“அது என்ன அர்ச்சனை தாத்தா?....”
இஷான் கண்களில் ஆச்சரியத்துடன் பிரம்மரிஷியிடம் கேட்டதும்,
“கல்யாண அர்ச்சனை…” என்றார் அவர் சதியையும், ஜெய்யையும் பார்த்துக்கொண்டே…
“கல்யாண அர்ச்சனையா?... அப்படின்னா என்ன தாத்தா?... என்ன செய்வாங்க அந்த அர்ச்சனையில?...”
தைஜூ தன்மையாக வினவியதும், அவளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் பிரம்மரிஷி…
மஞ்சள், குங்குமம், இரண்டு மாலை, தேங்காய், கற்பூரம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், மற்றும் கற்கண்டு என அர்ச்சனைக்குரிய பொருட்கள் அனைத்தும் வாங்கி வந்து, கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் நாம் காண்பது இங்கிருக்கும் செல்வ கணபதியை தான்…
அவரை வணங்கி தொழுதுவிட்டு, அடுத்து சிவபெருமான் உத்வாக நாதரை வணங்க வேண்டும்… அதன் பின் பதின்மூன்று வயது பெண்ணாக நாணியபடி இருக்கும் கோகிலாம்பாளை தரிசித்திடல் வேண்டும்… தலையைக்குனிந்து நாணியபடி இருக்கும் அவரது இக்கோலம், திருமணத்திற்கு முந்தையை தோற்றமாகும்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அதன் பின்னரே கல்யாண சுந்தரரை தரிசிக்க வேண்டும்… இங்கு, சுந்தரரின் வலப்பக்கத்தில் தரையைப் பார்த்த வண்ணம் அவரின் கைப்பிடித்தபடி, காட்சி தருகிறார் கோகிலாம்பாள், தனது கணவரான கல்யாண சுந்தரரோடு, மிக அழகான எங்கும் காணக்கிடைத்திடாத திருமணக்கோலத்தில்…
கல்யாண சுந்தரர் சன்னதியின் முன்னே இருக்கும் பெரிய மண்டபத்தில், கல்யாண வரம் வேண்டிவந்தவர்கள் ஒரு வரிசையிலும், இங்கே வந்து திருமணப்பிரார்த்தம் வேண்டி, திருமணம் நடக்கப்பெற்ற தம்பதிகள் ஒரு வரிசையிலும் அமர வேண்டும்…
அதை வாங்கி வந்து அர்ச்சகரிடம் கொடுத்ததும், அவர் சுந்தரருக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பிப்பார்…
பக்தர்களிடம் வாங்கி வந்த மாலையை அம்பாளுக்கும், சுந்தரருக்கும் சாற்றி அர்ச்சனை செய்யும் அர்ச்சகர், பின், அதை எடுத்து வந்து பக்தர்களின் கழுத்தில் அணிவிப்பார்…
புதிதாக திருமணம் ஆன தம்பதியரின் கைகளில், ஆளுக்கொரு மாலையினை தந்து, தம்பதிகளுக்குள் அந்த மாலையை மாற்றிக்கொள்ள சொல்லுவார்…
பின் அர்ச்சனை செய்து கொடுக்கும் எலுமிச்சம் பழத்தினை மறுநாள் காலையில் சாறு பிழிந்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்….
அர்ச்சகர் அர்ச்சனை செய்து கொடுத்த மாலையினை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்…
திருமணம் கைகூடியதும், தம்பதி சகிதமாக, அந்த மாலையினை திரும்ப கொண்டு வந்து, கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்ய வேண்டும்…
வேண்டுதலை இவ்விதமே இங்கு நிறைவேற்றுகிறார்கள் இன்றளவும்…
பிரம்மரிஷி நிதானமாக தெளிவாக கூற, கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு வியப்பும், கல்யாண சுந்தரரை அம்பாளோடு சேர்த்து தரிசிக்கும் ஆவலும் அதிகரித்தது…
“நினைக்கவே ஆச்சரியமா இருக்கு மாமா… கல்யாணம் கைகூடாம தவிச்சுப் போய் நிக்குறவங்களுக்கு நிஜமாவே இந்த கோவில் ஒரு வரப்பிரசாதம் தான்…”
பிரசுதி மனமாற கூற,
“கல்யாணத்துக்கு மட்டுமில்லம்மா, ராகு தோஷ நிவர்த்திக்கும் இந்த தலம் சிறப்பானது… குழந்தை வரம் வேண்டுபவர்களும் இத்தலத்திற்கு அமாவாசை அன்று வந்து, சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி, ராகுபகவானுக்கு பால் பொங்கல் நிவேதனமாக படைத்து பூஜை செய்து சாப்பிட்டால், கண்டிப்பாக குழந்தை வரம் வாய்க்கப்பெறுவர்… ராகு பகவான் முழு மனித உருவில் கவச குண்டலத்தோடு இங்கு காட்சியளிப்பதனால் மிகவும் விசேஷம்….” என்றார் பிரம்மரிஷி புன்னகையுடன்…
“இன்னும் இந்த கோவிலுக்கு எதாவது சிறப்பு இருக்கா தாத்தா?...”
தைஜூ விழி விரிய கேட்டாள் அவரிடம்…
“இருக்கும்மா… இது நித்திய கல்யாண ஷேத்திரம்… ராகு தோஷ நிவர்த்தி ஸ்தலம்…. இத்தலத்தில் தான் மன்மதனின் சாபம் நீங்கப்பெற்றது… சிவபெருமானின் தியானத்தை கலைக்கும்பொருட்டு மன்மதன் தன் கணைகளை அவரின் மேல் விட, அதனால் கோபம் கொண்ட ஈசன், தன் நெற்றிக்கண் தீக்கு அவனை இலக்காக்க, தன் தவறை உணர்ந்து திருந்தி அவன் ஈசனை துதிக்க, மனமிரங்கி அவனுக்கு இத்தலத்தில் தான் மீண்டும் சாப விமோஷனம் கொடுத்தருளினார் எல்லாம் வல்ல ஈஸ்வரன்…”
பிரம்மரிஷி ஒரு நிறைவுடன் சொல்லி முடித்ததும், அனைவரும் முதலில் செல்வகணபதியையும், உத்வாக நாதரையும், அதன் பின் மூல ஸ்தானத்தில் திருமணத்திற்கு முந்தைய கோலத்தில் வெட்கப்பட்டு காட்சியளிக்கும் கோகிலாம்பாளையும், தம்பதி சகிதமாக திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த கல்யாண சுந்த்ரரையும், அம்பிகை கோகிலாம்பாளையும் சேவித்தனர் மனமாற…
தட்சேஷ்வரரின் நண்பர், தனது மகளையும், மருமகனையும், அந்த மண்டபத்தில் அமரவைத்து, பூஜிக்க சொன்னார்… அதன் படியே இருவரும் பூஜித்து, இறைவனின் சந்நிதிக்கு முன்பாக மாலை மாற்றி வேண்டுதலை நிறைவேற்றினார்கள்…
வழிபட்டு முடித்து விட்டு, அனைவரும் கோவிலுக்கு வெளியே வர, அங்கே அவர்களுக்காக காத்திருந்தார் தட்சேஷ்வர்…