(Reading time: 33 - 66 minutes)

வள் அப்படி சொன்னதும், அவனுக்கு கோபம் தான் வந்தது... அவளை இவன் மறந்தான் என்றால், அது அவன் உயிர் பிரியும் போது தான் சாத்தியம்... அப்போது கூட இவனின் ஆன்மா அவள் நினைவோடு தான் இருக்கும்... அதை மனதில் நினைத்தப்படியே கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான்...

"இத்தனை நாள் இது உனக்கு தெரியலையா..?? இப்போ தான் இதெல்லாம் உனக்கு புரியுதான்னு நீங்க கேக்கலாம்... ம்ம் இது எனக்கு எப்பவோ புரிஞ்ச விஷயம் தான்... அதே போல என்னோட மனசு எப்பவும் மாறாதுன்னு நீங்களும் புரிஞ்சிப்பீங்க.. என்னை விட்டு விலகிப் போய்டுவீங்கன்னு நானும் அமைதியா காத்துக்கிட்டு தான் இருந்தேன்... ஆனா அது நடக்குற மாதிரி தெரியல...

உங்க அம்மா ரெண்டு முறை வந்து என்கிட்ட பேசிட்டாங்க... இளங்கோவும், வாணிம்மாவும் கூட உங்க விஷயமா யோசின்னு அடிக்கடி சொல்றாங்க... இதுவரைக்கும் இதெல்லாம் என்னால அமைதியா கேட்டுக்க முடிஞ்சுது... ஆனா இனி முடியுமான்னு தெரியல... திரும்பவும் என் பையன் இப்படி இருக்க நீதான் காரணம்னு வந்து உங்கம்மாவோ... இல்ல வேற யாராவதோ வந்து என்னை குற்றம் சொல்ற வாய்ப்பை நான் அவங்களுக்கு தர்றதா இல்ல... யார்க்கிட்டயும் சொல்லிக்காம எங்கேயாச்சும் கண்காணாத தூரத்துக்கு போய்டலாமான்னு இருக்கு...

இங்கப்பாருங்க... உங்களை மிரட்டறதுக்காக இதை நான் சொல்லல... முடியல.. என்னால எல்லாரும் கஷ்டப்பட்றதை பார்க்க கண்டிப்பா என்னால முடியல... உங்க மனசு என்னன்னு தெரிஞ்சும் என்னோட மனசை மாத்திக்கவும் முடியல... அமைதியா வேடிக்கை பார்க்கவும் முடியல... இன்னொரு பக்கம் யமுனா, இளங்கோ எல்லோருக்கும் என்னால கஷ்டம்... ஏன் வாணிம்மாவை கூட நான் கஷ்டப்படுத்தி தான் பார்க்கிறேன்... இதெல்லாம் பார்க்கறப்போ, நிஜமாவே எங்கேயாச்சும் போய்டலாமான்னு தோனுது... அப்படியாச்சும் எல்லோரும் நல்லா இருப்பீங்கன்னு என்னோட மனசு சொல்லுது.. இதுக்கும் மேல உங்களுக்கு என்னோட நிலைமையை எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல... எனக்கு நிஜமாகவே தெரியல..." அவள் பேசி முடிக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் துளி..

அவள் தன் மனதை புரிந்துக் கொள்ளவே மாட்டாளா..?? என்று இத்தனை வருடமாக காத்துக் கொண்டிருந்தவனுக்கு.. இன்று எல்லாம் புரிந்தும் இப்படி பேசுபவளை பார்க்கும் போது ஒரு பக்கம் துஷ்யந்திற்கு கங்கா மேல் கோபம் வந்தது...

இந்த ஆறு வருடத்தில் தன்னிடம் எத்தனையோ முறை கோபத்தையும், வெறுப்பையும் காட்டி தன்னை விலகிப் போகச் சொல்பவள், இன்று கண்ணீரோடு... அவளே விலகிப் போகப் போவதாக கூறும் அளவுக்கு அவளை கஷ்டப்படுத்தியிருக்கிறோமே... என்று ஒரு பக்கம் அவனுக்கு வருத்தமாகவும் இருந்தது...

அரை உயிராய், உயிருக்கு போராடுபவளை நேரில் பார்த்தவனாயிற்றே, இன்று இந்த அளவுக்கு அவளை கொண்டு வருவதற்கு, அவன் செய்ததெல்லாம் அவனுக்கு தானே தெரியும், அதனால் தான் தன் மனதை கூட அவளிடம் வெளிப்படுத்தாமல் இருந்தான்... இப்போதோ கண்களில் கண்ணீரோடு திரும்பவும் எங்கேயோ போய் விடுகிறேன் என்று சொல்கிறாளே.. சொன்னது போல் செய்திடுவாளோ என்ற பயமும் அவன் மனதில் இருந்தது...

அவனுக்குள் இருந்த கோபமா..?? வருத்தமா..?? இல்லை பயமா..?? எது அவனை அப்படி சொல்ல வைத்தது என்று தெரியவில்லை... "உன்னை எந்த விதத்திலேயும் நான் கஷ்டப்படுத்தி பார்க்க நினைச்சதில்ல கங்கா... உன்னோட பிரச்சனைகளையெல்லாம் என்னால சரி பண்ண முடியுமான்னு தெரியல... ஆனா இதுக்கு மேலேயும் உனக்கு நான் தொந்தரவு கொடுக்க மாட்டேன்... நான் கல்யாணம் செஞ்சுக்கறதால நீ நிம்மதியா இருக்க முடியும்னு நினைச்சேன்னா... உனக்காக அந்த முடிவுக்கு சம்மதிக்கிறேன்.." என்று சொல்லியிருந்தான்...

அவளிடம் சொல்லிவிட்டு வந்த வேகத்தோடு, தன் அன்னையிடமும் தான் திருமணம் செய்துக் கொள்ள தயார் என்று தன் முடிவை தெரிவித்தான்... எவ்வளவு எளிமையாக திருமணத்தை நடத்த முடியுமோ.. அவ்வளவு எளிதாக நடத்த வேண்டும்... பெண் பார்க்க, நிச்சயதார்த்தம் என்ற சடங்குகள் எல்லாம் வேண்டாம்... உங்களுக்கு பிடிச்ச பொண்ணைப் பாருங்க, நேரா மண மேடையில வந்து அவளுக்கு தாலிக் கட்றேன் என்று சொன்னான்...

அந்த சமயத்தில் இன்னொரு பெண்ணிடம் தன்னைப் பற்றி உண்மையை பற்றி சொல்லி, அவளை திருமணம் செய்யக் கூட அவனுக்கு தோன்றவில்லை... கங்காவுக்காகவும் தன் அன்னைக்காக மட்டுமே இந்த திருமணம் என்ற மனநிலையில் அப்போது அவன் இருந்தான்...

ஆனால் பிறகு நன்றாக சிந்தித்துப் பார்த்த போது, இது முழுக்க முழுக்க இன்னொரு பெண்ணுக்கு செய்யும் துரோகம் என்பது புரிந்தது... அன்று கங்காவிடம் வேறு மாதிரி பேசி முடிவெடுத்திருக்க வேண்டும், அதைவிடுத்து வேறு பெண்ணை மணப்பதாக அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது என்பது புரிந்தது... ஆனால் அவன், தான் எடுத்த முடிவு தவறு என்று புரிந்துக் கொண்ட போது, நிலைமை கை மீறி போயிருந்தது... கோமதி நர்மதாவை இவனுக்காக நிச்சயித்து, திருமணத்திற்கு தேதியும் குறித்துவிட்டார்.

இந்த திருமணத்தை நிறுத்தினால், தன் அன்னையால் இதை தாங்கி கொள்ளவும் முடியாது... கங்காவும் இது குறித்து வருத்தப்படுவாள்... ஆனால் இந்த திருமணத்தை செய்துக் கொண்டால், அதுவும் தன்னைப் பற்றி அவளிடம் முன்பே எதுவும் சொல்லாத நிலையில், நர்மதாவிற்கு துரோகம் செய்வதாக மனது உறுத்தியது... விடிந்தால் திருமணம் என்ற நிலையில் இன்னும் கூட கங்காவை இதற்கு மேல் பார்க்க முடியாது, பேச முடியாது என்று நினைத்தால் அதை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், நாளை நடக்கப் போகும் திருமணத்தால், தன் வாழ்வு மட்டுமல்ல, கூட நர்மதாவின் வாழ்க்கையையும் சேர்த்தே அழிக்கப் போவது நன்றாகவே அவனுக்கு புரிந்த நிலையிலும்... இன்னும் கூட என்ன முடிவு எடுப்பது என்பது புரியாமல் அவன் குழம்பிக் கொண்டிருந்தான். ஏனோ மன அமைதிக்காக கடற்கரைக்கு வந்தபோதும், அந்த அமைதி கிடைக்காமல் மனம் அலைபாய்ந்துக் கொண்டே இருந்தது.

வாணி வீட்டிற்குள் நுழையும் போது, வீடே இருள் சூழ்ந்திருந்தது.. "என்ன இந்தப் பொண்ணு லைட்ட கூட போட்டு வைக்கல, அதுக்குள்ள தூங்கிட்டாளா..??" என்று வாய்விட்டு புலம்பியப்படியே, விளக்குகளை உயிர்ப்பித்தார்... பின் கங்கா தூங்கிவிட்டாளா..?? என்று அவளுடைய அறையை பார்க்கச் சென்றவர், அங்கேயும் விளக்குக்களை உயிர்ப்பித்தவர், அவளின் படுக்கையை பார்த்து அதிர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.