(Reading time: 33 - 66 minutes)

14. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ஒரு நாள் சிரித்தேன்..

மறுநாள் வெறுத்தேன்..

உனை நான் கொல்லாமல்..

கொன்று புதைத்தேனே..

மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..

மன்னிப்பாயா.. மன்னிப்பாயா..

கண்ணே தடுமாறி நடந்தேன்..

நூலில் ஆடும் மழையாகிப் போனேன்..

உன்னால் தான்..

கலைஞனாய் ஆனேனே..

தொலை தூரத்தின் வெளிச்சம் நீ..

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே..

மேலும் மேலும் உருகி உருகி..

உனை எண்ணி ஏங்கும்..

இதயத்தை என்ன செய்வேன்..

உனை எண்ணி ஏங்கும்..

இதயத்தை என்ன செய்வேன்..

உனை எண்ணி ஏங்கும்..

இதயத்தை என்ன செய்வேன்..

ன்று ஒருநாள் தன்னை காண வேண்டும் என்று கங்கா அலைபேசியில் அழைத்ததும் துஷ்யந்திற்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... இப்படி அவளே இவனை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று அழைத்ததெல்லாம் இல்லை... இப்போது அவளே கூப்பிட்டதும், எதற்காக என்ற கேள்வி பிறந்தாலும், மனம் முழுதும் மகிழ்ச்சியோடு அவளை காண சென்றான்.. ஆனால் அவள் பேசிய விஷயம் அவன் மன மகிழ்ச்சியை முற்றிலும் மாற்றியது...

"நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க..??" அவள் கேட்ட கேள்வியில், அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை..

உன்னோட மனசு மாற காத்திருக்கேன்னு அவளிடம் சொன்னால் எப்படியிருக்கும், உடனே அவள் கழுத்தில் இருக்கும் தாலிக்கு ஒரு விளக்கம் கொடுப்பாள்... இந்த 6 வருடத்தில் கொஞ்சமாவது அவளிடம் மாற்றம் வரும் என்று இவன் எதிர்பார்க்க, அவள் மனம் மாறுவதாக தெரியவில்லை... இப்படியிருக்க, இவன் மனதை அவளுக்கு புரிய வைக்க முடியுமா..??

"நான் அதைப்பத்தியெல்லாம் இன்னும் யோசிக்கல.." என்று ஒற்றை வாக்கியத்தில் பதில் கூறினான்.

"நேத்து உங்கம்மா வந்து என்னைப் பார்த்தாங்க.." அடுத்ததாக அவளிடமிருந்து வந்த வார்த்தையில் கொஞ்சம் அதிர்ந்துப் போனான்..

"நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதுக்கு நான் தான் காரணம்னு சொன்னாங்க.. நீங்க கல்யாணம் பண்ணிக்கனும், உங்களுக்குன்னு ஒரு குடும்பம் வேணும்னு உங்க அம்மா ஆசைப்பட்றாங்க... நேத்து அவங்க பேசினதை கேட்டப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..??"

"எங்கம்மா வந்து உன்கிட்ட பேசியிருக்கக் கூடாது.. தப்பு தான்.. நான் அவங்கக்கிட்ட இனி உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்றேன்.."

"இங்கப் பாருங்க... அம்மா என்கிட்ட பேசினதை நான் இப்போ தப்பா சொல்லல... அவங்களுக்கு அந்த அளவுக்கு உங்க மேல பாசம் இருக்கு... நீங்க தான் உங்க குடும்பத்துக்கு ஆணி வேர்... நீங்க நல்லா இருந்தா தானே உங்க குடும்பமும் சந்தோஷமா இருக்கும்... உங்களுக்கு அப்புறம் உங்க தம்பி இருக்காரு.... உங்க கல்யாணத்துக்கு அப்புறம் தானே அவருக்கு கல்யாணம் செய்யனும்... இதெல்லாம் உங்கம்மாவா அவங்க யோசிக்க மாட்டாங்களா..??

நான் இப்போ உங்க அம்மா சொன்னதுக்காக மட்டும் பேச வரல... எனக்கும் உங்க மேல அக்கறை இருக்கு... மத்தவங்க பார்வைக்கு வேணா நான் தப்பானவளா தெரியலாம்... ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு கௌரவமான வாழ்க்கை வாழ நீங்க தான் காரணம்...

இந்நேரம் என்னை புதைச்ச இடத்துல புல்லு முளைச்சிருக்கனும்... ஆனா நான் இப்போ உயிரோட இருக்க நீங்க தான் காரணம்... அம்மாக்கு அம்மாவா வாணிம்மா கிடைச்சதும், இளங்கோ மாதிரி ஒரு நல்ல நண்பன் கிடைச்சதுக்கும் கூட நீங்க தான் காரணம்...  இப்படி என் வாழ்க்கைல நடந்த சில நல்லதுக்கு காரணமா இருந்த உங்களோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நான் நினைக்கக் கூடாதா..??"

"இங்கப்பாரு கங்கா... உனக்காகவோ, அம்மாக்காகவோ, இல்ல என்னோட தம்பிக்காகவோ நான் கல்யாணம் செஞ்சுக்க முடியாது... நான் எனக்காக கல்யாணம் செஞ்சுக்கனும்... நான் எனக்காகன்னு சொல்றது, என்னை நம்பி வர பொண்ணுக்காகவும் தான்,

பொதுவா ஆண்கள் எல்லாரும், தன்னை கல்யாணம் செஞ்சுக்கப் போற பொண்ணு, உடலாலும் உள்ளத்தாலும் பரிசுத்தமானவளா இருக்கனும், தன்னை மட்டுமே நேசிக்கனும்னு எதிர்பார்ப்பாங்க... அதே எதிர்பார்ப்பு பொண்ணுங்களுக்கும் இருக்கும், ஆனா இந்த சமுதாயம் அதுக்கு மதிப்பு கொடுக்கறதில்ல, அவங்க மனசை புரிஞ்சிக்கறதில்ல,

என்னைப் பொறுத்தவரைக்கும் நான் அதுக்கு மதிப்பு கொடுக்கிறேன்... அந்த எதிர்பார்ப்புக்குரிய தகுதியை நான் இழந்துட்டேன்... எந்த பொண்ணையும் நான் ஏமாத்த விரும்பல... அதனால நான் இப்படியே இருக்கேன்... என்னை யாரும் கட்டாயப்படுத்தாதீங்க..."

"இங்கப் பாருங்க... தெரிஞ்சே தப்பு செய்யறவங்களுக்கே மன்னிப்பு இருக்கு... நீங்க தெரியாம செஞ்ச தப்பு, அதுவும் 6 வருஷத்துக்கு முன்னாடி, அதுக்காக நீங்க இப்படியே இருக்கனுமா..?? உங்க வாழ்க்கையே அழிச்சுக்கனுமா..??"

"இதையே நான் உன்கிட்ட திருப்பி கேக்கலாம்... நீயும் அப்படி தானே இருக்க... அட்வைஸ்ல்லாம் மத்தவங்களுக்கு தானா..??"

"நீங்க தான இப்ப சொன்னீங்க... இன்னும் கூட இந்த சமுதாயத்துல பெண்களுக்கு  சில விஷயங்களை தங்களோட விருப்பப்படி செஞ்சுக்க சுதந்திரம் இருக்கிறதில்ல, அப்படி அவங்க சுதந்திரத்தோட செயல்பட்டா, அவங்களுக்கு தப்பானவன்னு பேர் தான் கிடைக்குது..."

"அதை ஒருப் பொண்ணான நீயே சொல்லலாமா..?? அப்படியிருக்கும் போது, ஆண்கள் எப்படி மாறுவாங்க...??"

"இங்கப் பாருங்க... நாம இங்க பட்டிமன்றம் நடத்தல... நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்ல என்ன காரணம் வேணும்னாலும் சொல்லலாம்... ஆனா முக்கியமான காரணம் நான் தான்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா..??

நாம ஒருத்தருக்கொருத்தர் சந்திச்சிருக்கவே கூடாது... ஆனா அது விதி, அதை மாத்த முடியாது... ஆனா நீங்க சென்னைக்கு கூப்பிட்டப்போ நான் வந்திருக்கக் கூடாது... உங்க வாழ்க்கையை விட்டு அப்பவே நான் விலகிப் போயிருக்கனும்... அப்படி செய்யாம, நான் உங்கக் கூட வந்தேன் பாருங்க.... அது தான் நான் செஞ்ச தப்பு... அப்பவே நான் அப்படி செஞ்சிருந்தா... கங்காங்கிற ஒருத்திய நீங்க இந்நேரம் மறந்தே போயிருப்பீங்க... நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்ந்திருப்பீங்க..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.