(Reading time: 12 - 24 minutes)

படுக்கையின் ஓரத்தில் ஓவியர் வரைந்து கொடுத்த மாடல் பெண்ணின் ஓவியம் இருப்பதைக் கண்டு அதை கையில் எடுத்தான் வசந்த். ஓவியத்தைப் பிரித்துப் பார்த்தான். அமேலியா வரைந்த ஓவியத்திற்கும் கையில் இருந்த ஓவியத்திற்கும் மலையளவு வேற்றுமை இருப்பதை உணர்ந்தான்.

'இந்த ஓவியத்தை அமேலியா வரைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், அதை எப்படி செய்வது. அவள் ஓவியத்தை வரைவாளா?'

ரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் ஜெஸிகா அலுவலகத்திற்கு வந்தாள். அவள் உடல் நிலை, காய்ச்சலில் இருந்து விடுபட்டு சிறிதளவு முன்னேறியிருந்தது. அன்றும் அவள் விடுப்பு எடுக்கத் தான் நினைத்திருந்தாள். காலையில் டைரக்டர் போனில் அழைத்ததால் வேறு வழியின்றி வரவேண்டியதாகிவிட்டது. 

"என்ன ஜெஸ்ஸி மூணு நாளா உன்னை பாக்கவே முடியல" என்றது ஒரு குரல்.

குரல் வந்த திசையை நோக்கினாள் ஜெஸிகா. அவளை நோக்கி புன்முறுவலோடு வசந்த் வந்துகொண்டிருந்தான்.

"உன்னைத் தான் பார்க்க முடியவில்லை என் அருமை தோழனே"

"அடேங்கப்பா சுத்தமான தமிழ்ல பேசி என்னை சாச்சிட்டியே" என்று சிரித்தான் வசந்த்.

"அப்பாவுக்கு உடல்நிலை எப்படி இருக்கு? வீட்டுக்கு வந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்"

"நல்லாயிருக்காரு. நேத்து தான் டிஸ்சார்ஜ் பண்ணாங்க"

"நானும் உங்க அப்பாவை வந்து பார்க்கலாம்னு தான் நினைச்சேன். லொகேஷன் லொட்டு லொசுக்குன்னு ஒரே டென்ஷன். பற்றாக்குறைக்கு காய்ச்சல் வேற"

"இப்போ பரவாயில்லையா?"

"ம்ம் உன் ஃபிரென்ட் ஜானை நீ பாத்தியா?"

"இல்லையே. அவனை பார்த்து நாளாச்சு. நான் இருந்த டென்ஷன்ல அவனை பத்தி பெருசா கண்டுக்கல"

"அவன் வீட்டை காலி பண்ணிட்டான்"

"ஏன்?"

"என்னை மறக்குறதுக்காக இருக்கலாம். இப்போவாவது அவன் வயசுக்கு ஏத்த அறிவு வந்திருக்கே"

"இப்போ எங்க இருக்கான்?"

"கடற்கரை ஓரமா இருக்க ஒரு அழகான வீட்டுல"

"உனக்கு எப்படி தெரியும்?"

"தெரியாத்தனமா அங்க போய் தொலைச்சிட்டேன்"

"அவனை பார்க்காம இருக்க முடியலையா?" என்று சிரிப்போடு கேட்டான் வசந்த்.

"ச்சே லொகேஷன் பார்க்க போயிருந்தேன். பார்த்தா அந்த வீட்டில தான் அவன் இருந்தான்"

வசந்த் சப்தமிட்டு சிரித்தான். அந்த சிரிப்பு சப்தம் அவர்களைக் கடந்து நடந்து செல்வோரின் கண்களை அவன் மீது பாயச் செய்தது.

"எதுக்கு இப்போ லூசு போல சிரிக்கிற?" சற்று எரிச்சலுடனே கேட்டாள் ஜெஸிகா.

"விதி எப்படி ஒண்ணு சேர்க்குது பாத்தியா ஜெஸ்ஸி"

"ஷட் அப் வசந்த் இப்படி பேசுறத நிறுத்து"

"சரி சரி கோபப்படாத" என்று அவளை சாந்தப்படுத்திய வசந்த் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

"என்ன யோசிக்கிற?"

"இல்லை, அமேலியாவ அவ சொந்த நாட்டுக்கு அனுப்புறதுக்கு ஜான் என்கிட்டே ஒரு டீல் போட்டு இருந்தான்"

"என்ன டீல்?"

"உன்னை அவன் கூட நான் சேர்த்து வைக்கணும்னு ஆசைப்பட்டான்"

"வசந்த்!" என்று கோபத்தின் உச்சியில் நின்று கொண்டு வார்த்தைகளை உதிர்த்தாள் ஜெஸ்ஸி.

வசந்த் என்ன செய்வதென்று திருதிருவென விழித்தான்.

"ஹாய் வசந்த்" என்றது ஒரு குரல். வசந்த் திரும்பினான். டைரக்டர் அவர்களைக் கடந்து புன்னகையோடு சென்றார்.

"குட் மார்னிங் ஜெஸ்ஸி"

"குட் மார்னிங் சார்"

மின்தூக்கியை நெருங்கும் முன் நடப்பதை நிறுத்திய டைரக்டர் வசந்த்தை நோக்கினார்.

"வசந்த் இங்கே வா. ஜெஸ்ஸி நீயும் தான்"

இருவரும் டைரக்டரின் முன்னால் வந்து நின்றார்கள்.

"உங்கிட்ட விளம்பர ஹீரோயின் ஓவியத்தை வரையுற பொறுப்பை கொடுத்தேனே முடிச்சிட்டியா?"

"எஸ் சார்" என்று கையில் வைத்திருந்த ஓவியத்தாளை அவரிடம் நீட்டினான்.

அதை வாங்கி பிரித்துப் பார்த்த டைரக்டர், வெறுப்போடு உதட்டை பிதுக்கினார்.

"இதான் ஓவியமா வசந்த்? இப்படியா நான் வரைய சொன்னேன்?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.