(Reading time: 18 - 35 minutes)

ண்மையை சொல்லப் போனால் வாணிக்கும், இளங்கோவிற்கும் இந்த திருமணத்திற்கு செல்ல விருப்பமே இல்லை… நேற்று, தான் சென்ற காரியம் நல்லப்படியாக முடியாததால், இன்று துஷ்யந்த் இன்னொரு பெண் கழுத்தில் தாலிக் கட்டப் போவதை காண வாணிக்கு விருப்பமே இல்லை…

அதேபோல் கங்கா, துஷ்யந்த் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்தப் பின்னும், நர்மதாவிடம் அதைப்பற்றி தெரிவிக்காமல் அவளுக்கு அநியாயம் செய்வதாக இளங்கோ நினைப்பதால், சந்தோஷமாக இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டு, நர்மதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் மனநிலை இளங்கோவிற்கு இல்லை… அதனால் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள முடியாமல் குற்ற உணர்வில் தவிக்கிறான்…

“என்ன கங்கா… நீ இப்படி இருக்கும்போது, நான் எப்படி கல்யாணத்துக்கு போக முடியும்..?? நான் உனக்கு துணையா இங்கேயே இருக்கேன்… இளங்கோ வேணா கல்யாணத்துக்கு போகட்டும்..” என்று வாணி சொன்னதற்கு, இளங்கோ அமைதியாகவே இருந்தான்… அவனின் அமைதியே இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள அவனுக்கும் விருப்பமில்லை என்பதைக் காட்டவே..

“வாணிம்மா… எனக்கு தான் காய்ச்சல் சரியாயிடுச்சே… அப்புறம் என்ன..?? நீங்க ரெண்டுப்பேரும் கல்யாணத்துக்கு போகலைன்னா.. துஷ்யந்த் எனக்காக தான் நீங்க ரெண்டுப்பேரும் இந்த கல்யாணத்துக்கு வரலைன்னு நினைச்சுப்பாரு… துஷ்யந்த் எந்த மனநிலையில இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்காருன்னு தெரியுமில்ல… இந்த நேரம் பார்த்து நீங்க இப்படி செய்யலாமா..?? அவரோட கல்யாணம் நல்லப்படியா நடக்க வேண்டாமா..?? அதுமட்டுமில்ல எனக்கு காய்ச்சல் வந்த விஷயம் துஷ்யந்திற்கு தெரியக் கூடாது… அதனால அந்த காரணத்தை சொல்லி நீங்க கல்யாணத்துக்கு போகாம இருக்கறது நல்லதில்ல” என்று அவள் சொன்னதும், வாணியும் இளங்கோவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்..

“இளங்கோ… அன்னைக்கு பதிப்பக ஆண்டு விழாவுல நீ என்ன சொன்ன..?? துஷ்யந்தோட கல்யாணத்துக்கு எங்களுக்கு அழைப்பு கொடுக்கனும்னு இல்ல… நாங்களே முன்னாடி நிப்போம்னு சொன்ன இல்ல… இப்போ இப்படி சொன்னா என்ன அர்த்தம்.. ப்ளீஸ் இளங்கோ ரெண்டுப்பேரும் கல்யாணத்துக்கு கிளம்புங்க..” என்று கெஞ்சினாள்.

“சரி வாணிம்மா.. கங்கா சொல்றதும் சரி தான்… நாம இந்த கல்யாணத்துக்கு போகனும்… நீங்க கங்காக்கு சாப்பாடு, மாத்திரை எல்லாம் கொடுத்துட்டு, ரெடியா இருங்க… நான் என்னோட ரூம்க்கு போய் ரெடியாயிட்டு வந்துட்றேன்..” என்றான்… வாணியும் அரை மனதோடு அதற்கு தலையை ஆட்டினார்.

ர்மதாவை பார்த்ததும், தன் மகளை இப்படி ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டோமே என்று குமாரசாமி கண் கலங்கினார்… மல்லிகாவோ நர்மதாவை கட்டிக் கொண்டு அழுதார்…

“அப்பா எதுக்குப்பா கண் கலங்கறீங்க… அம்மா அழாதம்மா..” என்று இருவரையும் தேற்ற முயற்சித்தாள் அவள்…

“பாருங்க தம்பி… கல்யாணம்னா ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டு, எனக்கு இப்படி மாப்பிள்ளை வேணும், அப்படி வேணும்னு கேட்டு, பெத்தவங்களை ஒருவழி பண்ணிடுவாங்க.. ஆனா என்னோட பொண்ணு எங்க ரெண்டுப் பேரோட விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்து, உங்களை நேர்ல கூட பார்க்காம இந்த கல்யாணத்துக்கு விருப்பத்தை தெரிவிச்சா.. இன்னைக்கு இந்த கல்யாணம் நடக்காதுன்னு அவக்கிட்ட எப்படி சொல்லுவேன்…

ஒரு தடவை கல்யாணம் நின்னா.. அந்தப் பொண்ணுக்கு திரும்ப திருமணம் நடக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..?? இதெல்லாம் உங்களுக்குப் புரியாதா..??” என்றுக் கேட்டார்.

இதுவரைக்கும் நர்மதாவின் முகத்தை கூட சரியாக பார்க்காத துஷ்யந்த்.. இப்போது அவள் முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசினான்… இதுவரையும் அவளுக்கு துரோகம் செய்வதாக இருந்த குற்ற உணர்வு, ஆனால் இன்றோ தன்னோட மனசுல இருப்பதை சொல்லப் போகும் நினைப்பே, அவளை நேராக பார்க்க முடிந்தது…

“நர்மதா… நான் செய்யறது மன்னிக்க முடியாத குற்றம் தான்… ஆனா எனக்கு வேற வழி தெரியல… என்னால உங்களை கல்யாணம் செஞ்சுக்க முடியாது நர்மதா… என்னோட மனசுல நான் ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு இடம் கொடுத்துட்டேன்… அப்படியிருக்க, என்னால உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டு சந்தோஷமா வாழ முடியாது… புரிஞ்சுக்கங்க நர்மதா.. உங்க அப்பா, அம்மா எமோஷ்னலா பேசறாங்க… நீங்களாவது என்னோட நிலைமையை புரிஞ்சுக்கோங்க..” என்று கூறினான்..

தன்னோட அம்மா, அப்பாவை வருத்தப்பட வைக்கக் கூடாதென்று தான், அவள் இவ்வளவு தூரம் வந்ததே… அப்படியிருக்க இவனோ இவ்வளவு எளிதாக அவர்களை கஷ்டப்படுத்திப் பார்க்கிறானே என்று அவளுக்கு கோபம் தான் வந்தது… “உங்களுக்கு இன்னைக்கு தான் இதெல்லாம் புரியுதா..?? உங்க மனசு உங்களுக்கு முன்னாடியே தெரியாதா..?? இப்போ, இந்த சூழ்நிலையில இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்றீங்களே..

எங்களை மாதிரி நடுத்தர குடும்பத்துக்கெல்லாம் பெருசா எந்த ஆசையும் இருக்காது… தன்னோட பிள்ளைங்களுக்கு நல்ல படிப்பைக் கொடுத்து, அவங்களுக்கு நல்லப்படியா திருமணம் செஞ்சு, அவங்க நல்லா வாழறதை பார்க்கற திருப்தி கிடைச்சாப் போதும்னு தான் பெத்தவங்க நினைப்பாங்க… இப்போ நீங்க அந்த கனவையே அழிக்கப் பாக்கறீங்களே..” என்றாள் அவள்.

“எனக்கும் உங்க அப்பா, அம்மா நிலைமை புரியுது நர்மதா.. அவங்க ஆசைப்படி நீங்க நல்லா வாழனும்னு தான் நான் நினைக்கிறேன்… நானும் கல்யாணத்துக்குள்ள என்னோட மனசை மாத்திக்க முடியும்னு தான் நினைச்சேன்… ஆனா அது முடியல.. என்னால என்னோட மனசை மாத்திக்க முடியல… அப்படி இருக்கும்போது நான் உங்களை கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அது உங்களுக்கு பண்ற துரோகம் இல்லையா…?? மனசுல இன்னொரு பொண்ணுக்கு இடம் கொடுத்துட்டு, உங்களோட எப்படி வாழ முடியும்.. நீங்களே சொல்லுங்க..” என்று அவன் நிலைமையை புரிய வைக்க முயற்சி செய்தான்…

அவளுக்கும் அவன் நிலைமை புரியத் தான் செய்தது… இதோ இப்போது வரையிலுமே, இவளும் இப்படி தானே தன் மனசில் நினைக்கிறாள்… என்ன பெற்றவர்களுக்காக யோசித்து, தான் நினைத்ததை செய்ய முடியாமல் தவிக்கிறாள்… ஆனால் ஒரு ஆண் மகனாய் அவன் பட்டென்று தன் முடிவை கூறிவிட்டான்… அது குறித்து தன் மனதில் ஒரு நிம்மதி வந்து அவளுக்கு குடியேறியது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.