(Reading time: 12 - 24 minutes)

"சாப்பிட்டாளா?"

"யாருமே சாப்பிடலைப்பா"

"சாப்பிடாம எல்லோரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"

"எங்களுக்கு சாப்பிட தோணலைப்பா"

"என்ன முட்டாள்தனம் இது. முதல்ல சாப்பிடுங்க. எல்லோரையும் கூப்பிடு"

மேகலா வசந்தின் அறைக்கு சென்று வசந்தை அழைத்தாள் பின்பு தன் அறைக்கு சென்றாள். அங்கு அமேலியாவும் நிலாவும் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

முதலில் நிலாவை எழுப்பிய மேகலா பின்பு அமேலியாவை எழுப்பினாள். 

"அமேலியா அமேலியா"

திடுக்கிட்டு விழித்த அமேலியா. மேகலாவை புரியாமல் பார்த்தாள். 'வா சாப்பிடலாம்' என சைகையில் அழைத்தாள் மேகலா.

'எனக்கு பசியில்லை' என்று சைகை காட்டினாள் அமேலியா.

அவளை விடாப்பிடியாக அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள் மேகலா. உறக்கம் கலையாத கண்களோடு வெளியே வந்த அமேலியா டைனிங் டேபிளில் வசந்த் அமர்ந்திருந்ததைக் கண்டு சற்று பின்வாங்கினாள்.

அமேலியாவின் கையைப் பற்றிய மேகலா, அவளை வசந்தின் எதிரே உள்ள நாற்காலியில் அமரவைத்து எல்லோருக்கும் உணவைப் பரிமாறினாள்.

எதிரில் இருக்கும் வசந்தின் முகத்தை ஒருமுறை பயத்தோடு நோக்கினாள் அமேலியா. அவன் ஓரக் கண்ணால் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்ததும் அவள் பயம் அதிகரித்தது. உணவை மெல்ல விழுங்கினாள்.

அவள் கண்கள் மெல்ல நகர்ந்து சோபாவில் அமர்ந்திருந்த நாராயணனை நோக்கின. அவரும் அமேலியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முகத்தில் வெறுப்புணர்ச்சி இல்லாமலிருந்தது அமேலியாவிற்கு சற்று நிம்மதியைத் தந்தது. தான் வரைந்த ஓவியம் அவரைத் திருப்திப்படுத்தியது மட்டுமில்லாமல் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது என்று அமேலியா புரிந்துகொண்டாள்.

அமேலியா நாராயணனைப் பார்த்து புன்னகை புரிந்தாள். நாராயணன் பதிலுக்கு புன்னகை புரியவில்லை என்றாலும் கனிவான பார்வையை வீசினார். அமேலியா மீண்டும் மெதுவாக வசந்த்தை நோக்கினாள்.

அவனது கவனம் அமேலியா வரைந்த தன் தாயின் ஓவியத்திலேயே நிலைத்திருந்தது. சிந்தனை ரேகைகள் அவன் முகம் முழுவதும் பரவியிருந்ததால் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிலையென அமர்ந்திருந்தான்.

"வசந்த், என்ன இன்னும் சாப்பிடாம இருக்க?" மேகலாவின் குரல் வசந்தின் சிந்தனையைக் கலைத்தது. இருந்தும் யோசனையுடனேயே உண்ண துவங்கினான்.

"அந்த பொண்ணு விஷயத்துல என்ன முடிவு பண்ணிருக்கீங்க?" தன் பேச்சைத் தொடங்கினார் நாராயணன்.

"இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கல" என நாராயணனின் முகத்தைப் பார்க்காமல் சாப்பிட்டபடியே கூறினான் வசந்த்.

"அதுக்காக அந்த பொண்ண  காலமெல்லாம் நம்ம வீட்டுல வச்சுக்கபோறிங்களா?"

"கொஞ்ச நாள் போகட்டும். ஏதாச்சும் வழி கிடைக்கும்"

"முதல்ல ஒண்ணு புரிஞ்சிக்கோங்க. அந்த பொண்ணு விருப்பம் இல்லாமலும் வேற வழி தெரியாமலும் தான் நம்ம கூட இருக்கு. அந்த பொண்ணை அவங்க நாட்டுக்கு அனுப்புறதுக்கான முயற்சியை பண்ணுங்க. நான் ஏன் சொல்றேன்னா, அந்த பொண்ணு இனி அவளோட வீட்டுக்கு போக முடியாதுனு நெனச்சி பயத்துல விபரீதமா ஏதாச்சும் முடிவு எடுத்துக்க போறா"

வசந்தும் மேகலாவும் தந்தையின் கூற்றை ஆமோதிப்பதாய் யோசனையில் இறங்கினார்கள். தன்னைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என உணர்ந்த அமேலியா என்ன பேசுகிறார்கள் என புரியாமல் தவித்தாள்.

வசந்த் சாப்பிட்டு முடித்துவிட்டு தன் அறையை நோக்கி சென்றான். அறையை நெருங்கும் முன் அவனது கண்கள் அமேலியாவை நோக்கின. அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்ட வசந்த் அமேலியாவின் நிலையைப் பற்றி சிந்தித்தான்.

அப்பா சொன்னது போல், அமேலியா மனம் வெறுத்து தவறான முடிவை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இப்பொழுது அவளுக்கு தேவை, தான் ஊருக்கு செல்வோம் என்ற நம்பிக்கை. அதை எப்படி கொடுப்பது? எப்படி புரியவைப்பது?

அவன் மனம் இன்னொன்றையும் சிந்தித்தது. அமேலியா விதியென இந்த வீட்டில் இருக்கவில்லை. அவளுக்கு இங்கே இருக்க பிடித்திருக்கிறது. அதற்கான சரியான காரணத்தை அவனால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், மிகவும் மெனக்கெட்டு தன் தாயின் உருவத்தை அவள் வரைய வேண்டும் என்று அவசியமில்லை என்றும் யோசித்தான். 

தன் தந்தையை மகிழ்விப்பதற்காகவே அவள் ஓவியம் வரைந்திருக்கிறாள். அவள் விருப்பத்தோடு தான் இந்த வீட்டில் தங்கியிருக்கிறாள் என்பதற்கு இது ஒன்றே சாட்சி.

அமேலியா வரைந்த ஓவியத்தை மீண்டும் மனக்கண் முன்னால் கொண்டு வந்தான் வசந்த். 'என்ன ஓர் அழகான உயிரோட்டமுள்ள ஓவியம்!' .தன் தாயைப் பார்த்தவுடன் அவன் கண்களில் தானாக நீர் கசிந்ததை படுக்கையில் சாய்ந்தபடி நினைத்துப் பார்த்தான் வசந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.