அதற்குள் காவ்யாவை சுற்றி நான்கு ஐந்து பேர் கூடிவிட, ஆளாளுக்கு அவனை வார்த்தைகளால் திட்டித்தீர்த்தனர். காவ்யா அவனை முறைத்துவிட்டு சிதறிய பைகளை எடுத்துகொண்டு நகர்ந்தாள். அவன் அங்கேயே ஐந்தாறு நிமிடங்கள் நின்றான், மற்றவரை எதிர்கொள்ள வெட்கி தலையைக்குணிந்து நின்றான், அறியாமல் செய்திருந்தாலும் அது பெரும் தவறென அவன் உள்ளம் சொல்லியதன் பொருட்டு, காவ்யா அவன் கன்னத்தில் விட்ட அரைக்கு, பல்லைக்கடித்துகொண்டு, அவள் அந்த இடத்தைவிட்டு அகலும் வரை பொறுமையாக நின்றான். அவள் அகலும் முன் அந்த இடத்தைவிட்டு ஓட அவன் உதிரம் துடித்தது, அப்படி அவன் செய்தால் இன்னும் கையாளாகாதவன் ஆவான், போதாதற்கு அவன் வேண்டுமென்று செய்ததாக பொருள் கொள்ளப்படும்.அத்தனையையும் மனதில் கொண்டு அவனை சுற்றி பலர் கெட்ட வார்த்தைகளில் அவனை வைதுதீர்த்த போதும் அவன் அங்கேயே நின்றான். கூட்டம் கலைந்தபின் தன் பையை பொருக்கிக்கொண்டு நகர்ந்தான். அன்றைய தினம் முழுவதும் நடந்த, பல நல்ல சம்பவங்களால் நிறைந்திருந்த அவன் மனது, அப்போதைய நிகழ்வால் பெரிதும் காயப்பட்டது. காவ்யா விட்ட அரை அவனை பெரும் மனசிதைவிற்குள்ளாக்கியது. தன் அன்பிற்கோ, அறிமுகத்திற்கோ, ஏன் நட்போ, உறவோ, உரிமையோ அல்லாத ஒரு பெண்ணின் கைகளால் வாங்கிய அடி வெறும் அவமானத்தின் சின்னமென அவன் உள்ளம் குமுறியது.
காவ்யாவின் கைகளில் சிக்கிய அவளது கார் அதீத வேகத்துடன் பறந்தது, தன்னை இடித்தவனின் முகம் ஞாபகம் வரும் போதெல்லாம் அவள் காரின் வேகம் கூடியது. தர்ஷினி காவ்யாவின் தோளைத்தட்டி, “காவீ, அதை விடு, நாம வேணா வீட்டுக்கு போலாம் ப்ளீஸ், இந்த இன்சிடன்ட்னால எனக்கும் மூட் அவுட் ஆயிட்டு நாம் இன்னொரு நாள் அட்வகேட் சார் வீட்டுக்கு போகலாம்!” என்றாள்.
“இல்ல, தர்ஷூ, டாட் எங்கிட்ட எந்த ஒரு பொறுப்பையும் குடுத்தது இல்ல, இன்னிக்கு தான் ஃபர்ஸ்ட் டைம், என்ன நம்பி ஒரு வேலையை கொடுத்திருக்காரு, அதனால நாம கண்டிப்பா அங்க போகனும், அது மட்டுமில்ல, தேவையில்லாம சிவா பத்தி நாம நிறைய யோசிச்சிட்டோம், அவர பத்தி தெரிஞ்சுக்காம நாம இரண்டு பேருமே நிறைய கற்பனை பண்ணிட்டோம். வீ நீட் டூ சார்ட் இட் அவுட், அதுகெல்லாம் இன்னைக்கோட ஃபுல்ஸ்டாப் வச்சிருலாம்!”
“காவீ, அவருக்கு ஒரு ஃபேமிலி இருக்குன்னு தெரிஞ்ச உடனேயே நான என்னோட மனச மாத்திக்கிட்டேன், நான் தெளிவா இருக்கேன், எனக்காக அங்க போக வேண்டாம், அப்படி நீ செஞ்சா நான் இன்னும் கஷ்டபடுவேன்” தர்ஷினி வருத்தத்துடன் சொல்லிவிட்டு வெளியே பார்த்தாள்.
“இல்ல, தர்ஷூ, நீ அவரு ஃபேமிலிய கண்டிப்பா பார்க்கனும்னு எனக்கு தோணுது, நாம இன்னிக்கு இங்கு வரல நாலும் நீ இல்லாம அவங்க வீட்டுக்கு நான் நிச்சயம் போயிருக்க மாட்டேன். நாம ஒரு தரவ அங்க போயிட்டு வந்தா நம்ம மைண்டு கிளியர் ஆயிடும், லக்கிலி டாடீயே நம்மள அங்க போக சொல்லிட்டாங்க, ம்ம்.. பட் இன்னிக்கு அந்த இன்சிடன்ட் மட்டும் நடக்காம இருந்திருந்தா, ஹேப்பியா போயிருக்கலாம்” – காவ்யா
“சாரி காவீ, அப்ப பார்த்து நானும் உன் பக்கதில் இல்ல” – தர்ஷினி.
“நல்ல வேளை, தர்ஷூ, அவன் உன்ன இடிச்சிருந்தா? காட் ஐ கான்ட் இமஜின், அவனை அங்கே பொலிபோட்டிருப்பேன்.. “ - காவ்யா
“இப்ப மட்டும் அவன நீ சும்மாவா விட்ட, உண்டு இல்லனு பண்ணிட்ட, போதாதற்கு கன்னத்தில அரைஞ்சிருக்க, அத நினைச்சாதான் பயமா இருக்கு காவீ!”
“அதோட அவனை விட்டுட்டோமேனு எனக்கு வருத்தமா இருக்கு, அவன தர தரனு இழுத்துட்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல விட்டிருக்கனும், தப்பு பண்ணிட்டேன்!”
“ஹேய், நல்ல வேளை நீ அப்படி எதுவும் செய்யல, இந்த மாதிரி நாம ஏதாச்சும் செஞ்சு அப்புறம், அவன் வெளியில வந்து ரிவன்ஜ்னு பேர்ல, ஆசிட் அட்டாக், இல்ல இன்னும் மோசமா ஏதேதோ பன்னினா, நம்ம லைஃபே போயிடும், அதுக்கு பல்ல கடிச்சுட்டு அந்த இடத்தை விட்டு போயிரது நல்லது!”
“லூசா நீ தர்ஷூ, இப்படி உன்ன மாதிரி எல்லாரும் தட்டி கேட்காம பயந்து போறதுனால தான் இவனுங்கெல்லாம் இந்த ஆட்டம் ஆடுறானுங்க! பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை அதிகரித்ததுக்கு இப்படி இதை கேட்காம விட்ட நாமளும் ஒரு காரணம் தான்!”
தர்ஷினி மௌனமானாள். காவ்யாவின் தைரியம் ஒரு புறம் மகிழ்வை தந்தாலும் மறுபுறம் அவளின் பாதுகாப்பை நினைத்து அச்சம் பரவியது, எனினும் இந்த வன் கொடுமைகள் அங்கங்கே தட்டிக் கேட்கப்படுவதால் தான், அந்த மோச செயல்கல் பெருகாமல் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.