(Reading time: 15 - 30 minutes)

ள்ளே, அமேலியா கடவுள் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு படத்தையும் கண்டு அதிசயித்தாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதே? ஒரு முகம் யானையை ஒத்துள்ளது,  ஒரு உருவம் நான்கைந்து கைகளோடு அதுவும் பயங்கர ஆயுதங்களைத் தாங்கி கோரமாக நின்று கொண்டிருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு மற்ற கடவுள்களையும் நோக்கினாள். இவர்கள் ரசனை எல்லாம் வித்தியாசமாய் இருக்கிறதே என்று தனக்குள்ளாகவே புன்னகையை உதிர்த்தாள்.

"மேகலா!" என நாராயணன் வீடே அதிரும்படி கத்தினார்.

அமேலியா பதறி நாராயணனை பார்த்தாள்.

சமையல் அறையிலிருந்து ஓடி வந்த மேகலா அமேலியாவையும் நாராயணனையும் பூஜை அறையில் கண்டதும் நிலைமையைப்  புரிந்துகொண்டாள். பூஜை அறைக்குள் சென்று அமேலியாவைக் கை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள். எதற்கு அவர்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என அமேலியாவிற்கு புரியவில்லை.

"நீ அங்க எல்லாம் போகக்கூடாது. அப்பாவுக்கு கோவம் வரும்" என்று சைகையில் கூறினாள் மேகலா.

அமேலியா, சரியென தலையை ஆட்டினாள்.

அந்நேரத்தில் சமையலறையில் இருந்து குக்கர் விசில் சத்தம் வரவே மேகலா அங்கே ஓடினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

நாராயணன் அமேலியாவை முறைத்துவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தார்.

அமேலியாவின் முகத்தில் சோகம் படர்ந்து தன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். இந்த வீட்டில் எங்கு அமைதி இருக்கும் என அவளது மனம் நாட, கால்கள் நடந்து சென்றன. மாடிப்படி ஏறினாள், ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள்.                              

எந்த அறையில் தனக்கான தனிமை, நிம்மதி கிடைக்குமென ஏங்கினாள். ஓர் அறையைத் திறந்து பார்த்தபோது, நிலா படுக்கையில் அமர்ந்துகொண்டு நோட்டு புத்தகத்தில் எதையோ கிறுக்கிக்கொண்டிருப்பதை பார்த்தாள்.

தன்னருகே ஏதோ உருவம் நெருங்கியதை உணர்ந்து திடுக்கிட்டு தலையை நிமிர்த்திய நிலா அமேலியாவைக் கண்டதும் மகிழ்ந்தாள்.

"நீங்கதானா அக்கா? என் மாமான்னு பயந்துட்டேன். அவருக்கு நான் இங்க வரது சுத்தமா பிடிக்காது. அவருக்கு பிடிக்கலைனாலும் நான் இங்க வருவேன்" என்று சிரித்தாள்.

அவள் கூறியது எதுவும் புரியவில்லையென்றாலும் அவளது குறும்பான பாவனைகள் அமேலியாவை ஈர்த்தன. நிலா என்ன எழுதுகிறாள் என்று பார்த்தாள். அவள்  எழுதவில்லை படம் வரைந்துகொண்டிருந்தாள். அது என்ன படம் என்று அமேலியாவால் ஊகிக்க முடியவில்லை. இதுவரை, தான் பார்த்ததிலேயே மிக மிக மோசமான சித்திரம் எனறால் அது நிலா வரையும் படத்தை சொல்லலாம் என எண்ணிய அமேலியா சிரித்தாள்.

"நான் வரையறத பார்த்து எல்லாரும் சிரிக்கிறாங்கன்னா நீங்களுமா அக்கா?"  என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள் நிலா.

நிலாவின் வேதனையை உணர்ந்த அமேலியா, அவளைத் தன் மடி மீது அமர வைத்துக்கொண்டாள். அப்பொழுதும் நிலா சோகமாகவே இருந்தாள்.

"இன்னைக்கு லீவு போட்டுட்டேன். படமும் வரையல. அந்த பிரவுன் கலர் முடி டீச்சர் எல்லா பசங்க முன்னாடியும் என்னை கழுதைனு திட்டும். நான் என்ன செய்ய போறேன்?"

அமேலியா நிலாவிடமிருந்து தாளை வாங்கி நிலா வரைய வேண்டிய ஓவியத்தை வரைந்தாள்.படத்தை வரைந்து முடிக்க  அமேலியாவிற்கு மூன்று நிமிடம் கூட எடுக்காதது நிலாவிற்கு ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது.

"ஐயோ! அக்கா யு ஆர் சோ ஸ்வீட்" என்று அமேலியாவின் கன்னத்தில் முத்தம் பதித்த நிலா, "அந்த மோசமான டீச்சர் கிட்ட இருந்து நான் கழுதைன்னு திட்டு வாங்கமாட்டேன்" என்று மீண்டும் அமேலியாவின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

அமேலியாவும் புன்னகையுடன் நிலாவுக்கு முத்தம் கொடுத்து,  இன்னொரு தாளை எடுத்து நிலாவை மார்பில் அணைத்தபடி படம் வரைந்தாள். நிலாவையும் தன் முகத்தையும் மனக்கண்ணில் கொண்டுவந்து அவர்கள் அமர்ந்திருந்ததை போலவே அழகான ஓவியம் வரைந்தாள்.

நிலாவிற்கு சந்தோசம் தாளமுடியவில்லை. மகிழ்ச்சியில் எகிறி எகிறி குதித்தாள். "நான் இவ்ளோ அழகா இருக்கேனா? தினமும் கண்ணாடி ல பாக்குறேன். அப்போ கூட தோணல. ஆனா இந்த ட்ராயிங்ல நான் ரொம்ப அழகா இருக்கேன்"

அங்கும் இங்கும் துள்ளியபடி ஓடிய நிலா, வசந்தின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு வந்து அமேலியாவிடம் கொடுத்தாள்.

"அக்கா, மாமாவை வரஞ்சி குடுங்க. நான் தான் அவரை வரஞ்சேன்னு சொல்லி ஏமாத்தபோறேன்"

அமேலியாவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. தன் கையைப் பிடித்து முறுக்கிய வசந்தைக் காணவே அவளுக்கு வெறுப்பாய் இருந்தது. 'எதற்கு என்னை அவ்வாறு சித்திரவதை செய்தான் இந்த மூடன், இரக்கமில்லாதவன்' என மனத்திற்குள்ளாகவே அவனைத் திட்டினாள்.

"சீக்கிரம் வரஞ்சி குடு அக்கா" என்று அடம்பிடித்தாள் நிலா.

"இப்பொழுது வேண்டாம், வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம்" என்று சைகை மூலம் சொன்னாள் அமேலியா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.