(Reading time: 18 - 35 minutes)

15. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

நேற்று வரை இந்த திருமணம் நல்லப்படியாக நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த யமுனா, இன்று எப்படியாவது இந்த திருமணம் நின்றுவிடாதா..?? என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாள்…

அந்த விடியற்காலை பொழுதில், நர்மதாவுக்கு நலங்கு வைக்கும் சடங்கு முடிந்து, குளித்து, திருமணத்திற்கு எடுத்த புடவையை உடுத்திக் கொண்டு, வந்து ட்ரஸிங் டேபிளுக்கு முன்னாடி உட்கார்ந்திருக்க, திருமணம் நடக்க போவதைக் குறித்த சந்தோஷமோ, வெட்கமோ எதுவுமில்லாமல், ஒரு உணர்ச்சியற்ற முக பாவனையோடு இருக்கும் தன் தோழியை பார்த்த நொடி.. அப்படி தான், தன் மனதில் நினைத்தாள் யமுனா.

முன்பே இந்த செல்வா தான் ரிஷப் என்ற உண்மையை நர்மதா சொல்லியிருந்தால், இவள் கண்டிப்பாக ஏதாவது செய்திருப்பாள். ஆனால் நேற்று இரவு தாமதமாக அவள் இந்த உண்மையை கூறியிருக்க, இவளுக்கு இதை எப்படி சரி செய்ய என்று புரியவில்லை..

கண்டிப்பாக இன்னும் நர்மதா மனதில் ரிஷப் இருக்கிறான் என்பது இவளுக்கு தெள்ள தெளிவாக விளங்குகிறது… நேற்று இரவே இந்த பிரச்சனைக்கு தீர்வு தேடலாம் என்று நினைத்தால், அப்போது தான் ரிஷப் எங்கோ வெளியே சென்றான்… துஷ்யந்தை மாலையில் பார்த்ததோடு சரி… பின் அவனை காணும் வாய்ப்பு அமையவே இல்லை… அவன் வீட்டில் இருக்கிறானா..?? இல்லையா..?? என்பதை கூட தெரிந்துக் கொள்ள முடியவில்லை… அந்த இரவு நேரத்தில் அவளால் வேறு என்ன செய்ய முடியும்… காலையில் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து உறங்கப் போனாள்..

காலையில் எழுந்த பின்னோ, என்ன செய்வது..?? என்ற கேள்வி தான் மனதில் இருந்தது… தன் மகள் திருமணம் குறித்த சந்தோஷத்தில் இருக்கும் நர்மதாவின் பெற்றோரை பார்க்கும் போது, மணநாள் வரை வந்த திருமணத்தை நிறுத்த மனம் வரவில்லை… நர்மதாவும் சரி, யமுனாவும் சரி, தங்களுக்காக மட்டும் யோசிக்கும் அளவிற்கு சுயநலமாக வளர்க்கப்பட்டவர்கள் இல்லை… மற்றவர்களின் நிலைமையிலும் யோசிப்பவர்கள், அதனாலேயே அதிரடியாக எதையும் செய்து திருமணத்தை நிறுத்த இருவரும் முயற்சி செய்யவில்லை… ஆனால் தன் தோழியின் நிலையை பார்க்கும் போது, ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்த வேண்டுமோ என்று நினைக்க, அங்கு ஏற்கனவே ஒருவன் அந்த காரியத்தை  செய்துக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை…

நேற்று வரையில் குழப்பம் இருந்தாலும், தன் பெற்றோருக்காக மட்டுமே இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு இருக்கும் நர்மதாவிற்கு, இந்த செய்தி சந்தோஷத்தைக் கொடுக்குமா..??

ர்மதா.. நர்மதா.. என்று அழைத்தப்படியே அவளின் உறவுக்காரப் பெண் ஒருத்தி அந்த அறைக்கு வந்தாள்.. இருவரும் என்ன விஷயம்..?? என்ற கேள்வியோடு அந்தப் பெண்ணைப் பார்த்தனர்..

“நர்மதா.. மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையாம்..?? இந்த கல்யாணம் வேண்டாம்ங்கிற மாதிரி ஏதோ, உன்னோட அப்பா, அம்மாக்கிட்ட பேசிக்கிட்டி இருக்காரு… இந்த கல்யாணம் நடக்கறது சந்தேகம் தான்..” என்று அவள் கூற, பதறியப்படி எழுந்தாள் நர்மதா.. அங்கோ குமாராசாமி, தன் மகளின் திருமணம் நிற்கக் கூடாது என்ற நோக்கத்தோடு துஷ்யந்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

ப்படி ஒரு சூழ்நிலை உருவாக, தானே காரணமாக இருந்ததற்கு, துஷ்யந்த் மிகவும் வருந்தினான்… தன் தந்தை வயது உடையவரை தன்னிடம் கெஞ்சும் சூழலுக்கு தள்ளியதை நினைத்து வெட்கினான்… எதையுமே யோசிக்காமல் இந்த திருமணத்திற்கு அவன் ஒத்துக் கொண்டது தான் மிகப்பெரிய தவறு… அந்த தவறை எப்படியும் சரி செய்தாக வேண்டும்… ஆனால் அதற்கு தீர்வாய் இந்த திருமணம் நடப்பது சரியல்ல… அது இன்னும் பெரிய தவறாகிவிடும்… அது மன்னிக்க முடியாத குற்றமாகிவிடும்… இந்த திருமணம் நடைபெறாமல் இருப்பதே சரியென, நேற்று கங்காவின் வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவன் முடிவெடுத்துவிட்டான்…

நேற்று முன்தினம் வரை நன்றாக இருந்த கங்காவிற்கு திடிரென காய்ச்சல் வந்ததும், காய்ச்சலில் இவன் பேரை தூக்கத்தில் முனகியதும், சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமல்ல… அந்த நேரம் கங்காவின் மனநிலை இவனுக்கு நன்றாக புரிந்தது… கங்காவை கஷ்டப்படுத்தக் கூடாது என்று தான் இவன் தன் காதலை கூட அவளிடம் வெளிப்படுத்தாமல் இருக்கிறான்… அப்படியிருக்க இந்த திருமணம் கூட அவளை கஷ்டப்படுத்தும் என்று தெரிந்தப் பின்னும் எப்படி இந்த திருமணத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியும்?? அதனாலேயே இந்த திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்தான்…

நேற்று இரவே அதை எல்லோரிடமும் சொல்லிவிட நினைத்து தான் வீட்டிற்கு வந்தான்… ஆனால் பெண் வீட்டார் எல்லாம் உறங்கிவிட்ட அந்த நேரத்தில் எதுவும் சொல்ல தோன்றாமல் அவனும் அவன் அறைக்குச் சென்றுவிட்டான்…

திருமண சடங்குகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே எழுந்து அனைவரிடமும் தன் முடிவைப் பற்றி கூறிட வேண்டும் என்று நினைத்து தான் உறங்கப் போனான்… ஆனால் துன்பத்திலும் ஒரு இன்பமாய் நேற்று கங்காவின் நடவடிக்கை சந்தோஷ சாரலாய் இவன் மனதை நனைத்துக் கொண்டிருக்க, அந்த மகிழ்வில் உறங்கிப் போனான்.. அதில் நினைத்த நேரத்திற்கு முடியாமல் கொஞ்சம் தாமதமாகவே எழுந்தான்…

எந்த நேரமாய் இருந்தால் என்ன..?? எப்படியும் இவன் எடுத்த முடிவு மற்றவருக்கு அதிர்ச்சியை தானே கொடுக்கும், அதை இவன் தான் சரி செய்ய வேண்டும் என்ற நினைப்போடு, நர்மதாவின் பெற்றோர் முன் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்…. கோமதி,விஜி, செல்வா மூவரும் துஷ்யந்தோடு அந்த அறையில் நின்றிருந்தனர்… மற்றவர்களோ இனி என்ன நடக்கும் என்பதை போல் அறைக்கு வெளியே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.