(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 03 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

நான்கு  அடுக்குகள் கொண்ட அபார்ட்மெண்ட் வாயிலின் முன் முதலில் ஹை ஸ்பீடில் புல்லட் வந்து நிற்க, பின்னாடி அதைத் துரத்தியபடியே ஸ்கூட்டி வந்து நின்றது.  இந்த சேஸிங் ஸீன் எங்களுக்கு சகஜம் என்பதுபோல் அங்கிருந்தவர்கள் யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் சென்றார்கள்.  அங்கிருந்த வாண்டு ஒன்று, “என்ன அண்ணா, இன்னைக்கும் அக்காக்கிட்ட உங்க புல்லட்டை பறிக்கொடுத்துட்டீங்களா...”,என்று படு நக்கலாக கேட்க அதில் அவனின் கோவம் இன்னும் அதிகரித்தது.  அவன் ஸ்கூட்டியை ஸ்டான்ட் இட்டு நிறுத்தி விடுவிடுவென்று லிஃப்ட் நோக்கி நடக்க, அவனை முறைத்தபடியே புல்லட் சுந்தரி இரண்டு வண்டியையும் அதனுடைய இடத்தில்  நிறுத்தி பூட்டிவிட்டு அவனைத் தொடர்ந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்தபடியே லிஃப்டிற்குள் பயணித்து நான்காம் தளத்தில் இருந்த வீட்டின் முன் நின்று காலிங் பெல்லை மாற்றி மாற்றி அடித்தார்கள்.

‘யார் இது கொஞ்சம் கூட பொறுமையே இல்லாம இத்தனை தடவை  பெல் அடிக்கறது’, என்று திட்டியபடியே கதவைத் திறந்தவர் இருவரின் முகங்களையும் பார்த்து ஒன்றும் சொல்லாமல் உள்ளே செல்ல வழிவிட்டு நின்றார்.

சுந்தரனும், சுந்தரியும் புசு புசுவென்று மூச்சுவிட்டபடியே முறைத்தலை நிறுத்தாமல் அங்கிருந்த ஸோஃபாவில் சென்று அமர்ந்தார்கள்.  இருவரின் முகத்தைப் பார்த்தே எப்பவும் போல ரெண்டுக்கும் சண்டை போல, என்று நினைத்து உள்ளே சென்று நீர் எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்து அவர்கள் முன்னே அமர்ந்தார்.   யார் இப்படி விடாமல் பெல் அடிப்பது என்று எதிர் வீட்டில் இருந்து எட்டிப் பார்த்த பெண்மணி இருவர் முகங்களையும் பார்த்தவுடனேயே வீட்டை பூட்டிக் கொண்டு லிஃப்ட் நோக்கி சென்று விட்டார்..... அவருக்குத் தெரியும் அங்கிருந்தால் என்ன நடக்கும் என்று....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ஓகே பஞ்சாயத்து ஆரம்பிப்பதற்கு முன்னால் சுந்தரி, சுந்தரன் இன்ட்ரோ முடிச்சுரலாம்.....

கல்லூரியில் ஒன்றாகப் படித்த சுந்தரமும்,மகேஷும் கேம்பஸில் ஒரே அலுவலகத்தில் தேர்வாகி  கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நண்பர்களாக இருப்பவர்கள்.... அவர்களின் மனைவிகளும் இந்த நட்பை பிரிக்காமல்  ஒரே அபார்ட்மென்ட்டில் எதிர் எதிர் வீட்டை  வாங்கி குடித்தனம் வந்து  மேலும் அந்த நட்பு இறுக வழி செய்தனர்... சுந்தரத்தின் மனைவி சாந்தி சாரங்கபாணியையும், மகேஷின் மனைவி ரூபா நம்ம ஹீரோயின் பாரதியையும் குஷி படம் போல் ஒரே நேரத்தில்  பெற்றெடுத்தனர்..... ஒரே ஒரு வித்யாசம்.... அந்தப் படத்தில் விஜய் ஜோதிகா கை டச் ஆகும்.... இவர்களுக்கு கால் டச் ஆகியது.... இருவரும் பிறந்த நாளில் காலால் உதைத்து ஆரம்பித்த சண்டை இன்று வரை அமோகமாகத் தொடர்கிறது...... கால் மட்டும் அல்ல வாயும் மிகப் பெரியது என்பதால் இருவரையும் லா படிக்க வைத்தனர் அவர்களின் பெற்றோர்.....  இப்பொழுது நகரின் புகழ்பெற்ற வக்கீலின் கீழ் இருவரும் ப்ராக்டிஸ் செய்து வருகிறார்கள்.....

இருவருக்கும் சமூகப் பொறுப்பு மிக அதிகம்.... தவறு கண்டால் பொங்கி எழுந்து விடுவார்கள்.... அதிலும் பாரதி சாரங்கனை விட  மோசம்.... வாய்க்கு முன் அவளுக்கு கைதான் பேசும்... அதனாலேயே பாரதி எங்கு சென்றாலும் சாரங்கனும் கூட செல்வான்.... சிறிது நேரத்திற்கு முன் எதிர் ஃபிளாட்டில் இருந்து எஸ்ஸானது சாரங்கனின் தாய்....  ஓகே ரூபா மேடம் சொம்போட வந்துட்டாங்க... பஞ்சாயத்தை கவனிக்கலாம் வாங்க....

“தண்ணியைக் குடிச்சு முடிச்சீங்களா.... பேசலாமா...”

“தேங்க்ஸ் அண்ட் சாரிம்மா ரொம்ப டென்ஷனா இருந்துதா அதுதான் அத்தனை வாட்டி பெல் அடிச்சுட்டேன்....”

“அது பரவாயில்லை சாரங்கா.....  என்ன ரெண்டு பெரும் வீட்டுக்குள்ள வரும்போதே உர்ருன்னு வர்றீங்க...... திரும்பவும் சண்டையா....”

“அம்மா இவ என்ன பண்ணினான்னு கேளுங்க.....”

“சண்டை அப்படின்னாலே அவதானே ஆரம்பிச்சு இருக்கணும்.... அதனால அவளைக் கேக்க வேண்டாம் நீயே சொல்லு.....”

“அம்மா இதெல்லாம் அநியாயம்.... அது என்ன நான்தான் சண்டைய ஆரம்பிப்பேனா.... ஏன் இந்த சப்பாணி சண்டையே போடாத சமாதானப் புறாவா...”

“அம்மா இவளை மொதல்ல சப்பாணி சொல்றத நிறுத்த சொல்லுங்க..... எவ்ளோ அழகான பேரு சாரங்கபாணி அதை எப்படி கெடுக்கறா பாருங்க......”

“Mr. சப்பாணி மூணாங்கிளாஸ்ல நீ எங்கிட்ட lemon and spoon ரேஸ்ல தோத்ததுலேர்ந்து உன்னை அப்படித்தானே கூப்பிடறேன்.... புதுசா என்னவோ சிலிர்த்துக்கற.....”

“இனிமே அவ உன்னை சப்பாணின்னு சொன்னா சப்புன்னு அறைஞ்சுடு சாரங்கா....”

“ஏம்மா உங்களுக்கு என்ன பதினாறு வயதினிலே மயிலுன்னு நினைப்பா..... வசனம்லாம் காப்பி பேஸ்ட் பண்றீங்க......”

“ஏய் வேணாம்.... தேவை இல்லாம என் கோவத்தை கிளப்பாத...... அம்மா இவ என்ன பண்ணினாத் தெரியுமா.... இன்னைக்கு சீனியர் ஒரு கேஸ் விஷயமா சில டீடைல்ஸ் கேட்டு இருந்தார்.... அதுக்காக நான் நோட்ஸ் எடுத்துட்டு இருந்தேன்.... நான் அதுல ஆழ்ந்து  இருக்கும்போது வர்தா புயல் வேகத்துல வந்து என் சட்டை பாக்கெட்டில இருந்த சாவியைப் எடுத்துட்டு போய்ட்டா.... அவ வந்து இழுத்த வேகத்துல பாருங்க சட்டை பாக்கெட் எப்படி கிழிஞ்சு போச்சு......”, மிகப் பரிதாபமாக சாரங்கன் சொல்ல, நம் ஹீரோயின் அம்மா அவளை முடிந்த அளவு முறைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.