே இருக்க?" என்று மாடிப்படியை நோக்கி விரைந்தான். 

மேகலா மேல் அறையில் இருந்து வெளியே வந்தாள்.

"இன்னைக்கு என்ன வீடே புதுசா இருக்கு. என்ன நடக்குது இங்க?" என்று குழம்பியபடி கேட்டான்.

மேகலாவின் பின்னால் ஒளிந்தபடி வந்த அமேலியாவைப் பார்த்து வசந்த் திடுக்கிட்டான்.

"அக்கா என்ன பண்ணிட்டு இருக்க நீ? இந்த பொண்ண நீ இன்னும் வெளிய அனுப்பலையா. அப்பா என்ன இதெல்லாம்?" என்று கத்தினான்.

"என்ன ஏதும் கேக்காதப்பா. இது எல்லாம் உன் அக்காவோட முடிவு"

"வசந்த் நான் சொல்றது கொஞ்சம் கேளு"

"என்ன கேக்கணும்?"

அமேலியாவை அழைத்து வந்த நிகழ்வை தன் தந்தையிடம் கூறியது போல் வசந்த்திடமும் எடுத்துரைத்தாள் மேகலா.

வசந்த் கோபத்தின் எல்லைக்கே சென்றான். டைனிங் டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வேகமாய் குடித்தான்.

'தான் இங்கு இருப்பது இவருக்கு பிடிக்கவில்லை' என அமேலியா புரிந்துகொண்டாள்.

"ஓகே ஓகே  அவளோட நிலைமை எனக்கு நல்லா புரியுது. அவளை நீ காப்பாத்தணும்னு சொல்லுற. ஆனா இதுக்கான வழி என்ன? நீ அமெரிக்க ப்ரெசிடெண்ட்டா இருந்தா உனக்கு இருக்க அதிகாரம் வச்சி இவளை காப்பாத்தலாம். ஆனா நம்ம கையில என்ன அதிகாரம் இருக்கு?"

"இப்போதைக்கு இவ பாதுகாப்பா இருந்தா போதும். மத்தத அப்புறம் பாத்துக்கலாம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.