அவளின் அந்த காதலில் அவன் கரைந்து விடத்துடித்தவன், சட்டென அவளிடமிருந்து பார்வையைப் பிரித்தெடுத்தான் கஷ்டப்பட்டு….
அதிர்ந்து போனவள் அடுத்து எதுவும் பேசும் முன்பு, அங்கிருந்து எழுந்து கொண்டான் அவன்…
அவன் போன திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தாள் சதி இயலாமையுடன்….
தங்கையின் நிலை உணர்ந்து, அவளின் கரங்களைத் தட்டிக்கொடுத்தான் இஷான்…
பதிலுக்கு தமையனைப் பார்த்து புன்னகைத்தவளையே இமைக்காமல் பார்த்தான் இஷான்…
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” என்ற சத்தத்தில் தன்னுணர்வு பெற்ற இஷான், மணமேடையில் இருந்த ஜோடிகளைப் பார்க்கையில், அவன் மனதில் தங்கையும், ஜெய்யும் வந்து நின்றனர்…
திருமணம் நல்லபடியாக முடிந்து, அனைவரும் கோவிலுக்குப் புறப்பட்டனர் உடனேயே…
தட்சேஷ்வரும், அவரின் குடும்பத்தினரும் தங்களது காரில் ஏறி புறப்பட்டு, கோவிலுக்கு வந்து சேர்ந்தனர் இனிதே…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்...
காரிலிருந்து இறங்கி அங்கே கால் பதித்ததும், ஒரு அதிர்வை உணர்ந்தான் ஜெய்…
அந்த அதிர்வோடு அவன் விழிகள் சதியை தேட, தைஜூவிடம் பேசிக்கொண்டே காரிலிருந்து இறங்கி அவ்விடத்தில் கால் பதித்தவளுக்கு இதயம் துடித்தது வேகமாய்…
சட்டென ஜெய்யைத் தேடி அவனிடத்தில் தஞ்சம் புகுந்தது அவள் விழிகள்…
கோவிலின் உள்ளே முதல் அடி இருவரும் சேர்ந்தாற்போல் எடுத்து வைத்ததும், அவள் முகமெங்கும் பூரிப்பு உண்டாக, அவனுக்கும் உள்ளுக்குள் ஒரு வித உற்சாகம் குடிகொண்டது…
அதே மகிழ்வோடு அவன் அவளைப் பார்க்க, அவள் முகத்தில் சற்றே நாணம் வந்திருந்தது… அதை ரசித்தவனின் இதழ்களில் புன்னகை உதிக்க, அந்த புன்னகையை ஓரப்பார்வையில் ரசித்து தனக்குள் சேமித்து வைத்துக்கொண்டாள் அவள்…
அவர்களின் அந்த ரகசிய சம்பாஷனையை பிரம்மரிஷி அறிந்து கொண்டதும், அவர் முகத்தில் துக்கமும், இன்பமும் ஒரு சேர பிரதிபலித்தது…
திருமணஞ்சேரி….
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருந்தது அவ்விடம்…
“இந்த கோவிலில் என்ன சிறப்பு மாமா?...”
பிரசுதி பிரம்மரிஷியிடம் கேட்க,
தட்சேஷ்வரின் நண்பரோ, “இது சாதாரண கோவில் இல்லம்மா… என் பொண்ணு வாழ்க்கையில ஒளியேற்றி வைத்த கோவில்…” என்றார் வேகமாய்…
அவர் சொல்வது உண்மை என்பது போல் தலையசைத்தார் பிரம்மரிஷியும்…
“இந்த கோவில் பேரென்ன மாமா?... இங்க மூலவர் யார்?...”
அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பிரசுதி கேட்க, மருமகளுக்கு பதில் சொல்ல தயாரானார் பிரம்மரிஷி…
“அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் என்ற பெயர்கள் பெற்ற சிறப்பு ஸ்தலம் இது… இங்க மூலவர், உத்வாகநாதர் என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரேஸ்வரர் தான்…”
“கல்யாண சுந்தரரா?.. அந்த பேர் வந்ததுக்கு எதுவும் காரணம் இருக்கா மாமா?...”
“இங்கு தான் ஈசன் தனது சரிபாதியை திருமணம் செய்து கொண்டார் என்ற வரலாறு உண்டு… அதுமட்டும் இல்லாம, மூலஸ்தானத்தில் அவரோடு சேர்ந்திருக்கும் அம்பாளையும், இவரையும் வணங்குவோருக்கு கல்யாண பிரார்த்தம் நிச்சயம் உண்டு… அதனால் தான் அவருக்கு கல்யாண சுந்தரர்னு பேர் வந்துச்சு..”
“ஆமாம்மா… இங்க இருக்குற சுந்தரரையும், அம்பாளையும் வணங்கி வேண்டிக்கிட்ட பிறகுதான் என் பொண்ணுக்கு கல்யாணம் கை கூடி வந்துச்சு…”
தட்சேஷ்வரின் நண்பர், நெகிழ்ச்சியுடன் கூற,
“அம்பாள் பேரென்ன தாத்தா?...” என்றாள் தைஜூ ஆர்வத்துடன்…
“கோகிலாம்பாள்…” என பிரம்மரிஷி சொல்லும் தருவாயில், சதியின் இதழ்களும், ஜெய்யின் இதழ்களும் ஒருங்கே அந்த பெயரை சொன்னது...
“கல்யாணத்தடையை நீக்கிடும் வல்லமை இந்த ஸ்தலத்திற்கு உண்டுன்னு சொல்லுறீங்களா?…”
சிதம்பரம் தனது கேள்வியை பிரம்மரிஷியின் முன் வைக்க, அவரோ சிரித்தார்…
“எத்தனை இடர்பாடுகளால் கல்யாணம் தடைப்பட்டு போயிருந்தாலும் சரி, இங்கு வந்து மணக்கோலத்தில் இருக்கும் ஈசனுக்கும், அம்பாளுக்கும் மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வேண்டிக்கொண்டால், நிச்சயம் அந்த தடைகள் எல்லாம் உடைந்து போய், வெகு விரைவிலேயே திருமணப்பிரார்த்தம் பெறுவார்கள் என்பது ஆண்டாண்டு காலமா இருந்து வர்ற நம்பிக்கை மட்டுமல்லாது கண் கூடாக கண்ட உண்மையும் கூட…”
“அப்போ சுந்தரேஸ்வரரும், அம்பாளும் சேர்ந்து காட்சி தர்றாங்களா இந்த ஸ்தலத்துல?...”
காதம்பரி ஆச்சரியத்துடன் வினவ,
“ஆமாம்மா… எம்பெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தவாறு மணக்கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு…” என்றார் பிரம்மரிஷி…
“அப்போ திருமணத்திற்கு பேர் பெற்ற ஸ்தலமா மாமா இது?...”
சோமநாதன் தெரிந்து கொள்ளும் எண்ணத்துடன் கேட்க,
“நிச்சயமா சோமநாதா… திருமண வரத்தைத் தருவதற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோயில் இது… ஒருதடவை இங்கு வந்து ஈசனை வழிபட்டால் போதும், தடைகள் அனைத்தும் நீங்கப்பெற்று திருமணம் உடனே கைகூடிவிடும் என்பது ஐதீகம்… இங்கே திருமணத்திற்காக செய்யப்படும் சிறப்பு அர்ச்சனை வெகு பிரசித்தி பெற்றது…”