(Reading time: 16 - 32 minutes)

அதன் பிறகு, மரத்தால் கட்டப்பட்ட ஒரு பெரிய பரண் மீது சம்யுக்தன் ஏறினான். தீப்பந்தங்கள் ஏற்றி அந்த பரணின் நான்கு ஓரங்களிலும் நட்டு வைத்தான். அங்கிருந்தபடி சுற்றிலும் பார்த்தான். ஆங்காங்கே பரண்களிலும் நிலப்பரப்புகளிலும் தீப்பந்தங்கள் ஏற்றி வீரர்கள் காவல் புரிந்ததை அவனால் காண முடிந்தது.

அப்போது பார்த்திபனும் அந்தப் பரணில் ஏறி, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டான்.

“என்ன தெரிகிறது?” என்று சம்யுக்தன் திருப்பிக் கேட்டான்.

“இன்று இளவரசருடன் சண்டையிடும்போது கொலுசின் ஒலி கேட்டதே. அந்த கொலுசு ஓசைக்குரிய பெண் இங்கே தென்படுகிறாளா என்று கேட்டேன்?”

உடனே, சம்யுக்தன் பார்த்திபனை திரும்பிப் பார்த்தான்.

“என்ன பார்க்கிறாய்? உனக்கு மட்டும் தான் கொலுசின் ஒலி கேட்குமா? எனக்கும் இரண்டு காதுகள் இருக்கின்றன, எனக்கும் கேட்கும்” என்று கூறிவிட்டு, “ஆமாம், யாரது ?” என்று கேட்டான் பார்த்திபன்.

“என்னைக்கேட்டால்?”

“உடையவனிடம் தான் கேட்க முடியும்?”

மறுபடியும் பார்த்திபனை முறைத்தான் சம்யுக்தன்.

“முறைக்காதே! அவள் உன் மாமன் மகள் பூங்கொடி என்று உனக்கும் தெரியும், எனக்கும் நன்றாகவே தெரியும். பிறகு, ஏன் நடிக்கிறாய்?”

அதற்கு, சம்யுக்தன் “நாம் காவலைப் பற்றி பேசுவோமே” என்றான்.

அப்போது, சற்று தூரத்தில் இரு குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்று சென்றது.

பார்த்திபன், “அது உன் தந்தையின் ரதம் போலிருக்கிறதே?” என்று கேட்டான்.

“ஆம், இன்று அரண்மனையில் ஏதோ அவசர கூட்டம் நடக்கவிருப்பதால் அங்கு செல்கிறார்”

பார்த்திபன், “சரி, நான் நிலப்பரப்பில் சென்று காவல் புரிகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

அவன் சென்றதும், சம்யுக்தனின் மனத்திரையில் பூங்கொடியின் உருவம் தோன்றியது.

பூங்கொடி : பொன்னிற மேனி, மேகம் போன்ற கூந்தல், பிறை போன்ற நெற்றி, நிலவு போன்ற முகம், குவளை போன்ற கண்கள், சங்கு போன்ற கழுத்து, அன்னம் போன்ற நடை, மெல்லிய இடை, பெண்களே பொறாமை கொள்ளும் ஓர் அழகு தேவதை

சம்யுக்தனும் பூங்கொடியும் அவ்வளவாக பேசிக்கொண்டது இல்லை என்றாலும் பார்வையாலும் மௌனத்தின் பரிபாஷையாலும் அவர்களின் காதல் வளர்ந்துகொண்டிருந்தது.

பூங்கொடியின் நினைவை அகற்றி மீண்டும் சம்யுக்தனின் கவனம் காவலுக்கு திரும்பியது.

அப்போது, ஓர் உருவம் சுற்றும் முற்றும் பார்த்தவாறு தீப்பந்தத்தை ஏந்தியபடி வருவதைக் கண்டு வேகமாக பரணிலிருந்து கீழிறங்கிய சம்யுக்தன், தன் உறை வாளின் மேல் கை வைத்தபடியே அந்த உருவத்தை நோக்கி சென்றான்.

உருவத்தை நெருங்கியவனின் முகம் பிரகாசமடைந்து இதழ்களில் புன்னகை அரும்பியது. அந்த உருவம் வேறு யாருமில்லை. சம்யுக்தனின் உள்ளம் கவர்ந்த பூங்கொடி தான்!

பூங்கொடியைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பொய்யான கண்டிப்புடன் பேசத் தொடங்கினான்.

"ஒரு பெண்பிள்ளை இந்த நேரத்தில் எதற்காக தனியே இங்கே வந்தாய்?"

“இங்கே பக்கத்து கோவிலில் ஒரு சிறப்பு பூஜை நடந்தது. அங்கே நானும் என் தோழிகளும் சென்று திரும்பி வரும்போது, தாங்கள் இங்கே இருப்பதாக கேள்வியுற்று, இந்த பிரசாதத்தை தங்களுக்கு கொடுக்க வந்தேன்”

பிறகு, தலையைக் குனிந்தபடியே நாணத்துடன் சம்யுக்தனிடம் அந்த பிரசாதத்தை நீட்டினாள். அவனும் அதை வாங்கிக்கொண்டு ஆண்மையின் கம்பீரத்தோடு அவளைப் பார்த்தான்.

"நேரமாகிறது, கிளம்பலாம். உன்னை வீட்டிற்கு கொண்டுபோய் விடுகிறேன்"

"இன்னும் சிறிது நேரம் போகட்டுமே"

சம்யுக்தன் பூங்கொடியை முறைத்தான். அந்தப் பார்வைக்கு கட்டுப்பட்டு அவன் பின்னால் பூங்கொடி சென்றாள்.

ருள் நம்பி சற்று படபடப்போடு இருந்தான். ஒவ்வொரு நொடியும் யுகமாய் கழிவதாய் அவன் உணர்ந்தான். 'இன்று ஒரு நாள் மட்டும் உயிரோடு இருந்தால் தன் நாட்டைக் காத்த பெருமை கிடைக்குமே' என ஏங்கினான்.

தனது குடிசையைச் சுற்றி நோட்டமிட்டவன், மெதுவாய் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். வீரர்கள் மாறுவேடத்தில் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தார்கள். 'என் கதை முடிந்தது' என மனதிற்குள் கூறிக்கொண்டவன், மேற்கொண்டு வருத்தப்பட்டு என்ன பயன் என்பது போல் மும்முரமாக தன் வேலையைச் செய்யத் தொடங்கினான்.

மாலை நேர முடிவுக்குப் பின் இருள் எட்டிப் பார்த்தமையால் அகல் விளக்கிற்கு உயிர் கொடுத்து ஓலையில் எதையோ எழுதினான். பிறகு, தன் இடுப்பு கச்சையில் அதை சொருகி மறைத்து வைத்துக்கொண்டவன், சிறிது நேரம் அமைதியாக யோசித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.