(Reading time: 18 - 35 minutes)

09. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

திருமண பத்திரிக்கைகள் சொன்ன தேதிக்கு முன்னதாகவே தயாராகி வந்திருந்தது... அன்று அன்னையோடு சேர்ந்து இரு பிள்ளைகளும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்... விஜி அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்...

"செல்வா... இன்னைக்கே நானும் அத்தையும் நம்ம குலதெய்வ கோவிலுக்கு போய் பத்திரிக்கை வச்சு பூஜை பண்ணிட்டு வந்துடலாம்னு இருக்கோம்... அதுக்கப்புறம் நீ எல்லோருக்கும் பத்திரிக்கை கொடுக்க ஆரம்பிச்சிடு.."

"சரிம்மா.."

"இங்கப் பாரு செல்வா... இது வீட்ல சிம்பிளா நடக்கப் போற கல்யாணம்... அதனால முக்கியமானவங்கன்னு யாரை நினைக்கிறியோ அவங்களுக்கு மட்டும் பத்திரிக்கை வச்சா போதும்... அப்புறம் ஆடிட்டர் வீட்டுக்கும், வக்கீல் வீட்டுக்கும் போகும்போது மட்டும் என்னை கூட்டிட்டுப் போ...

அப்புறம் பத்திரிக்கை வைக்கற  வேலையெல்லாம் உன்னோடது மட்டும் தான்... அண்ணனையெல்லாம் எதிர்பார்க்காத சரியா..??"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

"அம்மா நீங்க இதையெல்லாம் சொல்லனுமா.. நான் ஏற்கனவே யாருக்கெல்லாம் இன்விடேஷன் வைக்கனும்னு ப்ளான் பண்ணி வச்சிருக்கேன்... அதெல்லாம் கரெக்டா செஞ்சுடுவேன்..."

"சரி டா... அப்புறம் நம்மக்கிட்ட வேலை செய்யற எல்லோருக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் விருந்து கொடுத்துடுவோம்... யாரும் கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு சொல்லப் போறாங்க... முன்னாடியே இது சிம்பிளா நடக்கற கல்யாணம்னு சொல்லிடு.."

"சரிம்மா.."

"ஆ அப்புறம், நர்மதா வீட்டுக்கு கொடுக்க வேண்டிய பத்திரிகையெல்லாம் இன்னைக்கே நீ போய் கொடுத்துட்டு வந்துடு.." என்று கோமதி சொன்ன அந்த நொடி செல்வாவிற்கு புரை ஏறியது...

"பார்த்து சாப்பிடுடா.." என்று விஜி சொல்லிக் கொண்டே அவனது தலையை தட்டியவர், தண்ணீர் அடங்கிய டம்ளரை எடுத்து அவன் கையில் கொடுத்தார்.

அவன் நிலைமை கொஞ்சம் சரியானதும், "அம்மா நீங்களே அவங்க வீட்டுக்குப் போய் இதெல்லாம் கொடுக்கலாம் இல்ல.. நான் எதுக்கும்மா..??" என்றான்.

"இன்னைக்கு நானும் அத்தையும் தான் கோவிலுக்குப் போறோமே... அவங்களுக்கும் அந்த சம்பிரதாயமெல்லாம் இருக்கும் செல்வா.. அதான் இன்னைக்கே எடுத்துட்டுப் போய் கொடுத்தா.. அவங்களும் குலதெய்வத்துக்கு பூஜை பண்ணி எல்லோருக்கும் பத்திரிகை கொடுக்க சரியா இருக்கும்... நமக்கு நாள் ரொம்ப குறைச்சலா இருக்குடா.. அதுக்கு தான் உன்னை போக சொல்றேன்..."

"சரிம்மா.. இன்னைக்கே எடுத்துட்டு போய் கொடுத்துடலாம்... ஆனா நான் போகல.. வேற யார்க்கிட்டயாவது கொடுத்து விடலாம்.."

"செல்வா.. அது தப்பு.. அவங்களை நாம மதிக்கலன்னு அவங்க நம்மல தப்பா நினைச்சிடக் கூடாது... அதுக்கு தான் சொல்றேன்... நீயே எடுத்துட்டு போய் கொடுத்திடு...

அப்புறம் வர ஞாயிற்றுக் கிழமை நாள் ரொம்ப நல்லா இருக்கு.. அப்பவே கல்யாணத்துக்கு நர்மதாக்கு புடவை எடுத்திடலாம்னு இருக்கோம்... அவளுக்கு மட்டுமில்ல, சம்பந்தி முறைக்கு அவளோட அப்பா, அம்மாக்கும்.. மச்சான் முறைக்கு  நர்மதா தம்பிக்கும் துணி எடுக்க வேண்டியிருக்கு... அப்படியே நம்ம எல்லாருக்கும் சேர்த்து அன்னைக்கே எடுத்துடலாம்... அதனால அவங்க 4 பேரையும் ஞாயிற்றுக் கிழமை வரச் சொல்லிடு... ஞாயிற்றுக் கிழமை தான் எல்லாருக்கும் லீவா இருக்கும், அதான் சொல்றேன்...." என்று அவர் சொல்ல சொல்ல... எல்லாத்துக்கும் ம்ம் போட்டுக் கொண்டிருந்தான் அவன்...

"ஆ அப்புறம்... ஞாயிற்றுக் கிழமை நீ எதுவும் முக்கியமான வேலை வச்சுக்காத, ஏன்னா நீ தான் எங்கக் கூட இருந்து எல்லாம் வாங்கனும்..." என்ற நொடி திரும்ப அவனுக்கு புரை ஏறியது...

இந்த முறை துஷ்யந்த் அவன் தலையில் தட்டி தண்ணீரை எடுத்துக் கொடுத்தான்... "அம்மா, அவன் சாப்பிட்டு முடிச்சதும் தான் எல்லாம் சொல்லுங்களேன்... பாருங்க அவனுக்கு புரை ஏறிக்கிட்டே இருக்கு.."

"நான் தாண்டா பேசிக்கிட்டு இருக்கேன்... இவன் ம்ம் கொட்டிக்கிட்டு இருக்கான்... இதுல ஏன் புரை ஏறனும்..."

செல்வாவிற்கு கொஞ்சம் சரியானதும், "அம்மா கல்யாணத்துக்கு துணி எடுக்க நான் ஏன்ம்மா.. அதான் நர்மதா வீட்ல இருந்து எல்லாரும் வரப் போறாங்க... நீங்க ரெண்டுப்பேரும் போகப் போறீங்க... அப்புறம் அண்ணாக்கு ட்ரஸ் எடுக்க அண்ணனே உங்கக் கூட வரட்டும்... எனக்கு நான் மெதுவா எடுத்துக்கிறேன் ம்மா.. என்ன ண்ணா.. நீ அம்மாக் கூட போறல்ல..."  என்றுக் கேட்டான்..

"நான் எதுக்கு செல்வா... கல்யாணத்துக்கு எப்படியோ வேட்டி சட்டை தானே... அதனால நீயே அவங்கக் கூட போய் எடுத்துக்கிட்டு வந்துடு.."

"ஆமாம் செல்வா.. நீதானே எப்பவும் எங்கக் கூட வருவ.. அதனால நீயே எங்கக் கூட வா.." என்று கோமதியும் கூறினார்...

"அம்மா... அன்னைக்கு அவங்க வீட்டுக்கு போனப்போ, அண்ணாவை எதிர்பார்த்தாங்கல்ல... அதனால அண்ணன் உங்க கூட வந்தா நல்லா இருக்கும்... "என்றவன், தன் அண்ணன் என்ன சொல்லப் போகிறான் என்று யோசனையோடு பார்த்தான்...

இந்த திருமணத்தை குறித்து மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தாலும், இந்த திருமணத்தை என்ன சொல்லி நிறுத்த என்று துஷ்யந்த்க்கு புரியவில்லை... இதில் அந்த நர்மதாவை ஏமாற்றுவது குறித்து ஒரு குற்ற உணர்வு வேறு மனதில், அதனாலேயே அவளை நேருக்குநேர் சந்திக்க அவனால் முடியவில்லை... அதற்காகவே அவளை சந்திக்கும் தருணங்களை தவிர்த்தான்... இது ஒரு காரணம் என்றால்,

அன்று தான் இளங்கோவின் பதிபகத்தில் ஆண்டு விழா... இதை ஏற்கனவே இளங்கோ இவனுக்கு சொல்லியிருக்க, இவனும் வருவதாக ஒத்துக் கொண்டான்... சென்ற முறையை விட இந்த முறை எளிமையாக தான் ஆண்டு விழாவை கொண்டாடப் போவதாக இளங்கோ சொல்லியிருந்தான்... இப்போது இவனால் வர முடியாதென்று இளங்கோவிடம் சொன்னால், அவனும் புரிந்துக் கொள்வான்... ஆனால் துஷ்யந்த் இப்போது அந்த விழாவிற்கு செல்ல நினைப்பது கங்காவிற்காக...

இந்த திருமணம் நடந்துவிட்டால் கங்காவை இவனால் அதன்பின் பார்க்க முடியாது... அதை அவளுமே விரும்பமாட்டாள்... அது நியாயமுமில்லை... ஏனோ அதை உணர்ந்த அந்த நொடியிலிருந்து அவளை அடிக்கடி பார்க்க மனம் துடிக்கிறது... சும்மா, சும்மா அவள் வீட்டிற்கு சென்றாள் அவள் அமைதியாக இருக்கமாட்டாள்... அதனாலேயே இளங்கோவின் பதிப்பக விழாவிற்கு இவன் முக்கியமாக செல்ல நினைத்தான்... அப்படியாவது அவளை பார்க்காமலே என்று...

மதியம் வேறு அலுவலகத்தில் முக்கியமான வேலை இருக்கிறது... அதைப்பற்றி செல்வாவிற்கு தெரியாது, இன்னும் இவன் சொல்லியிருக்கவில்லை... இதையெல்லாம் இவன் சிந்தித்துக் கொண்டிருக்க...

இன்னும் தன் அண்ணனிடம் இருந்து பதில் வராததால், செல்வாவின் பார்வை அவனிடமே இருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.