(Reading time: 16 - 32 minutes)

விவேக் ஸ்ரீநிவாசன் - 07 - வத்ஸலா

 

vs

முன் கதை சுருக்கம்!!!     

மேகங்களின்  காதலன் வானத்தின் அரசன் இந்த விமானி விவேக் ஸ்ரீநிவாசன். அப்பாவின் வார்த்தைகளே வேதம், அப்பாவின் பெயரே தினமும் அவன் உச்சரிக்கும் மந்திரம். வாழ்க்கையில் அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் உறுதுணை அவன் அப்பா. ஆனால் இன்று???

உடன் படித்து அவனுடன் பணி புரியும் ஹரிணியை அப்பாவின் வார்த்தை தட்டாத மகன் விவேக் திருமணம் செய்ய மறுத்துவிட அந்த கோபத்தில் உழன்று கொண்டிருக்கும் ஹரிணி!!!! நண்பனாய் இருந்தும் தனது சுயநலத்தில் விவேக்குக்கு பெரிய துரோகம் செய்து விட்ட சுதர்ஷன்!!! இவர்கள் ஒரு புறம் இருக்க....

பெண் மருத்துவர் சுஹாசினியின் பதிமூன்று வயது மகன் ஸ்ரீநிவாசனுடன்  ஏற்படும் நட்பு விவேக்கை  ஏனென்றே தெரியாத ஒரு பரவசத்தில் தள்ளுகிறது. இதில் ஹரிணி இந்த சுஹாசினியின் தங்கை என்பது இவன் அறியாத விஷயம்.

இதனிடையே சுஹாசினி, ஹரிணியின் தந்தை தாமோதரன் பேருந்தில் சென்னை வந்துக்கொண்டிருக்க, ஹரிணியும் சுஹாசினியும் கூட இப்போது சென்னை விமான நிலையத்தில் இருக்க.... இனி???

 


து எந்த விதமான பந்தம் என்பதை அறியமாலேயே அந்த சிறுவனின் அணைப்பில் நெகிழ்ந்திருந்தான் அந்த வானத்து அரசன். அந்த ஸ்ரீநிவாசனுக்குள்ளும் அப்படி ஒரு பரவசம்.

‘அங்கிள் நீங்க ஒட்டின பிளைட்லேதான் வந்தேன். அப்போலேர்ந்து உங்களை பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தேன்....’ குதூகலமாக கூவினான் அவன்.

‘ஓ ரியலி... கரெக்டா வந்திட்டேன் பார்த்தியா ஸ்ரீனிவாஸா.??? மனமகிழ்ந்து சிரித்தான் விவேக் அவன் உச்சரித்த அந்த ஸ்ரீனிவாசாவிலேயே அவனது மொத்த பரவசமும் கலந்து வந்தது. ‘இதெல்லாம் உனக்குத்தான்’ தனது கையிலிருந்த இனிப்புகளை அவனை நோக்கி நீட்டினான் விவேக்.

இவர்கள் இருவரும் சந்தோஷத்தின் எல்லையில் பேசிக்கொண்டிருக்க அவர்களை திரும்பி பார்த்த சுஹாசினியின் முகத்தில் தன்னாலே மலர்ந்தது ஒரு புன்னகை.

‘அங்கிள் நீங்க சென்னையிலே எங்கே இருக்கீங்க??? அவன் கேட்க சின்ன புன்னகை மலர்ந்தது விவேக்கின் இதழ்களில்.

‘நான் மேகத்துலேதான் அதிகம் குடி இருப்பேன். சென்னையிலே இருக்கிற நேரத்திலே எங்க அப்பா வீட்டிலே இருப்பேன்..’

‘உங்க அப்பா எங்கே இருக்கார்???’ விவேக்கின் புன்னகை மெல்ல கலைய ஒரு ஆழமான சுவாசம் விவேக்கிடம்

‘அவருக்கென்ன எங்கேயாவது இருப்பார்.’ தளர்ந்த போன குரலில் சொன்னான் விவேக். புரியாத பார்வை பார்த்தான் ஸ்ரீநிவாசன்.

‘நாளைக்கு நீங்க மேகத்திலே இருப்பீங்களா. பூமியிலேயா???

‘நாளைக்கா??? நாளைக்கு......’ அதை தாண்டி எதுவும் சொல்ல வரவில்லை விவேக்குக்கு.. ‘நாளை!!!’  என்ற அந்த நினைவிலேயே விவேக்கின் குரல் மொத்தமாக ஸ்ருதி இழந்து போயிருந்தது.

‘அங்கிள்..’ .ஸ்ரீநிவாசன் கலைத்து அவனை திசை திருப்ப

சொல்லுப்பா உனக்கு என்ன வேணும் ஸ்ரீனிவாசா.....’ என்றான் விவேக் சமாளித்துக்கொண்டு.

‘நாளைக்கு என்னோட பர்த்டே நீங்க எங்க வீட்டுக்கு வரீங்களா. எங்க அம்மாவும் இந்த வருஷம் எங்களோட வந்திட்டாங்க இல்ல. நாங்க பெருசா பார்ட்டி அர்ரெஞ் பண்ணி இருக்கோம்..

‘அங்கிள் நாளைக்கு ஒரு நாள் ரூம் விட்டு வெளியே வரமாட்டேன்டா. யாரோடையும் பேச மாட்டேன்.. அதனாலே இன்னொரு நாள் வரேன் உங்க வீட்டுக்கு ஒகே வா...’

‘அங்கிள்.. அங்கிள் ப்ளீஸ் அங்கிள்.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டே எல்லாம் உங்களை பைலட் அங்கிள்னு இன்ட்ரோ பண்ணி வைக்கணும் ...... ப்ளீஸ்... அங்கிள்..’

விவேக்கின் சூழ்நிலை அறியாமல் இவன் கேட்டானோ இல்லை இவனை கேட்க சொல்லி ஏதோ ஒரு சக்தி உந்தியதோ தெரியவில்லை. அவனுடன் பல வருட பழக்கம் போல் பிடிவாதமாக கேட்டுகொண்டே இருந்தான் ஸ்ரீநிவாசன்.

‘என்ன ஸ்ரீனிவாசா??? நீ என்ன சின்ன குழந்தையா??? இப்படி அடம் பிடிக்கிறே...’ இவன் சொல்லிக்கொண்டிருக்க . அதற்குள் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு இவர்கள் அருகில் வந்திருந்தாள் சுஹாசினி.  

‘நீங்க டாக்டர் ஸ்ரீநிவாசன் சன்தானே ...’ கேட்டாள் நிறையவே சந்தோஷம் ஏறிய குரலில்.

அப்பாவின் பெயர் காதில் ஒலித்ததும் விருட்டென நிமிர்ந்து எழுந்தான் மகன். அவசரமாக அவள் முகம் ஆர்வத்துடன் ஆராய்ந்தான் அவன்.

‘உங்களுக்கு அப்பாவை தெரியுமா??? அவன் கேட்ட நேரத்தில் அத்தனை பளபளப்பு அவன் கண்களில். அவன் பேட்டியை படித்ததிலேயே அவன் மனம் புரிந்ததே அவளுக்கு. இதமாய் புன்னகைத்தாள் அவள்.

‘அவர் ‘எ..ங்..க’ டாக்டர் என்றாள் சுஹாசினி. அந்த ‘எங்க’ வில் அவள் கொடுத்த அந்த அழுத்ததில் உயர்ந்தன அவன் புருவங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.