(Reading time: 12 - 24 minutes)

அமேலியா - 23 - சிவாஜிதாசன்

Ameliya

சந்தின் வீட்டில் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. யாரும் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கொரு திசையில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் சிந்தனை எல்லாமே அமேலியா வரைந்த ஓவியத்திலேயே நிலைத்திருந்தது.

நாராயணன் தன் அறையில் சோர்வாக படுத்திருந்தார். சற்று முன்னர் தான் திரவ ஆகாரத்தை உண்டு மாத்திரைகளை விழுங்கியிருந்தார். மருத்துவமனையை விட்டு வந்தும் இன்னும் அதே நினைவோடு தான் இருந்தார். அவருக்கு உறக்கம் வரவில்லை. இப்படியும் அப்படியுமாக புரண்டார். அமேலியா வரைந்த தன் மனைவியின் முகம் மனதில் நிழலாடியது.

அதுவரையில் தன் வாழ்வில் சந்தித்திருக்காத அதிர்ச்சி, அதிசயம், பேரானந்தம், அதீத மகிழ்ச்சி, அழுகை கலந்த ஆனந்தம் என வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எல்லா உணர்ச்சிகளையும் ஒரு நொடியில் கண்டுவிட்டார் நாராயணன். அப்படியொரு தருணத்தை இனி தன் வாழ்வில் காண்போமா என எண்ணினார். அமேலியா, திரையை விலக்கி தான் வரைந்த ஓவியத்தைக் காட்டிய பொழுது நாராயணன் ஒரு நிமிடம் ஆடிப் போனார்.

அதை ஓவியம் என்று கூறவே முடியாது. சாட்சாத் தன் மனைவியே திடீரென நேரில் நின்றது போல் ஓர் உணர்வு நாராயணனுக்கு எழுந்தது. சிறு பிள்ளை போல அழுததைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லை. தன் மனைவியின் மேல் உள்ள பாசத்தை கண்ணீரால் வெளிப்படுத்தியதை எண்ணி அவர் ஏன் வெட்கப்பட வேண்டும். அவர் நெஞ்சம் பூரிப்பில் நெகிழ்ந்தது. 

வசந்தும் மேகலாவும் இன்னும் அதிர்ச்சி விலகாமல் அமர்ந்திருந்தனர். தாயைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் அவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.

சிறு வயதில் தன் தாயின் மடியில் விளையாடியது, தாயிடம் அடி வாங்கியது, அன்பு பொழிந்தது என காட்சிகள் மேகலாவின் மனக்கண் முன்னால் ஓடியது. மரணப்படுக்கையில் தன் தாயின் முகத்தைக் கண்டபொழுது இதயத்தை முள்ளால் கிழித்ததைப் போன்ற வலியை இன்று மீண்டும் உணர்ந்தாள்.

'எவ்வளவு தத்ரூபமான ஓவியம்!'. பார்த்து வரைவது பெரிய விஷயம் அல்ல. பார்க்காத ஒருவரை அதுவும் பூமியில் இல்லாத ஒருவரை வரைவது என்பது அசாத்தியம் என்று மேகலாவின் மனம் கூறியது.

கதவைத் திறந்துகொண்டு நாராயணன் வெளியே வந்தார். வசந்தும் மேகலாவும் இருந்ததைக் கண்டு லேசாக திடுக்கிட்டார்.

"நீங்க இன்னும் தூங்கலையா?"

"தூக்கம் வரலைப்பா" என்றாள் மேகலா.

"பதினொரு மணிக்கு மேல ஆச்சு, இன்னுமா தூங்காம இருக்கீங்க?"

வசந்த் எழுந்து தன் அறைக்கு சென்றான். அவன் மாடிப்படி ஏறி தன் கண்ணில் இருந்து மறையும்வரை பொறுத்திருந்த நாராயணன், ஹாலின் நடுவில் இருந்த ஓவியப் பலகையில் தன் மனைவியின் ஓவியத்தை வாஞ்சையோடு பார்த்தார். ஓவியத்தின் அருகே சென்றவர் தன் மனைவியின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஓவியத்தில் லேசாக தூசி படிந்திருந்தது. அதை தனது கைக்குட்டையால் துடைக்கப்போனவர், ஓவியம் கலைந்து விடுமோ என பயம் கொண்டார். தூசியை அகற்ற வாயால் மெதுவாக ஊதினார்.

"அந்த பொண்ணு ரொம்ப அழகா வரைஞ்சிருக்கா" மேகலாவைப் பார்க்காமல் ஓவியத்தை பார்த்தபடியே கூறினார்.

"எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குப்பா"

"எனக்கும் தான். உன் அம்மாவுடைய முகம், எப்போவும் போடுற மூக்குக் கண்ணாடி, நெற்றியில் வைக்குற சின்ன குங்குமப்பொட்டு..."  என நிறுத்தியவர், "உனக்கொண்ணு தெரியுமா?" என மேகலாவைப் பார்த்தார்.

"சொல்லுங்க அப்பா"

"உன் அம்மாவுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க துளியும் விருப்பம் இல்லை. ஒருவேளை நான் அழகில்லாமல் குள்ளமா இருந்ததும் ஒரு காரணமா இருக்கலாம். கல்யாணத்துக்கு அவ பெருசா தன்னை அலங்காரம் பண்ணிக்கலை. வீட்டுல இருக்க பெண்கள் எப்படி தங்களை சாதாரணமா அலங்காரம் செஞ்சிக்குவாங்களோ அப்படி தான் வந்தா. ஆனா அவ பொட்டு வச்சிருந்த விதம் அவ்வளவு அழகா இருந்துச்சி"

நாராயணன் சிறிது நேரம் நிறுத்தினார். மீண்டும் அவர் கண்கள் ஓவியத்தை பார்த்தன.

"கல்யாணம் ஆன அப்புறம் காலைல வேலைக்கு போகும்போது எனக்கு பொட்டு வச்சிட்டு தான் வெளியே அனுப்புவா. சில நேரங்கள்ல அவ கேட்டதுண்டு, நீங்களே பொட்டு வச்சிட்டு போங்க. நான் இல்லைனா என்ன பண்ணுவீங்கன்னு"

நாராயணன் பேச்சை நிறுத்தி மேகலாவைப் பார்த்தார்.

"அவ சாதாரணமா சொன்னாளோ இல்ல வேறு எந்த அர்த்தத்தில சொன்னாளோ எனக்கு தெரியாது. இப்போ அவ இல்லை"

"வருத்தப்படாதீங்க அப்பா"

பெருகிய கண்ணீரை அடக்கிய நாராயணன், "அந்த பொண்ணு பேரு  என்ன?" என்று கேட்டார்.

"அமேலியா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.