(Reading time: 14 - 28 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 04 - வத்ஸலா

Vivek Srinivasan

மும்பை விமான தளத்தை நெருங்கிக்கொண்டிருந்தது விமானம். கீழே விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரை இறங்குவதற்கான அனுமதி கிடைத்தது. மேகத்திரைகளின் வழியே ஓடுதளம் கண்ணில்பட்டது.

'டூ தௌசண்ட்..' ..

'ஒன் தௌசண்ட்'  ....

'ஃபைவ் ஹண்ட்ரட்..' விமானத்துக்கும் தரைக்குமான தூரத்தை அறிவிக்கும் ஹரிணியின் குரல் அவனுக்கு கேட்டுக்கொண்டிருக்க தரை இறங்கிக்கொண்டிருந்தான் விவேக்.

மும்பை விமான நிலையத்துடன் அவனது ஒரு இனிமையான நினைவும் கலந்திருக்கிறது. அவனை பொறுத்தவரை மறக்கவே முடியாத நிமிடங்கள் அவை.

மறுபடியும் அப்படி ஒரு நிகழ்வு வரக்கூடிய சாத்தியம் இருக்கிறதா என்ன??? அழுத்தமான ஒரு மூச்சு மட்டுமே எழுந்தது விவேக்கிடம். அவன் மடியில் இன்னமும் ரோஜாப்பூக்கள் மணம் வீசிக்கொண்டிருந்தன அந்த நிகழ்வு மறுபடியும் வராது என்பதற்கு அடையாளமாக!!!

'ஹண்ட்ரட்...'....................... ஃபிஃப்டி ..............டென்..............தரை இறங்கியது விமானம்.!!!

சில நிமிடங்கள் கடக்க, விமானத்துக்குள் செய்ய வேண்டிய நடைமுறைகளை முடித்துவிட்டு கையில் அந்த ரோஜாப்பூக்களையும் எடுத்துக்கொண்டு, ஹரிணியை திரும்பிக்கூட பார்க்காமல்   இந்தியாவின் மிக அழகான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையத்துக்குள் இறங்கி நடந்தான் விவேக்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

'ஹேய்....உனக்குத்தான் போன் பண்ணனும்னு நினைச்சேன் டக்குன்னு நேர்லே வந்து நிக்கற...' சிரித்தாள் அங்கே எதிர்ப்பட்ட ராதிகா.

இவளுமே ஒரு விமானி. அவள் இவனுடைய உயிருக்கு உயிரான தோழி எல்லாம் இல்லை என்றாலும்.......

தலையை பிடித்துக்கொண்டு அமரும் நேரத்தில் 'என்னப்பா... என்னாச்சு தலை வலிக்குதா??? காபி வேணுமா..' என கேட்டுக்கொள்ளும் அளவு நட்பு இருவருக்கும் இடையில் உண்டு.

'என்ன பைலட் மேடம் நலமா???  என்றான் மலர்ந்த முகத்துடன்.

'எனகென்ன ஜம்முனு இருக்கேன்...' என்றாள் ராதிகா.

'ஸோ.. வேர் யூ ஆர் ஆஃப் டூ???' கேட்டான் விவேக்.

'கொல்கத்தா .. நீ ..'

'அடுத்து... வைசாக்...' மகிழ்வுடன் புன்னகைதான் அவன். '

மும்பை - விசாகபட்டினம்!!! இந்த வழியில் பயணம்!!! அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமான பயணம் அது!!!

'பூ யாருக்கு??? அழகா இருக்கு..' அவன் கையில் இருந்த ரோஜப்பூக்களை பார்த்தபடியே கேட்டாள் அவள்.

'யாருக்கும் இல்லை. நான் யாருக்கும் ரோஜாப்பூ கொடுக்கறதில்லை ராதிகா...' பேசிக்கொண்டே அவளுடன் நடந்தான் விவேக்.

'அப்புறம் இதை எதுக்கு எடுத்திட்டு வந்தே???'

'இது எனக்கு ஒரு வார்னிங் மாதிரி கிடைச்சது. எதுகிட்டேயும் யார்கிட்டேயும் தோத்து போயிடாதேடா ராஜா... அப்படின்னு ஒரு மேலிருந்து ஒரு வார்னிங்...' அழகான சிரிப்பு பூத்தது அவன் இதழ்களில்.

'என்னது... புரியலை.. '

'புரிய வேண்டாம் விட்டுடு .. இது விவேக்ஸ் புக் ஆஃப் சீக்ரெட்ஸ்..' கண் சிமிட்டினான் விவேக்.

அவன் மனதில் இருக்கும் வேதனைகள் முழுவதுமாக தெரியாவிட்டாலும், அதன் அடிப்படை புரியும் அவளுக்கு. அதையும் மீறி அவன் உற்சாகமாக வளைய வருவது அவளுக்கு வியப்பையே கொடுக்கும்.

'ஹேய்... புக்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது. இன்னைக்கு 'ஹாப்பி ஃப்ளையிங்க்' பார்த்தியா... உன்னோட இன்டர்வியூ வந்திடுச்சே..' என்றாள் உற்சாகமாக.

'ஹாப்பி ஃப்ளையிங்க்' அவர்களது விமான நிறுவனத்தின் பிரத்தியேக பத்திரிக்கை!!! அது பொதுவாக விமானத்தில் வரும் எல்லா பயணிகளுக்கும் அவர்கள் படிப்பதற்கு கொடுக்கப்படும் ஒரு பத்திரிக்கை!!! அதில் அவனது சிறிய பேட்டி வந்திருந்தது.. அந்த பேட்டி வருவதற்கு முக்கிய காரணம் ராதிகா.

'அப்படியா??? வெரி குட்...'என்றான் இதழ்கள் புன்னைகையில் விரிய.

இதுக்கும் உன் ட்ரேட் மார்க் ஸ்மைல்தானா.....  இந்தா படிச்சு பார்த்திட்டு சொல்லு ... நான் கிளம்பறேன் டைம் ஆச்சு....' கையில் இருந்த பத்திரிக்கையை அவனிடம் நீட்டிவிட்டு விடைபெற்றாள் அவள்.

செயற்கை அருவியும், வண்ண வண்ண ஓவியங்களும், அழகான சிலைகளும், என ஒரு அரண்மனை போல் காட்சி அளித்துக்கொண்டிருந்தது மும்பை விமான நிலையம்.

அங்கே இருந்த அந்த தென் இந்திய உணவு விடுதியில் மதிய உணவை வாங்கிக்கொண்டு அங்கே ஓரமாக இருந்த ஒரு மேஜையில் சென்று அமர்ந்தான் விவேக்.

முதலாவதாக அந்த தட்டில் இருந்த பாயசத்தை எடுத்து சுவைத்தவனுக்கு அப்பாவின் ஞாபகம்.

'தட்டில் வேறே எவ்வளவு விஷயம் இருந்தாலும் முதல்லே ஸ்வீட்ட்டைதான் எடுப்பான் என் பையன். ஸ்வீட் பாய்..' அவன் சாப்பிடும் போதெல்லாம் சொல்வார் அப்பா. அவனை பார்க்கும் போதெல்லாம் அவர் கண்கள் பெருமையில் மின்னத்தான் செய்யும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.