(Reading time: 16 - 32 minutes)

"எதற்காக சிரிக்கிறாய்?" என்று பார்த்திபன் வியப்போடு கேட்டான்.

"மற்றவர்களை கேலி கிண்டல் செய்வது போல் என்னையும் செய்கிறாய். அதை நினைத்துதான் சிரித்தேன்"

"உண்மையைச் சொன்னால் உலகம் நம்பாது என நான் கற்ற பழமொழி உண்மை தான் போலும்"

"எல்லையில் பதற்றமாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்" என்றான் சம்யுக்தன்.

"ஆம். நாம் இன்று சீக்கிரமாகவே காவல் புரியும் இடத்திற்கு செல்லவேண்டும்"

"நான் வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் உன்னை அங்கு சந்திக்கிறேன்" என சம்யுக்தன் கூற பார்த்திபன் அங்கிருந்து கிளம்பினான். 

அப்போது, சம்யுக்தனின் குதிரை அவனைப் பார்த்துக் கனைத்தது. சம்யுக்தன் அதை மெல்லத் தடவி விட்டு, அதன் மேல் ஏறி உட்கார்ந்ததும் அந்த குதிரை சீறிப்பாய்ந்து சென்றது.

குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது சம்யுக்தனின் மனம் இளவரசரை நினைத்தது. 'பாவம்! அவர் தன்னிடம் தோற்றவுடன் குற்ற உணர்ச்சியால் குறுகிப்போனார். அவர் திறமையாகத்தான் சண்டையிட்டார். ஆனால், கோபத்தால் சில தவறுகளை செய்ததன் விளைவாக தோற்றுப்போனார்' என எண்ணினான்

அவ்வாறாக எண்ணிக்கொண்டிருந்தபோதே குதிரை சம்யுக்தனின் வீட்டை அடைந்தது. அவன் குதிரையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான்.

மகனின் வருகையைக் கண்டு வாசலுக்கு வந்த சம்யுக்தனின் அன்னை புஷ்பவதி, “என்ன சம்யுக்தா, உன் முகம் வாடிப்போய் இருக்கிறது?” என்று பரிவுடன் வினவினார்.

“களைப்பு அன்னையே!”

அப்போது அவன் தங்கை சகுந்தலை, “இருக்காதா பின்னே, இன்றைக்கு இளவரசருடன் மோதி ஜெயித்தவர் அல்லவா? களைப்பாகத்தான் இருக்கும்” என்றாள்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று சம்யுக்தன் கேட்டான்.

“எனக்கு வேண்டப்பட்டவர்கள் சொன்னார்கள்”

“யாரது?”

“சொல்லமாட்டேன்” என்றாள், சகுந்தலை.

அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த அவர்களின் தந்தை, மந்திரி தேவராஜன், “சகுந்தலை, அண்ணாவுக்கு மரியாதை கொடுத்து பேசக் கற்றுக்கொள்!” என்று கூறினார்.

“நான் ஏதும் அவமரியாதையாகப் பேசவில்லையே” என்றாள் சகுந்தலை.

“வீண் வாக்குவாதமும் எதிர்த்துப் பேசுவதும் கூட அவமரியாதை தான்”

அதைக் கேட்ட சகுந்தலையின் முகம் வாடிப்போனது.

உடனே மந்திரி, “நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று உன் முகம் வாடிப்போய்விட்டது? பெண்பிள்ளைகள் இப்படி வாயாடக்கூடாது என்று தானே சொன்னேன்” என்று கூறி அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டினார். பிறகு, அவர் சம்யுக்தனின் அருகில் அமர்ந்தார்.

“இன்று நீ இளவரசனை வெற்றி கண்டதைக் கேள்விப்பட்டேன். நீ சிறந்த வீரனாய் வளர்ந்து கொண்டிருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால், அந்த மகிழ்ச்சியை என்னால் முழுவதுமாக அனுபவிக்க முடியவில்லை. நமது நாடு ஆபத்தில் இருக்கிறது. ஒற்றனிடம் இருந்தும் தூது வரவில்லை"

"கவலைப்படாதீர்கள் தந்தையே, எத்தகைய துயர் வந்தாலும் துணிவோடு எதிர்கொள்வோம்" 

“இன்று நீ எந்த திசையில் காவல் புரிய போகிறாய்?”

“வடக்கு திசையில்”

“சற்று எச்சரிக்கையுடன் காவல் புரி. எதிரிகள் நம் எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்வதாகத் தகவல் வந்தது. கவனமின்மையாக இருந்துவிடாதே”

“சரி, தந்தையே. நான் காவல் புரிய சென்று வருகிறேன்”

“சரி, நீ சென்று வா. இன்று அரண்மனையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருப்பதால் நானும் அங்கு செல்லவேண்டும்”

அப்போது, புஷ்பவதி, “வாருங்கள், உணவருந்தலாம்” என்று அழைத்தார்.

அதற்கு சம்யுக்தன், "காவல் புரியும் வீரர்கள் உணவருந்தும் இடத்திலேயே நானும் உணவருந்திக்கொள்கிறேன். வருகிறேன் தாய் தந்தையே!” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

ம்யுக்தன் காவல் புரியும் இடத்திற்குச் சென்றான். அங்கே விறகு வைத்து தீ மூட்டி, அந்த வெளிச்சத்தில் வீரர்கள் காவல் புரிந்துகொண்டிருந்தார்கள்.

அப்போது, பார்த்திபன், “தாமதமாக வந்தாலும் சரியான நேரத்தில் தான் வந்தாய். இந்தா, இதைச் சாப்பிடு” என்று கூறி, தேக்கு இலையில் உணவைக் கொடுத்தான்.

சம்யுக்தன் உணவருந்திக்கொண்டே, “தென்திசையில் யார் காவல் புரிகிறார்கள்?” என்று கேட்டான்.

“அங்கே இளவரசர் தலைமை தாங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது”

சம்யுக்தன் சுற்றும் முற்றும் பார்த்தான். பிறகு, அங்கிருந்த வீரர்களிடம், “அந்த ஆற்றின் ஓரத்தில் சென்று சிலர் காவல் புரியுங்கள்; ஆங்காங்கே விறகு வைத்து தீ மூட்டுங்கள்; யாரும் தனியாக செல்ல வேண்டாம்; குழுக்களாக செல்லுங்கள்” என்று கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.