(Reading time: 33 - 66 minutes)

தே நேரம் அந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்றுக் கொண்டிருந்தாள் நர்மதா.. விடிந்தால் திருமணம் என்ற நிலையில், இன்னும் கூட அந்த திருமணத்தை தன் மனம் ஏற்காது இருக்க... ஏதோ ஒரு தவிப்போடு இருந்த மனதிற்கு அமைதியை தேடிக் கொண்டிருந்தாள் அவள்...

தன் பெற்றோருக்காக மட்டும் தான் இந்த திருமணத்திற்கு ஆரம்பத்தில் இவள் சம்மதம் தெரிவித்தாள்... ஆனால் திருமணத்திற்குள் தன் மனதை மாற்றிக் கொள்ள அவளும் முயற்சிக்கிறாள் தான்... ஆனால் அது தான் முடியாத காரியமாக உள்ளது... அதற்கு காரணமானவனை நினைத்தால், கோபம் தான் வருகிறது..

ஆனால் அதிகப்படியான கோபம் அவன் மேல் இருந்தாலும், ஏதோ ஓரத்தில் இன்னும் அவன் மேல் தனக்கிருக்கும் அந்த காதல் தான், அவளை தவிப்புக்குள்ளாக்குகிறது... ஒருவேளை அவனை தன் வாழ்க்கையில் அடுத்து பார்க்காமலே இருந்திருந்தால், இந்த திருமணத்திற்கு தன்னையும், தன் மனதையும் தயார் செய்துக் கொண்டிருந்திருப்பாளோ..?? ஏன் கடவுளிடமும் அதைத்தானே இவள் வேண்டினாள்... ஆனால் அவனை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்போம் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லையே..??

அதுவும் ஒருமுறை பார்த்திருந்தாள் கூட பரவாயில்லை... ஆனால் தான் வாழப் போகும் குடும்பத்தில் ஒருவனாய், அவனை அடிக்கடி சந்திக்கும் நிலை வரும் என்று இவள் நினைத்துப் பார்த்ததேயில்லை... ஒவ்வொரு முறையும் இந்த திருமணத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள நினைக்கும் போதெல்லாம் ரிஷப் ஐ சந்திக்கும் நிலை வந்தது...

ஏன் இன்றுக் கூட, உனக்கு நாளை திருமணம்... துஷ்யந்த் தான் உனக்கு கணவனாக வரப் போகிறான்... என்று இவள் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்க, மாலையில் மணமகன் வீட்டில் இருந்து வந்து ஒருவர் இவளை அழைத்துப் போவார்கள், என்று சொன்ன போது... அந்த ஒருவராக இந்த ரிஷப் வந்து நிற்கிறான்... அடுத்து, இவள் தனக்குள்ளே சொல்லிக் கொண்ட எல்லாம் எங்கோ மாயமாய் போனது...

ஆனால் இதனால் இவளுக்கு மட்டும் பாதிப்பு என்றால் பரவாயில்லை... ஆனால் இப்போதோ இவள் வாழ்க்கையில் இன்னொருவன் இணையப் போகிறானே..?? இதுவரையும் துஷ்யந்திடம் ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை... ஏன் இன்று அவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தும், அவனை சரியாக கூட இவள் பார்க்கவில்லை...

இருந்தும் நாளை கணவனாக போகும் அவனின் எதிர்பார்ப்புகளை இவள் பூர்த்தி செய்து தானே ஆகவேண்டும்... தன் அன்னையின் விருப்பப்படி துஷ்யந்த் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தாலும், இந்த திருமண பந்தத்தில் அவனுக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்க தானே செய்யும்... அப்படியிருக்க அவனை இவள் ஏமாற்றுவதாக ஆகிவிடாதா..?? திருமணத்திற்குப் பிறகும் அதே வீட்டில் இருக்கும் ரிஷப் ஐ பார்த்து இவள் மனம் சலனம் கொண்டால்..?? இதையெல்லாம் யோசிக்கும்போது, இந்த திருமணம் நடக்க வேண்டுமா..?? என்ற கேள்வி நர்மதாவின் மனதில் தோன்றியது.

கோமதியும் விஜியும் தவிப்போடு நின்றிருக்க, மேனேஜரிடம் பேசிவிட்டு வந்த செல்வாவோ.. "அம்மா... அண்ணன் எதுவும் வேலை விஷயமாக போகலன்னு தான் நினைக்கிறேன்.. அப்படி ஏதாவது இருந்தா... மேனேஜர்க்கு தெரிஞ்சிருக்கனுமே... அவரும் அண்ணன்கிட்ட பேசலையாம்... அண்ணனும் அவருக்கு எதுவும் கால் பண்ணலையாம்... பின்ன வேற எங்க போயிருக்கும்..." என்று ஏதோ யோசனையோடு பேசியவன், திடிரென்று ஏதோ தோன்றி,

"அம்மா... டெரஸ்ல போய் பார்த்தீங்களா..?? அண்ணன் ஒருவேளை அங்க இருக்கலாமே.."

"இல்லடா... அதான் உன்னோட பைக் இங்க இல்லல்ல... அதை எடுத்துட்டு வெளியே தான் போயிருப்பான்... அதான் மொட்டை மாடிக்குப் போய் பார்க்கல.."

"நீங்க சரியா பார்த்திருக்க மாட்டீங்கம்மா.. பைக் ஒருவேளை வேறெங்கேயாவது கூட இருக்கலாம்... அதனால எதுக்கும் நான் டெரஸ்க்கு போய் பார்த்துட்டு வரேன்..." என்று அவன் வேகமாக படிக்கட்டுக்கள் ஏறினான்.

தன் அண்ணன் அங்கு இருப்பானோ.. என்று பார்க்க சென்றவனுக்கு, மொட்டை மாடி கைப்பிடிச் சுவரைப் பிடித்தப்படி, இருளை வெறித்துக் கொண்டு நின்றிருக்கும் நர்மதாவின் பக்கவாட்டு தோற்றம் தான் தெரிந்தது... அந்த தோற்றமும், அவளின் வாட்டமான முகமும் செல்வாவை என்னவோ செய்தது..

யாரோ வந்த அரவம் கேட்டு நர்மதா திரும்பிப் பார்க்க, தன் பார்வையை கடினமாக மாற்றியவன், "ஏற்கனவே பிடிச்சதல்லாம் போதாதா..?? இன்னும் என்ன கோட்டையை பிடிக்க இவ்வளவு தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்க..??" என்றுக் கேட்டான்.

"ம்ம் பிடிச்சக் கோட்டையை எப்படி தக்க வச்சிக்கிறது... அதுக்கு தடையா இருக்கவங்கள எப்படி விரட்றதுன்னு யோசிக்கிறேன்..." என்று கோபமாக சொன்னாலும், மனதிலோ.. " இப்பக் கூட இவன் எப்படி பேசறான் பாரு.." என்று நினைத்து வருத்தப்பட்டாள்...

"இந்த நேரத்துல இங்க வந்து நிக்கிறியே... உன்னோட கோட்டையை தக்க வச்சிக்கிற ஐடியாவையெல்லாம், உன்னோட ரூம்ல போய் வச்சுக்க... யாராவது பார்க்கப் போறாங்க.." என்றான்.

"நான் இங்க நிக்கறது யாருக்கும் தப்பா தெரியாது... " ச்சே கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கனும்னு நினைச்சு இங்க வந்தா.. அதை கெடுக்கறதுக்குன்னே நீங்க வந்தீங்களா..??" என்று இதுவரை அவன் மேல் இருக்கும் கோபத்தையெல்லாம் கொட்டினாள்.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் நிம்மதியை தேடி வந்தேன், என்று அவள் சொல்வதை என்னவென்று சொல்வது, இவளின் இந்த நிலைமைக்கு காரணமானவன் அவன் தானே..?? அதை அவன் புரிந்துக் கொண்டானா..??

மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன், தன் அன்னை, அத்தையிடம், "அம்மா... அண்ணன் மேல இல்லம்மா.. கவலைப்படாதீங்க, நான் சொன்ன மாதிரி சும்மா தூக்கம் வரலன்னு வெளிய தான் போயிருக்கும்... எனக்கு தெரிஞ்சு அண்ணன் போற இடத்துக்கெல்லாம் போய் நான் பார்த்துட்டு வரேன்.. நீங்க போய் படுங்க... அண்ணனை பத்தி தகவல் தெரிஞ்சதும், உங்களுக்கு தகவல் சொல்றேன்..." என்று சொல்லிவிட்டு கார்  சாவி எடுக்க அவன் அறைக்குள் நுழைந்ததும், விஜியோ..

“அண்ணி… இவன் ராஜாவை போய் எங்கன்னு தேடுவான்… எனக்கென்னமோ.. ராஜா அந்த கங்கா..” என்று சொல்ல வந்ததை விஜி சொல்லி முடிப்பதற்குள், அவரின் வாய்ப்பொத்திய கோமதி, தன் அறைக்கு அவரை அழைத்துச் சென்று,

“என்ன விஜி… அங்க நின்னுக்கிட்டு அந்த கங்காவை பத்தி பேசுற.. செல்வா காதுல விழுந்தா என்னாகுறது… ஏற்கனவே ராஜாக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையான்னு கேக்குறான்… இதுல அந்த கங்காவைப் பத்தி செல்வாக்கு தெரிஞ்சுது.. அவனே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவான்..”

“அண்ணி… ராஜா என்னவோ அந்த கங்கா வீட்ல இருப்பானுன்னு தோனுது...அப்புறம் செல்வா ஏன் தேடிக்கிட்டுப் போகனும்…”

“இங்கப் பாரு விஜி… அந்த பொண்ணு சொல்லித்தான் ராஜா இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சான்… நாளைக்கு ராஜாக்கு கல்யாணம்னு அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கும்… அதனால ராஜாவே போனாலும், அந்த பொண்ணு அவனை அங்க சேர்க்கமாட்டா… எனக்கென்னமோ, செல்வா சொல்ற மாதிரி ராஜா சும்மா எங்கேயாச்சும் வெளியப் போயிருப்பான்.. வந்துடுவான்… நீதான் அநாவசியமா பயத்தை கிளப்பி விட்டுட்ட..”

“என்ன அண்ணி… நீங்க இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க… 6 வருஷம் நம்ம பையனை அந்த கேடுகெட்டவ, அவளோட கட்டுப்பாட்டுல வச்சிருக்கா… அவளைப் போய் ரொம்ப நல்லவ மாதிரிப் பேசறீங்க…

நீங்க கேட்டுக்கிட்டதும், ராஜாவை விட்டுக் கொடுக்கற மாதிரி விட்டுக் கொடுத்து,  இப்படி கல்யாண நேரத்துல நம்ம பையனை இழுத்துக்க பார்க்கிறா… இது மாதிரிப் பொண்ணுங்கள்ளாம் அப்படிதான் அண்ணி..”

“எனக்கென்னமோ.. கங்கா அப்படி செய்வான்னு ஒத்துக்க முடியல… அப்படி செய்வான்னா.. ஏன் ராஜாவை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கனும்..??”

“அதெல்லாம் நடிப்பு அண்ணி… ராஜாவை தன் பக்கமே வச்சுக்க, அவ செய்யற நாடகம்… நீங்க வேணா பாருங்க, நான் சொல்ற மாதிரி ராஜா இந்நேரம் அந்த கங்கா வீட்ல தான் இருப்பான்..” என்றார் தீர்மானமாக..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.