(Reading time: 33 - 66 minutes)

விஜி சொன்னது போல் துஷ்யந்த் அந்த நேரம் கங்காவின் வீட்டு வாசலில் வந்து தன் பைக்கை நிறுத்தினான்.. கடற்கரையிலிருந்து கிளம்பியவன், கங்காவை பார்க்க வேண்டும் என்ற மன உந்துதலில், அவனே அறியாமல் பைக்கை கங்காவின் வீடு நோக்கி செலுத்தியவன், வீடு வந்து சேர்ந்ததும் தான், தான் என்ன செய்திருக்கிறோம் என்பதை அறிந்தான்..

இந்த நேரத்தில் இங்கு வந்தது தவறு என்பதை உணர்ந்தான்… கங்காவும் இதை விரும்பமாட்டாள் என்பதை அறிந்தவன், திரும்ப பைக்கை செலுத்த முயற்சித்த போது தான், கங்கா வீட்டு வாசலில் இளங்கோவின் பைக் இருப்பதை கவனித்தான்… இந்த நேரத்தில் இளங்கோ, கங்கா வீட்டிற்கு வர மாட்டானே..?? இப்போது வந்திருக்கிறான் என்றால், ஏதாவது பிரச்சனையா..?? என்று யோசித்தவன் பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தான்..

ர்மதாவின் தாய் சொன்ன வேலையை முடித்துவிட்டு, அவர்களையும் உறங்கச் சொல்லிவிட்டு, யமுனா தன் அறைக்கு வந்த போது, அங்கு நர்மதா இல்லாததை பார்த்து அதிர்ந்தாள்..

காலையிலிருந்தே நர்மதா குழப்பமாக இருப்பதை யமுனா கவனித்தாள்… இன்னும் கூட நர்மதா இந்த திருமணத்தை மனதார ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவள் அறிவாள்… இவளும் தன் வார்த்தைகளால் அவளை தேற்ற முயற்சித்தாள்.. கொஞ்சம் நன்றாக தூங்கி எழுந்தால், சிறிது தெளிவு பிறக்கும், என்பதால் தான் அவளை உறங்கச் சொன்னாள்… மல்லிகா வந்து அழைத்தப் போது கூட நர்மதா உறங்காமல், சும்மா கண்களை மூடி தான் படுத்திருக்கிறாள், என்பது இவளுக்கு தெரியும்… சரி அப்படியே தூங்கிவிடுவாள், என்று நினைத்து இவள் சென்றால், இப்போதோ நர்மதாவை காணவில்லை,

அவளை இப்போது எங்கே என்று தேடுவது, எங்கே சென்றிருப்பாள்… வெளியில் சென்றிருப்பாளோ… இல்லை இந்த வீட்டிலேயே வேறு எங்காவது இருக்கிறளா..?? யாராவது அவளைப் பார்த்துவிட்டாள், என்ன நினைப்பார்கள்…?? பல கேள்விகளோடு நர்மதாவை தேடியப் படி, யமுனா வரவேற்பறைக்கு வரவும், கார் சாவியை எடுத்துக் கொண்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த செல்வா, படிக்கட்டில் இறங்கி வரவும் சரியாக இருந்தது…

யமுனா அப்படி இப்படி திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வந்ததிலேயே, அவள் நர்மதாவை தான் தேடுகிறாள் என்பதை அறிந்தவன்,

“யமுனா… என்ன நீங்க.. கல்யாணப் பொண்ணை தனியா விட்டுட்டு நீங்க எங்கப் போனீங்க..?? அவங்க டெரஸ்ல தனியா நிக்கறாங்க… யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க… ?? இந்த நேரத்துல அவங்களை தனியா விடலாமா..?? போங்க, போய் அவங்களை கீழே கூட்டிக்கிட்டு வாங்க..” என்று பதட்டத்தோடு கூறியவன், வீட்டிலிருந்து வெளியேற,

“அய்யோ யாரும் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சா… இவன் பார்த்துட்டானே..” என்று நினைத்தவள், இருந்தும் அவன் பதட்டத்தோடு பேசியதில் ஆச்சர்யப்பட்டாள்.. அவன் பேச்சில் ஒரு அக்கறை தெரிந்தது.. உண்மையிலேயே நர்மதாவின் பிரச்சனை இவளுக்கு தான் தெரியும்.. ஆனால் அவன் பதறியதற்கு என்ன காரணம் என்று புரியாமல் முழித்தாள்.

ளங்கோ… கங்கா இதுவரையிலும் காய்ச்சல்னு படுத்ததே இல்லை.. இப்போ இவ்வளவு காய்ச்சல் வர அளவுக்கு அழுதிருக்கான்னா… அப்போ எவ்வளவு வருத்தத்தை மனசுல வச்சிருப்பா..?? ஆனா நம்மக்கிட்ட கொஞ்சமாவது காமிச்சிக்கிட்டாளா பாரு..” என்று வாணி தன் ஆதங்கத்தை கூற, இளங்கோவும் அதை ஆமோதிக்க, அப்போது தான் துஷ்யந்த் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.. இந்த நேரத்தில் அவனின் வருகையை எதிர்பார்க்காத இருவரும் அதிர்ந்தனர்.

“தம்பி நீங்களா..?? என்ன தம்பி இந்த நேரத்துல??”

“அக்கா… கங்காவுக்கு ஏதோ காய்ச்சல்னு பேசுனது காதுல விழுந்துச்சு.. அவளுக்கு என்னாச்சு..?? இளங்கோ இந்த நேரத்துல வந்துருக்கான்னா.. கங்காவுக்கு என்ன..??” என்றான் துஷ்யந்த் பதட்டத்தோடு,

“துஷ்யந்த் நீங்க நினைக்கிறா மாதிரியெல்லாம் ஒன்னுமில்ல.. கங்காவுக்கு காய்ச்சல் தான்.. இருந்தாலும் வாணிம்மா கொஞ்சம் பயந்துப் போய் எனக்கு போன் பண்ணாங்க..” என்று சொல்ல,

“ஆமாம் தம்பி, ஜல்தோஷம் பிடிச்சிருந்தும், பச்ச தண்ணியில தலைக்கு குளிச்சிருக்கா.. அதான் காய்ச்சல் வந்திடுச்சு..” என்று வாணிம்மாவும் எடுத்துரைக்க, அதையெல்லாம் காதில் வாங்காமல் அவன் நேராக கங்காவின் அறைக்குள் நுழைந்தான்.

நேற்றுக் கூட பார்த்தானே.. அப்போது நன்றாக இருந்தவள், இன்று வாடிய மலர் போலே கட்டிலில் கிடந்தாள்.. அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,

“துஷ்யந்த்… கங்காவுக்கு டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுத்துருக்காங்க.. காலையில அவ நார்மலா ஆயிடுவா.. இந்த நேரத்துல நீங்க இங்க வந்தது சரியில்ல.. நீங்க வீட்டுக்குப் போங்க துஷ்யந்த்..” என்றான் இளங்கோ..

“எனக்கு புரியுது இளங்கோ… நான் இப்போ இந்த நேரத்துல இங்க இருக்கறத கங்காவும் விரும்ப மாட்டா.. இருந்தாலும் இவளுக்கு காய்ச்சல்னு தெரிஞ்சு விட்டுட்டுப் போக மனசு வரல.. ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் இங்க இருக்கட்டுமா..??” என்று அவன் கெஞ்சினான்.

இளங்கோவிற்கு மறுக்க முடியவில்லையென்றாலும், விடிந்தால் திருமணம் என்ற நிலைமையில், துஷ்யந்த் இங்கு இருப்பது தவறு என்று உணர்ந்தவன், ஏதோ மறுத்து பேச வாயெடுக்கும் முன்,

“அதனால என்ன தம்பி.. கொஞ்ச நேரம் தான இருங்க..” என்று வாணி கூறினார். பின் கங்காவை ஒருமுறை தொட்டுப் பார்த்தவர், இன்னும் கூட காய்ச்சல் விடலையே..” என்று சொல்ல,

“காலையில சரியாயிடும் வாணிம்மா..” என்று இளங்கோ கூறினான்…

“நீங்க உக்காருங்க தம்பி..” என்று அங்கு இருந்த நாற்காலியை கங்காவிற்கு அருகில் போட்டு, அவனை அமரச் சொன்னவர், இளங்கோவை அந்த அறையிலிருந்து வெளியே கூட்டிக் கொண்டு போனார்..

வெளியில் வந்ததும் இளங்கோவோ.. “என்ன வாணிம்மா.. நீங்க என்ன பண்றீங்க..?? இந்த நேரத்துல துஷ்யந்தை இங்க இருக்க சொல்றீங்க.. அவருக்கு காலையில கல்யாணம்.. ஞாபகம் இருக்கா..??” என்றுக் கேட்டான்.

அதற்கு வாணியோ.. “கங்காவோட இந்த காய்ச்சல்க்கு காரணம் என்னன்னு தெரியுமில்ல.. நம்மளால இப்போ எதுவும் சரிப் பண்ண முடியலைன்னாலும், துஷ்யந்த் தம்பி கொஞ்ச நேரம் இருக்கவாவது ஒத்துப்போமே..” என்றார்.

“இங்கப்பாருங்க.. கங்காவுக்கு இது தெரிஞ்சா.. அவ துஷ்யந்த் மேல தான் கோபப்படுவா.. அப்புறம் துஷ்யந்த் வீட்ல அவரை தேட மாட்டாங்களா..?? அப்புறம் அங்க நாளைக்கு தனக்கு நடக்கப் போற கல்யாணத்தை நினைச்சு சந்தோஷத்துல இருக்கும் நர்மதாவை யோசிச்சீங்களா..??”

“எனக்கும் எல்லாம் புரியுது இளங்கோ… கொஞ்ச நேரம் தான இருக்கேன்னு தம்பி கேக்குது… இருந்துட்டு போகட்டுமே..” என்று சொன்னதை இளங்கோவால் மறுக்க முடியவில்லை.

ர்மதாவை தேடி யமுனா மொட்டை மாடிக்கு வரும்போதும், அவள் அதே போல் கைப்பிடி சுவரை பிடித்தப்படி இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள்.. யமுனா அவள் அருகில் சென்று ஆதரவாக கை வைத்ததும், நர்மதா அவளை திரும்பி பார்த்தாள்.

“என்னடி… இந்த நேரம் இங்க நின்னுக்கிட்டு இருக்க..யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க.. வா ரூம்க்கு போகலாம்..”

“ எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் யமுனா..”

“ஹே என்ன சொல்ற.. நீ ஏதோ குழப்பத்துல இருக்கன்னு நினைக்கிறேன்.. இங்கப் பாரு நீ இப்போ நல்லா தூங்கி எழுந்தா, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவ.. வா வந்து படு..”

“இல்ல யமுனா.. நா குழம்பல.. தெளிவா தான் சொல்றேன்… என்னால துஷ்யந்தோட சந்தோஷமா வாழ முடியுமான்னு தெரியல.. அவரோட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியுமான்னு தெரியல யமுனா..”

“அதுக்கு தான் துஷ்யந்த்க்கிட்ட பேசிப் பழகுன்னு சொன்னேன்.. கேட்டியா..?? இப்போ இப்படி பேசுற.. இங்கப்பாரு, நேத்து நான் துஷ்யந்தை பார்த்த வரைக்கும், நல்ல ஆளா தான் தெரியுறாரு.. அவர் கண்டிப்பா உன்னை புரிஞ்சுக்கிட்டு, உன்னோட ஃபீலிங்ஸ்க்கு மதிப்பு கொடுப்பார்னு தோனுது நர்மதா.. அதுமட்டுமில்ல, உன்னோட மாமியார் , துஷ்யந்தோட அத்தை, செல்வா.. எல்லோரும் நல்ல கேரக்டர் தாண்டி.. அதனால,

“அதுதான் என்னோட பிரச்சனையே யமுனா..”

“என்னடி..??”

“யமுனா.. நான் உன்கிட்ட இருந்து ஒன்னை மறைச்சிட்டென்.. செல்வா வேற யாருமில்ல, ரிஷப் தான் செல்வா.. செல்வாவோட முழுப்பேரு ரிஷபச்செல்வன்.. அந்த ரிஷப் தாண்டி என்னோட பிரச்சனையே.. யாரை பார்க்கக் கூடாதுன்னு நினைச்சேனோ.. அவனை தினம் தினம் பார்க்க வேண்டிய நிலை வந்திருக்குடி..” என்று சொன்னதும் யமுனா அதிர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.