(Reading time: 18 - 35 minutes)

ன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் ஆரம்பிக்கப் போகுது, இப்போ போய் இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்றீங்களே தம்பி.. இந்த கல்யாணத்துல விருப்பமில்லன்னா முன்னாடியே சொல்லக் கூடாதா..?? உங்க சம்மதம் கேட்டு தானே இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாங்க..?? அப்படியே உங்க சம்மதம் கிடைக்கலன்னாலும், இந்த கல்யாண ஏற்பாடு உங்களுக்கு தெரியாமலா நடந்தது..?? இல்லல்ல… தெரிஞ்சு தானே நடந்தது.. அப்போ இதை தடுக்காம.. இப்போ வந்து இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்..?? கேக்கறேனில்ல சொல்லுங்க..” என்று, இதுவரையில் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டாமென்று கெஞ்சிக் கொண்டிருந்த குமாரசாமி இப்போது கொஞ்சம் கோபமாகவே துஷ்யந்திடம் பேசினார்..

அவர் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம் துஷ்யந்திற்கு புரியாமல் இல்லை… ஆனால் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தான் தெரியவில்லை…

“நீங்களா தானே வந்து எங்க பொண்ணை உங்கப் பையனுக்காக பொண்ணு கேட்டீங்க… அப்போக் கூட வசதியான குடும்பமாச்சேன்னு நான் தயங்கினேன்.. ஆனா இவ தான் நம்ம பொண்ணுக்கு ஜாதகப்படி வசதியான சம்பந்தம் தான் கிடைக்கும்னு இருக்குன்னு சொல்லி மனசை மாத்தினா… அப்பவே உங்களை மாதிரி பெரிய குடும்பம், எங்களை மாதிரி சாதாரணமான குடும்பத்துல சம்பந்தம் பண்ண நினைக்கிறீங்களேன்னு யோசிச்சேன்… ஆனா மாப்பிள்ளையை கூட நேர்ல பார்க்காம ஒத்துக்கிட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ புரியுது… ஆனா அப்போ அது புரியல… உங்க ரெண்டுப்பேரை பார்த்து, நல்ல மாதிரியா இருக்கீங்கன்னு மனசுக்கு தோனுனதால தான், இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டேன்… உங்க பையனுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லன்னு உங்களுக்கு தெரியுமில்ல… அப்படி தெரிஞ்சே என்னோட பொண்ணு வாழ்க்கையில விளையாட நினைச்சீங்களா..?? சொல்லுங்கம்மா?”

என்று கோமதியையும், விஜியையும் பார்த்து ஆதங்கத்தோடு குமாரசாமி கேட்டார்..

தன் மகனின் இந்த முடிவு கோமதிக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்தது… நேற்று இரவு அவன் வீட்டில் இல்லாததை குறித்து விஜி பயமுறுத்திய போது கூட, தன் மகன் கண்டிப்பாக வீட்டிற்கு வருவான்… இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வான்.. என்ற நம்பிக்கையை அவர் கைவிடவில்லை… தன் அண்ணனை தேடிக் கண்டுப்பிடிக்க போன செல்வா கூட, அவன் எங்கிருக்கிறான் என தெரியவில்லை.. என்று சொன்னப் போதும் அவர் நம்பிக்கையை கைவிடவில்லை… தன் மகன் தன்னை ஏமாற்ற மாட்டான்… என்றும் அவன் பொய்யான நம்பிக்கையை தனக்கு கொடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையோடு அவர் காத்திருக்க…

சற்று நேரத்திற்கெல்லாம் துஷ்யந்த் வீட்டிற்கு வந்ததும், “பார்த்தியா.. நான் சொன்னேன் இல்ல, ராஜா வந்துருவான்னு… நீ தான் தேவையில்லாம பயமுறுத்திட்ட..” என்று விஜியை குற்றம் சாட்டினார்...நாளை தன் மகன் திருமணம் குறித்த மகிழ்ச்சியோடு உறங்கவும் போனார்… ஆனால் காலையில் மகன் இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுப்பான் என்று எதிர்பார்த்திடாத அவர் நர்மதாவின் பெற்றோருக்கு என்ன பதில் கூறுவார்… அவர் அமைதியாய் இருக்க…

“இங்கப் பாருங்க… அவங்க மேல எந்த தப்பும் இல்ல… நான் சம்மதம் சொன்னதால தான், அவங்க இந்த கல்யாண ஏற்பாடு பண்ணாங்க… என்னோட இந்த முடிவு அவங்களுக்கே அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கும்… அதனால அவங்களை எதுவும் சொல்லாதீங்க..” என்றான் துஷ்யந்த்…

“அப்போ எங்க பொண்ணு நிலைமை என்னாகறது… உங்கம்மா வந்து பொண்ணு கேட்டதுக்கும், உடனே கல்யாணத்தை வச்சுக்கனும்னு சொன்னதுக்கும், அப்பவே நிச்சயம் பண்ணனும் சொன்னதுக்கும், நாங்க யார்க்கிட்டேயும் கலந்துக்காம உடனே ஒத்துக்கிட்டோம்… எங்க சொந்த பந்தமெல்லாம், பணக்கார சம்பந்தம் கிடச்சதும், எங்களையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டியான்னு கேட்டாங்க… சில பேரு கல்யாணத்துக்குக் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க… இப்போ மீதி இருக்க உறவுக்காரங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணத்துக்கு வந்துடுவாங்க… இந்த கல்யாணம் நடக்காதுன்னு தெரிஞ்சுதுன்னா… பணக்கார இடமுன்னு போனியே, நீயே அனுபவின்னு விலகிடுவாங்க…

கிட்டத்தட்ட மணமேடை வரைக்கும் வந்து எங்க பொண்ணோட கல்யாணம் நின்னா… நாளைக்கு அவளுக்கு எப்படி கல்யாணம் நடக்கும்… அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க, நாளைக்கு இந்த சொந்தக்காரங்க உதவி தேவையே… இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க தம்பி…” அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருக்கும் போதே.. நர்மதாவும், யமுனாவும் அந்த இடத்திற்கு வந்தனர்…

காலை தூக்கத்தில் இருந்து விழிக்கும் போதே, கங்காவிற்கு தலை பாரமாக கனத்தது… தட்டு தடுமாறி அவள் எந்திரிக்கும் போது,

“பார்த்தும்மா… என்று கங்கா எழுந்து உட்கார வாணி உதவினார்… இளங்கோவும் வாணியின் குரல் கேட்டு அறைக்குள் வந்தான்… நேற்று இரவு கங்காவிற்கு காய்ச்சல் குறைந்ததும், துஷ்யந்த் கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் இளங்கோவும் தன் அறைக்கு கிளம்பியவன், பின் விடியற்காலையிலேயே திரும்ப கங்காவை காண வந்திருந்தான்…

வாணியின் உதவியோடு எழுந்து உட்கார்ந்த கங்காவின் கண்களோ… அங்கு நின்றிருந்த இருவரையும் தாண்டி… மூன்றாவதாக வேறு ஒருவரை தேடியது… துஷ்யந்த் நேற்று இரவு அவளோடு இருந்ததாக ஒரு ஞாபகம்… எனவே தூக்கத்தில் இருந்து விழித்ததும், அவனை காண மனம் ஏங்கியது…

“என்ன கங்கா… இப்படி காய்ச்சல் வர அளவுக்கா அழுவ… நேத்து நான் வீட்டுக்குள்ள நுழையும்போது, நீ இருந்த நிலைமையை பார்த்து பயந்துட்டேன் தெரியுமா..??” என்று  வாணி சொன்னதும் தான், நேற்று தான் அழுதது எதற்காக என்று கங்காவிற்கு ஞாபகத்திற்கு வந்தது… “இன்னைக்கு துஷ்யந்துடைய கல்யாணம் இல்ல… அப்படி இருக்கும்போது அவர் எப்படி நைட் என் கூட இருந்திருக்க முடியும்?? அவர் என் பக்கத்துல உட்கார்ந்தது, என்னோட கையைப் பிடிச்சுக்கிட்டது, என்னோட தலையை கோதினது.. எல்லாம் கனவுப் போல… ச்சே ஒரு பக்கம் துஷ்யந்தை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிட்டு,இன்னொரு பக்கம் அவரை நினைச்சு அழறதும்,அவர் கூட இருக்க மாதிரி கனவுக் காணறதும், நான் ஏன் இப்படி இருக்கேன்…?? என்று மனதில் தன்னிடமே கேள்வியைக் கேட்டுக் கொண்டாள்..

“அப்புறம் கிட்ட வந்துப் பார்த்தா மயங்கிக் கிடக்கற… தொட்டுப் பார்த்தா காய்ச்சல் வேற…” வாணி தொடர்ந்து, நேற்று அவள் இருந்த நிலைமையை சொல்லிக் கொண்டிருந்தார்..

“ உடனே இளங்கோக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன்… இளங்கோ தான் டாக்டரை கூட்டிட்டு வந்தான்… அவங்க உனக்கு ஊசி போட்டாங்க… அப்போக் கூட காய்ச்சல் விடல தெரியுமா..?? அப்புறம்..” வாணி மேற்கொண்டு சொல்வதற்கு முன்னரே..

“அப்புறம் என்ன..?? வாணிம்மா ரொம்ப பயந்துட்டாங்க.. நான் தான் காலையில காய்ச்சல் சரியாகிடும்.. பயப்படாதீங்க வாணிம்மான்னு அவங்களுக்கு தைரியம் சொன்னேன்… நான் சொன்ன மாதிரியே காலையில உனக்கு காய்ச்சல் சரியாகிடுச்சு..” என்று முடித்தான்.

“சாரி… என்னால உங்க ரெண்டுப்பேருக்கும் ரொம்ப கஷ்டம்…”

“இதுல எங்களுக்கு ஒன்னும் கஷ்டமில்ல… உனக்கு காய்ச்சல் வந்த காரணம் தான், எங்களுக்கு கஷ்டமா இருக்கு கங்கா… அவசரப்பட்டு ஒரு காரியத்தை பண்ணிட்டு, இப்போ கஷ்டப்பட்ற.. உன்னையும் கஷ்டப்படுத்திக்கிட்டு, மத்தவங்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துக்கிட்டு, இதெல்லாம் தேவையா கங்கா..”

“நீங்க ரெண்டுப்பேரும் ஏதோ தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க இளங்கோ… தனியா இருக்கவே ஏதேதோ யோசனை.. பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு… அதான் அழுதேன்… நான் எடுத்த முடிவு துஷ்யந்துக்கு நல்லதா அமையும்.. அதை புரிஞ்சுக்கோங்க… சரி இன்னைக்கு துஷ்யந்தோட கல்யாணத்துக்கு நீங்க ரெண்டுப்பேரும் போக வேண்டாமா..??” என்று இருவரையும் பார்த்துக் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.