(Reading time: 17 - 34 minutes)

ம்மா தனக்காக அனிக்காவின் வீட்டில் அண்ணனோடு போய் பேசுவதாக இருந்ததும் அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் மற்றும் கடத்தல் திட்டத்தை தள்ளி வைத்து விட்டு சில நாட்களாக திருமண கனவுகளில் லயித்து இருந்தான். எப்படியாக தங்கள் திருமணம் நடைபெறும் என்று தினம் தோறும் வண்ண வண்ண கனவுகள் தாம். ஆனால், அன்று இவ்வளவு நாளாக வீட்டை விட்டு எங்கேயும் சென்றிராத அனிக்கா திடீரென வெளியே வரவும் அவள் விக்ரமை தேடிப் போகிறாளோ? அப்படி இருந்தால் அவளை பாதுகாக்க வேண்டும் என்றெண்ணி இருந்தவன் அவள் ஃபேக்டரிக்கு செல்வதாக தெரிந்ததும் தன் திட்டத்தை மாற்றினான். தங்கள் குடும்ப விஷயம் ஃபேக்டரியில் விவாதிக்க வேண்டாம் என்றெண்ணியதால் ஸ்டாஃப்களுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பினான்.

அவளுக்காக கேபினில் காத்திருந்த போது தனியாக இருந்து சிந்தித்ததில் தான் முறையாக பெண் கேட்டும் அனிக்கா குடும்பத்தினர் தன்னை நிராகரித்தது பெருமளவு அவனை பாதித்திருக்க, அந்நினைவுகள் அவனை இம்சித்தன. தன்னை நேசித்தவளுக்கு தன் காதலுக்காக போராட தெரியவில்லையா? மனம் விட்டு பேசி குடும்பத்தினருக்கு தன்னுடைய விருப்பத்தைச் சொல்ல முடியவில்லையா? என்கின்ற ஆங்காரம் மூண்டெழுந்தது. ஒருவேளை தனக்கும் விக்ரமுக்குமான திருமணத்திற்கு அழைக்கத்தான் வருகின்றாளோ என்று வேறு அவனுடைய மூளை கோபத்தில் சுயமிழந்து சாத்தானின் உலைக் களமாய் மாறியிருந்தது.

தன்னந்தனியனாக தன் காதலுக்காக போராடி அவன் களைத்திருந்தான். கைக் கோர்த்து நடப்பாளேன எண்ணியவள் தனது உணர்வுக்கு சற்றும் பிரதிபலிப்பு தராமல் தள்ளி நிற்பதுவும், ஒரு முறை தன்னை வேண்டாமென்ற பின்னும் யாசகன் போல மறுபடியும் அவளது வீட்டிற்கு அவளைக் கேட்டு தன் வீட்டினர் செல்ல வேண்டியிருந்ததால் அவனுடைய தன்மானம் வெகுவாக அடிப்பட்டிருந்தது.

வந்தவளோ தன் அணைப்பில் உருகி நின்றதும் அவனும் உருகியேப் போனான். ஆனால், அதன் பின்னே அவள் சொன்ன சொற்களை அவனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் தான் முன்பிருந்த கொதி நிலைக்கு மாறி அவளது "சாகப் போகிறேன்" என்கின்ற முட்டால் தனமான கூற்றைக் கேட்டு தாங்கிடவே இயலாமல் அறைந்திருந்தான். அவள் இறந்த பின்னர் அவனுக்கும் வாழ ஆசையொன்றுமில்லையே? அவனைப் பொறுத்தவரையில் அவள் மரிப்பதும் அவன் மரிப்பதும் ஒன்றல்லவா?

சாகப் போவதாகச் சொன்னாளே ஒழிய தன்னை சந்திக்க வரும் போது உயிர் போக்க எதையும் உட்கொள்ளாமல் அவள் இருந்ததே அவனுக்கு உயிர் மீட்டித்தந்தது. தனக்காக வீட்டில் பேசவில்லையே என்று மனதில் இருந்த கோபம் எல்லாம் அவள் தனக்காக மரிக்கவும் துணிந்திருக்கிறாளே? என்பதில் வடிந்திருந்தாலும், அதனால் அவன் பெருமைக் கொள்ளவோ மகிழ்ச்சியுறவோ முடியவில்லை. அவள் உயிர் அவளுக்கு ஒரு வேளை முக்கியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்கு அவள் தானே எல்லாம்.

தற்கொலை முடிவு எடுத்தவளை மயக்கத்தில் அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. அவள் வீட்டினர்க்கு எப்படியோ அவனுக்கு அவள் மிக முக்கியம். அன்று தான் ஏதேச்சையாக அவன் ஆர்டர் செய்திருந்த தாலியும் செயினும் கைக்கு வந்திருந்தது. பையிலேயே இருந்துப் போன அந்தச் செயின் பற்றிய உணர்வு ஹாஸ்பிடலில் தான் அவனுக்கு வந்தது. அவளை தற்போதைய உடல் நலக் குறைவு சரியாகும் வரை ஹாஸ்பிடலில் சிகிட்சை பெற வைத்து மறுபடி அவலது வீட்டிற்கே அனுப்பி வைத்தால் மட்டும் அவள் மறுபடி இப்படி ஒரு கோழைத்தனமான முடிவிற்கு வர மாட்டாள் என்று என்ன நிச்சயம்? அவளை பாதுகாக்க வேண்டுமானல் அதற்கு அவள் மேல் தனக்கு உரிமை வேண்டும். அப்போது தான் அவளை பாதுகாக்க முடியும்? தன்னை திருமணம் செய்வதற்கு கேட்ட போது வேண்டாமெனச் சொன்னவளுக்கு செத்துப் போகிறேன் என்றுச் சொல்வது எளிதாக இருந்ததே. ஆனாலும் அவளை அப்படியே விட முடியாதே. அதனால் தான் தன் அழகிய கற்பனைகளுக்கு மிகவும் ஒவ்வாத வகையில் ஹாஸ்பிடலில் தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருங்கியவள் உணர்வில்லாமல் இருக்கும் போது, அவளுக்கு பிடிக்காத விதத்தில், தன்னுடைய குடும்பங்களின் ஆசீர் பெற இயலாத தருணத்தில் அந்த தாலியை அவன் கட்டி முடித்திருந்தான். அத்தனையும் எண்ணிப் பார்த்தவனுக்கு காதல் தரும் சுகங்கலை விட வலிகளே அநேகம் என்பது புரிந்தது. அனிக்கா தன்னுடைய கண் முன்னே பாதுகாப்பாக இருப்பது அவனுக்கு வெகு நாட்கள் கழித்து மிகுந்த நிம்மதியாக உணர்ந்தான். விக்ரம் மீது ஒரு கண் வைப்பதையும் அவன் நிறுத்தவில்லை. அனிக்கா எங்கே வெளியே செல்ல வேண்டுமானாலும் அவளை தன்னோடு மட்டுமே அழைத்துச் சென்றான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.