(Reading time: 29 - 57 minutes)

'ன்னத்தில் அடித்த அடியை விட இந்த அடி உயிரில் கத்தியை பாய்ச்சுகிறதே!!!' 'அப்படி என்ன தவறு செய்து விட்டேன் நான்??? உன்னோடு வாழ விரும்பவில்லை என்று நேரடியாக சொல்லி இருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காதோ.

அழுவதா??? உடைந்து போவதா??? அவன் மீது கோபப்படுவதா??? நம்பிக்கை தகர்ந்து போன பின் எதற்குமே அர்த்தமில்லை என்றுதான் தோன்றியது அவளுக்கு கண்ணீர் வரவில்லை. துளியும் வரவில்லை.

அவள் இறுகிக்கிடந்த போது தட்டபட்டது அறைக்கதவு. ப்ரியா சென்று கதவை திறக்க வெளியே நின்றிருந்தான் பரத்

'நான் அபர்ணாகிட்டே கொஞ்சம் பேசணும்..'

ப்ரியா அபர்ணா முகம் பார்க்க, அவள் தலையசைக்க அறையை விட்டு வெளியேறினாள் ப்ரியா. கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தான் பரத். அவள் கட்டிலில் அமர்ந்திருக்க அவள் எதிரில் கண்மூடி அமர்ந்தான் இவன். அடிப்பட்ட பறவை போல் துவண்டு போய்தான் இருந்தது அவன் முகம். 

'எப்போதும் அவளை பார்த்தவுடன் பொங்கும் மனதுடன் புன்னைகைப்பதே அவன் பழக்கம். ஆனால் இன்று???? இதுதான் நரகமென தோன்றியது பரத்துக்கு. இயலாது. சொல்லிவிடுகிறேன்!!! அவளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்!!!!

அவனை பார்த்தவுடன் எப்போதும் வரும் சின்ன சந்தோஷம் இப்போது இல்லை அபர்ணாவிடமும்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'என்ன செய்ய போகிறான் இவன்??? உன் காதல் இப்படி முடிந்து போகுமென நான் நினைக்கவில்லை என்று சொல்லப்போகிறானா??? நீ கவலைப்படாதே உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லப்போகிறானா??? இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருந்த போதும் கண்திறக்காமல் அமர்ந்திருந்தான் அவன்.

'பரத்தை திருமணம் செய்துக்கொள்வதா??? அது எப்படி சாத்தியம்??? காதலுக்கு அடிப்படையே நம்பிக்கைதானே??? தெரிந்தே என்னை இத்தனை அழகாய் ஏமாற்ற முடிந்திருக்கிறது அவனால். எனக்கு துரோகம் செய்ய முடிந்திருக்கிறது அவனால்.. அப்படி பட்டவனை இனி நண்பனாக கூட பார்க்க முடியுமா???' அம்மா சற்றுமுன் சொன்னபோதே இப்படிதான் தோன்றியது அவளுக்கு.

இப்போது அவன் மனம் எத்தனை தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென தோன்றியது அவளுக்கு

'பரத்..' என்றாள் அவள்  'நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களா???

பேரதிர்ச்சியால் தாக்குண்டவனைப்போல் திடுமென கண்திறந்தான் அவன். இப்படி ஒரு கேள்வி வேறொரு சூழ்நிலையில் அபர்ணா கேட்டிருந்தால் எப்படி மகிழ்ந்திருப்பான் அவன்!!! இன்று ஒரு வெற்றுப்பார்வையே இருந்தது அவனிடத்தில்.

'நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேட்டேன்..' என்றாள் மறுபடியும்.

ஒரு ஆழமான சுவாசம் எடுத்துக்கொண்டான் அவன். இடம் வலமாக அசைந்தது அவன் தலை 'இப்போ இருக்கிற மனநிலையிலே என்னாலே கண்டிப்பா முடியாது அபர்ணா.'

உடனே சரியென தலை அசைப்பான் என்பதே அவளது எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அவன் இப்படி சொல்ல திகைப்பாக கேட்டாள்

'ஏன் ஏன் அப்படி??? நீங்க என்னை விரும்பறீங்கதானே??? அவள் அவன் முகம் பார்த்துக்கேட்க.

'இல்ல கண்ணம்மா உன்னை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கிருக்கான்னு தெரியலை...' என்றபடியே எழுந்து அவள் பார்வையை தவிர்த்து ஜன்னலுக்கு அருகே சென்று மழையை வெறிக்க துவங்கினான் பரத்.

'ஏன் பரத் இப்படி சொல்றீங்க..' என்று அவள் அவன் அருகில் வர..

'கண்ணம்மா ப்ளீஸ்..' விலகி நகர்ந்தான் அவன். 'என்னாலே முடியலை கண்ணம்மா. இப்படி பக்கத்திலே பக்கத்திலே வராதே என்னாலே உன்னை நிமிர்ந்து பார்க்க கூட முடியலை.. காதலுக்கும் கல்யாணத்துக்கும் அடிப்படையே நம்பிக்கைதான்.. அந்த நம்பிக்கையையே நான் அழிச்சிருக்கேன். என் மனசுக்கு தெரிஞ்சே நான் உனக்கு துரோகம் பண்ணி இருக்கேன்..' இயலாமையுடன் வெடித்து வெளிவந்தன வார்த்தைகள்.

'பு.. புரியலை..'தடுமாறியது அவள் குரல்.

'அருண் இங்கே வராததுக்கு நான்தான் காரணம். இன்னைக்கு காலையிலே அஸ்வினியை உன் நம்பர்லேர்ந்து அருணுக்கு போன் பண்ண சொல்லி, உன்னை மாதிரி அவளை பேச சொல்லி அவனை தனியா வர சொன்னேன். அவனும் வந்தான் அவனுக்கு அஸ்வினியை அடையாளம் தெரியலை. நீன்னு அவளை நினைசிட்டான் அவன்...'

'நான் சொல்லிகொடுத்த மாதிரியே பேசினா அஸ்வினி.. கொஞ்ச நாளாவே எனக்கு உடம்பு சரியில்லை. டாக்டர்கிட்டே செக் அப் போனேன். இது வீட்டுக்கு கூட தெரியாது. நிறைய டெஸ்ட் பண்ணி பார்த்திட்டு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்கன்னு சொன்னா. தயவு செய்து இதை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்கன்னு அவ அவன்கிட்டே அழுதா. நம்பிட்டான். அவ சொன்னதை எல்லாம் அருண் முழுசா நம்பிட்டான்.... 'ப்ளீஸ்... இதனாலே கல்யாணத்தை நிறுத்திடாதீங்க..' கெஞ்சினா அஸ்வினி. எந்த பதிலும் சொல்லாம கிளம்பி போயிட்டான் அவன்

படபடபடவென நிறுத்தாமல் நடுவில் எந்த யோசனைகளும் இல்லாமல், வெளியில் மழைநீரை கொட்டிக்கொண்டிருக்கும் மேகங்களுக்கு இணையாக நடந்த எல்லாவற்றையும் அவளிடம் அவன் கொட்டிக்கொண்டே போக. அசைவின்றி நின்றிருந்தாள் அபர்ணா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.