(Reading time: 15 - 30 minutes)

அமேலியா - 11 - சிவாஜிதாசன்

Ameliya

னைவரின் முகத்திலும் அதிர்ச்சி நிரம்பி கூடவே பயமும் தொற்றிக்கொண்டது. எல்லோரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பயத்தோடு பார்த்துக்கொண்டனர். பின்னர், அனைவரின் கண்களும் ஊஞ்சலில் மெய்மறந்து ஆடிக்கொண்டிருந்த அமேலியாவை நோக்கின.

"எனக்கு இது சரியா படலை. எதோ தப்பு நடக்குது" என நாராயணன் அதிர்ச்சியோடு கூறினார்.

மேகலாவும் வசந்தும் ஜானை நோக்கினர்.

"நீங்க என்ன, என்னை குற்றவாளி போல பாக்குறீங்க? தெரியாத்தனமா பர்ஸ் தொலைச்சிட்டேன். அத தவிர வேற எந்த தப்பும் பண்ணல".

ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த அமேலியா சகஜ நிலைக்கு வந்தாள். சிறு வயதில், பள்ளியில் ஊஞ்சல் ஆடியது மனதில் நிழலாடியது. ஒருவர் ஒரு நிமிடத்திற்கு மேல் ஊஞ்சலில் ஆட முடியாது. மற்ற பிள்ளைகளுக்கு வழி விடவேண்டும், இது போல் சுதந்திரமாக தன்னையே மறந்து ஊஞ்சலில் ஆடியது இதுவே முதல் முறை. கவலைகள் யாவும் கரைந்துவிட்டதைப் போல் அவள் இதழில் புன்னகை அரும்பியது.

மெல்ல தன் தலையைத் திருப்பியவள் தன்னையே நோக்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை பார்த்தாள். அவளது புன்னகை மறைந்தது. 'எதற்காக அவர்கள் தன்னை மிரட்சியோடும் கோபத்தோடும் பார்க்கிறார்கள்? ஒருவேளை, இந்த ஊஞ்சலில் ஆடியது அவர்களுக்குப் பிடிக்கவில்லையோ?' என்று தன்னையே கேட்டுக்கொண்டாள். அனுமதி இன்றி நாம் ஊஞ்சலில் ஆடியது தவறு தான் என உணர்ந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

தலையைத்  தாழ்த்தி உருதுவில் மன்னிப்பு கேட்டபடி அவர்களை நெருங்கினாள். அவர்கள் அனைவரும் பின்னால் நகர்ந்தனர். அவள் அதிர்ச்சி அடைந்தாள். எதற்காக அவர்கள் தன்னைக் கண்டு நடுங்குகிறார்கள் என்று குழம்பினாள்.

"யார் நீ?" .என்றான் வசந்த்.

அமேலியா அதிர்ச்சியோடு நின்றாள்.

"நீ தீவிரவாதியானு எங்களுக்கு சந்தேகமா இருக்கு"

"நீங்க என்ன சொல்லுறிங்கன்னு எனக்கு புரியல. ஏன் என்னை கண்டு பயப்படுறீங்க?" என்றாள் அமேலியா உருதுவில்.

"ஓ! அப்படியா? சரி சரி புரியுது. நீங்க அமைதியா இருங்க" என்றான் ஜான் பயந்தபடி.

"என்ன புரியுது உனக்கு?" என்றான் வசந்த்.

"புரியலைனு சொன்னா கோபத்துல அவ நம்மள போட்டு தள்ளிட்டா என்ன ஆகுறது?"

"துப்பாக்கி தான் நம்ம கையில இருக்கே"

"அவ இன்னொரு துப்பாக்கிய ஒளிச்சு வச்சிருந்தா, அவசரப்பட்டு என் உயிரை எல்லாம் விட முடியாது.  நான் சாதிக்கணும்னு இருக்கேன். என்ன கூட்டிட்டு வந்து சாகடிக்க பாக்குறீங்களே"

அமேலியா கீழே கிடந்த துப்பாக்கியைக் கண்டாள். அவர்கள் பயப்படுவதற்கான காரணம் புரிந்தது. அவளையறியாமல் அவள் இதழில் புன்முறுவல் உதிர்ந்தது.

வாசலில் நின்ற அவர்களைக் கடந்து உள்ளே வேகமாய் ஓடினாள்.

"எங்கே ஓடுறா இவ?" என்று கேட்டார் நாராயணன்.

"உள்ள ஏதாச்சும் பெரிய துப்பாக்கி வச்சிருப்பானு நினைக்கிறேன். எடுத்துட்டு வரதுக்குள்ள நான் ஓடிடட்டுமா?" என்றான் ஜான்.

அனைவரும் ஜானை முறைத்தனர்.

"சரி, உங்க கூடவே சேர்ந்து சாகுறேன், எல்லோருக்கும் சந்தோசமா?".

உள்ளே சென்ற அமேலியா பெரிய தாளை எடுத்து வந்து அவர்கள் முன் தரையில் அமர்ந்து படம் வரையத் துவங்கினாள். அவ்வப்போது அவளது கண்கள் சுற்றி இருந்தவர்களை கூர்ந்து நோக்கின.

"இவ ஒருத்தி எல்லாத்துக்கும் படம் வரையுறா, பெரிய பிக்காஸோனு நினைப்பு" என்று ஜான் முணுமுணுத்தான்.

அமேலியா ஓவியத்தை வெகு வேகமாய் வரைந்தாள். அவளின் ஓவியத் திறமையைக் கண்டு, அவளை வெறுத்த நாராயணனே அதிசயித்தார்.

"வரும் வழியில் போதை பெண்ணொருத்தி தன்னைத்தானே சுட்டுக்கொள்ள முயன்றாள். அவளைத் தடுத்து நிறுத்தினேன். அவளுடன் காரில் சென்றேன். திடீரென, அவள் என்னைக் கண்டு கோபமடைந்தாள். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அவள் என்னை சுட முயன்றாள். கார் ஒரு மரத்தில் மோதியது. அவள் மயக்கமடைந்தாள். அவளது துப்பாக்கி கீழே கிடந்தது. மீண்டும் அவள் தற்கொலைக்கு முயல்வாளோ என்ற பயத்தில் அந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டேன். வழியில் எங்காவது எறிந்துவிடலாமென்று எண்ணினேன். ஆனால், மறந்துவிட்டேன்"  என தான் வார்த்தைகளால் கூற எண்ணியதை தன் ஓவியத்தில் தீட்டினாள் அமேலியா.

அவள் என்ன கூற விரும்பினாள் என்பது அனைவருக்கும் புரிந்தது.

"அந்த பொண்ணு யாரா இருக்கும்?" என்று கேட்டான் ஜான்

"ஜெஸிகாவா தான் இருக்கும். உன் தொந்தரவு தாங்கமுடியலை. தற்கொலை பண்ணிக்க கார்ல போயிட்டு இருக்கேனு சொன்னா" என்றான் வசந்த்.

"இது எல்லாம் தலைல மூளையே இல்லாதவன் கிட்ட சொல்லு நம்புவான்"

"எனக்கு இவ மேல இன்னும் சந்தேகமா இருக்கு" என்று கூறி முன்னால் சென்று அமேலியாவின் கைகளை திடீரென பற்றினான் வசந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.