தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 01 - சிவாஜிதாசன்

அத்தியாயம் 1.1 : வீரபுரம்
வீரபுரம் :
சுற்றிலும் நதிகள் நிறைந்த தீவு போன்ற ஒரு நாடு. அந்த நதிகளில் மீன் படைகள் போர்வீரர்களைப்போல அணிவகுத்து நீந்தின. மிதக்கும் வெந்நிறப்பூக்கள் போன்ற அன்னங்கள் வான்மேகங்கள் போல மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. யானைகள் தங்கள் துதிக்கைகளால் தண்ணீரைப் பீய்ச்சியடித்து குதூகலத்தை வெளிப்படுத்திய காட்சி ஒரு தற்காலிக நீர்வீழ்ச்சியை அங்கே உருவாக்கியது. புள்ளிமான்கள் நதிக்கரையோரம் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. பொய்கைகள், தடாகங்கள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில், தாமரையும் அல்லியும் பூத்துக் குலுங்கிய காட்சி, அவை தன் காதலனான சூரியனைப் பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்ததைப்போல் இருந்தன. எங்கு பார்த்தாலும் பச்சைப் போர்வையைப் போர்த்தியது போல் புல்வெளிகளும், முக்கனிகளான மா, பலா, வாழை மரங்கள் நிறைந்தும் காணப்பட்டன. ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள் வீரபுர அழகை ரசித்துக்கொண்டிருந்தன.
வீரபுரம் இயற்கை வளம் நிறைந்தது மட்டுமல்லாமல், பெயருக்கு ஏற்றார் போல வீரர்கள் நிறைந்த ஒரு சிற்றரசு. ஆண்களுக்கு, பதின்ம வயதின் ஆரம்பத்திலேயே போர்க்களப் பயிற்சி கொடுப்பார்கள். அதனால், அவர்களின் பதின்ம வயதின் இறுதியில் யாராலும் வெல்லமுடியாத பெரும் வீரர்களாய் உருவெடுப்பார்கள். கண்ணுக்கெதிரே ஒரு போர்ப்படையே நின்றாலும், யானைக்கூட்டத்தை எதிர்க்கின்ற சிங்கத்தைப் போல அஞ்சாமல் நிற்பார்கள். வீரத்தில் மட்டுமின்றி கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினார்கள். பெண் குழந்தைகளை பண்பாட்டின் பொக்கிஷமாக வளர்ப்பார்கள். ஒரு பெண் எப்படி தைரியமாக இருக்கவேண்டும் என்பதற்கு வீரபுரப் பெண்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இப்போது கதைக்குள் போகலாம்.
மாலை நேரம்.
ஒரு பிரம்மாண்ட மைதானத்தில் வீரர்கள் பலர் போர்க்களப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த மைதானத்தின் நடுவே பல வீரர்கள் சுற்றி நிற்க, இரண்டு வீரர்கள் குருவின் மேற்பார்வையில் வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் சுற்றி நின்றுகொண்டிருந்த வீரர்கள் கரகோஷத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
வாள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களில் ஒருவன் இன்னொருவனை கீழே தள்ளி அவனுடைய நெஞ்சிற்கு நேரே வாளை நீட்டினான். அதுவே அவன் எதிரி நாட்டு வீரனாக இருந்திருந்தால் அந்நேரம் அந்த வாள் அவன் நெஞ்சில் பாய்ந்திருக்கும். உடனே, சுற்றி நின்றுகொண்டிருந்த வீரர்கள், "ரவிவர்மன்! ரவிவர்மன்!" என்று கோஷம் எழுப்பினார்கள்.
ரவிவர்மன் : வீரபுரத்து இளவரசன்; அந்நாட்டின் எதிர்கால மன்னன்; இருபது வயதே நிரம்பிய ஒரு சிறந்த வீரன்.
வெற்றி பெற்றுவிட்டு, தன் நண்பர்களிடம் சென்று, "சம்யுக்தன் வரவில்லையா?" என்று கேட்டான்.
அவர்களில் ஒருவன், “எப்படி வருவான் இளவரசே? தங்களின் வீரத்தைப் பற்றி கேள்விப்பட்டு பேச்சு மூச்சற்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பான்” என்றான்.
தன் வீரத்தைப் பெருமைப்படுத்தியதைக் கேட்டு இளவரசனின் முகம் மலர்ந்தது.
அப்போது தூரத்தில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது. எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு குதிரை வேகமாக வந்துகொண்டிருந்தது. அது வந்த வேகத்தைப் பார்த்தால் அது ஓடி வருகிறதா? இல்லை, பறந்து வருகிறதா? என்று எல்லாரும் ஒரு கணம் திகைத்தார்கள். அவர்கள் கண்கொட்டாமல் அந்த குதிரை வந்த திசையையே நோக்கிக்கொண்டிருந்தார்கள்.
கருநிற மேகத்தைக் கிழித்துக்கொண்டு வெளிப்படும் மின்னல் போல புழுதிப்படலத்தை விலக்கிக்கொண்டு குதிரையில் ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் வீரர்களை நெருங்கி வர வர அதில் வருவது யார் என்று தெரிந்ததும் வீரர்களில் சிலரின் முகம் மலர்ந்தது. ஆனால், இளவரசரின் மலர்ந்த முகத்தில் சிறு மாறுதல் உண்டாயிற்று.
குதிரை அவர்களின் அருகில் வந்ததும் தன் முன்னங்காலை உயரத் தூக்கி பலமாகக் கனைத்தது. அந்த முரட்டுக் குதிரையை அடுத்த நொடியில் கட்டுப்படுத்தி குதிரையில் வந்தவன் கீழே இறங்கினான். அவனைப் பார்த்ததும் வீரர்களின் ஆனந்தக் கூச்சல் இளவரசருக்கு அவர்கள் கொடுத்த கரகோஷத்தையும் மிஞ்சியது.
அவன் குருவை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான். அவனுடைய கண்கள் எதிராளியை குத்திக் கிழிக்கும் கத்தியைப் போல கூர்மையாக இருந்தன. இந்திரனே அசந்து போகும் அளவுக்கு ஓர் ஆண்மையின் அழகு; எடுப்பான தோள்கள்; சிங்கத்தைப் போன்ற கம்பீர நடை. ஆம். அவன் தான் நம் கதையின் கதாநாயகன் சம்யுக்தன்.
குருவை நெருங்கிய சம்யுக்தன் சிரம் தாழ்த்தி பணிவாக வணங்கினான்.
"சம்யுக்தா! இன்று நீ மோதவிருப்பது ஒருவருடன் அல்ல இருவருடன்"
"தங்கள் உத்தரவு குருவே" என்று அவரிட்ட கட்டளையை ஆவலோடு ஏற்றுக்கொண்டான். சம்யுக்தன்.