(Reading time: 16 - 32 minutes)

‘அது... வந்து... நான்.. ப்ளீஸ்டா... கண்ணா.. என்னை கட்டாய படுத்தாதே. இன்னொரு நாள் வரேன் .’ சற்றே தடுமாற்றத்துடன் சொல்லிவிட்டு சுஹாசினியையும், ராகுலையும் பார்த்து தலை அசைத்துவிட்டு  ‘நான் கிளம்பறேன் ஸ்ரீனிவாசா...’ சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தான் விவேக்.

சில நொடிகள் அங்கே மௌனம். விவேக் கண்ணிலிருந்து மறையும் வரை ஹரிணியின் முக இறுக்கம் தளரவில்லை.

‘அப்பா எப்படி ஹரிணி இருக்கார்??? கேட்டாள் ஹாசினி.

‘ஆங் அப்பாவா??? ம்... அவர் கூட சென்னைதான் வந்திட்டு இருக்கார். காலையிலே போன்லே பேசினார் என்கிட்டே..’ என்றாள் ஹரிணி படபடவென. அவர் திருமண வீடுகளில் சமையல் வேலை செய்வது தெரியாதே சுஹாசினிக்கு!!!

‘சரி நாளைக்கு அவரையும் கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்திடு ஹரிணி. இவனுக்கு நாளைக்கு பிறந்தநாள்..’ என்றவள் மெல்ல கேட்டாள் ‘அப்பா இன்னமும் என் மேலே கோபமாதான் இருக்காரா???’

‘கோபம்!!! .ம்.. கொஞ்சம் இருக்குதான்.. நான் எப்படியாவது கூட்டிட்டு வரேன்..’ சொன்னாள் ஹரிணி.

அதே நேரத்தில் ஒரு வேளை விவேக் அங்கு வந்து நிற்பானோ என்று ஒரு எண்ணம் அவள் அடி மனதில் இருக்கத்தான் செய்தது.

வீட்டுக்கு வந்திருந்தான் விவேக். எப்போதும் போல் எல்லாரும் உறங்கி விட்டிருந்தனர். அறையை அடைந்து கதவை சாத்திக்கொண்டான் விவேக். நிசப்தம் மட்டுமே குடி இருந்தது அங்கே. அவனுக்கு துணையாக அங்கே இருந்தது அந்த ஈஸி சேர் மட்டுமே!!!

சிறு வயது முதலே அவனுக்கும் அவனது அப்பாவுக்குமான பந்தத்துக்கு சாட்சியாக நின்றிருக்கிறது இந்த சாய்வு நாற்காலி. உடை மாற்றிக்கொண்டு வந்து அந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டான் அவன்.

நாளை!!! மூன்று வருடங்களுக்கு முன்னால் அந்த தினம் அவன் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம். வந்து விட்டதே என்ன செய்ய!!! மூன்று வருடங்களாக இந்த நாளில் அவன் இந்த அறையை விட்டு வெளியே வருவதில்லை. யாருடனும் பேசுவதும் இல்லை.

‘அப்பா!!!’ வாய்விட்டு சொன்னான் அவன். இதயம் இமயமலையாய் கனத்து வலித்தது.

கண்களை மூடிக்கொண்டான் விவேக். அப்பாவின் மடியில் படுத்துக்கொள்ளும் ஒரு உணர்வு தந்தது அந்த சாய்வு நாற்காலி. சிறு வயதில் பல முறை இதில் அமர்ந்துக்கொண்டு அவனை தன் மீது சாய்த்துக்கொண்டிருக்கிறார் அப்பா.

அப்போது இவனுக்கு ஒன்பது வயதிருக்கும். ஏதோ ஒரு உடல் நல குறைவு. சிறியதாய் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அப்பாவே ஒரு குழந்தைகள் நல மருத்துவர் என்பதால் அவரே இதை செய்து விடுவதென முடிவெடுத்திருந்தார்.

அவனுக்கு அவர் என்ன செய்ய போகிறார் என்பதை அவனுக்கு புரியும் வகையில் விளக்கியும் விட்டிருந்தார் அவர். எல்லாவற்றுக்கும் பயப்படும் விவேக்குக்கு இதற்கு ஏனோ பயமே இல்லை. மறுநாள் அறுவை சிகிச்சை எனும் நிலை. இதே சாய்வு நாற்காலியில் அவரும் சாய்ந்துக்கொண்டு அவனை தன் மீது சாய்த்துக்கொண்டார்.

‘நாளைக்கு எதுக்கும் பயப்படகூடாது சரியாடா கண்ணா..’ என்றார் மெதுவாக.

‘அப்பா... எனக்கு பயமே இல்லைபா. நீங்கதான் என் கூடவே இருப்பீங்களே. எங்க அப்பா என்னை பத்திரமா பார்த்துப்பார். எப்பவும் என் கூடவே இருப்பார் ’ சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு அவர் மீது சாய்ந்துக்கொண்டான்.

அப்போது அவர் அவனை அணைத்துக்கொண்ட அந்த அணைப்பு இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது விவேக்குக்கு. அடி மனதில் அந்த நேரத்தில் அப்பாவுக்கும் பயம் இருந்திருக்குமா??? அப்பாவுக்கு கூட பயம்வருமா தெரியவில்லை இவனுக்கு.

முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார் இரவு முழுவதும். அவை இப்போது நிகழந்தது போலே நினைவிருக்கிறது அவனுக்கு. கன்னத்தில் அந்த ஈரம் கூட மிச்சமிருப்பதை போல் ஒரு உணர்வு.

‘அப்பா!!!’ என்றான் மறுபடியும். ‘எங்க அப்பா எங்கே இருந்தாலும் என் கூடவே இருப்பார்’

தனது கைப்பேசியில் அந்த புகைப்படத்தை எடுத்தான். அது சிறு வயதில் அப்பாவின் மடியில் அவன் அமர்ந்திருக்கும் போது எடுத்த புகைப்படம். இப்போதும் அவன் அதே நிலையில் இருப்பது போலேதான் தோன்றுகிறது அவனுக்கு.

அப்பாவை பற்றிய எண்ணங்களிலும் அவருடைய புகைப்படங்களுடனுமே அந்த சாய்வு நாற்காலியில் கழிந்துக்கொண்டிருந்தது அவனது இரவு. துளியும் உறக்கம் இல்லை.  விடிந்தும் விட்டது அன்றைய நாள். ஆனாலும் அந்த இடத்தை விட்டுக்கூட அசைய மனமில்லை விவேக்குக்கு

அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும். அவன் அன்றைய தினம் அறையை விட்டு வெளியே வர மாட்டான் என தெரியும். சாப்பிடக்கூட மாட்டன்தான் அதனால் அம்மா கூட  அவனை தொந்தரவு செய்யக்கூட மாட்டார்.

நேரம் காலை எட்டு மணி. அப்போது அவனது கைப்பேசிக்கு வந்தது அந்த அழைப்பு. ஏதோ ஒரு எண் ஒளிர்ந்தது அதில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.