(Reading time: 16 - 32 minutes)

குருவின் கண்கள் வீரர்களின் மேல் பாய்ந்தன. தன் பார்வையாலேயே சமிக்ஞை செய்து இருவரை அழைத்தார். இரண்டு இளம் காளையர்களும் குருவின் முன் வந்து நின்று வணங்கினார்கள். 

அப்போது, "குருவே!" என்றது ஒரு குரல்.

குரு திரும்பிப் பார்த்தார். இளவரசன் ரவிவர்மன் குருவின் அருகில் வந்து நின்றான்.  

"இது என்ன விந்தை! என் வீரத்திற்கு ஒருவன், சம்யுக்தனுக்கு மட்டும் இருவரா?" 

குரு சிரித்தார் "தன் சீடனுக்கு உரியதை எப்போது தரவேண்டும் என்பது குருவிற்கு தெரியும்"

"இதற்கான அர்த்தம்?" 

"சம்யுக்தன் அளவிற்கு நீங்கள் இன்னும் பயிற்சி பெறவில்லை இளவரசே" 

"என் வீரத்தை தாங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளதை எண்ணி வேதனையடைகிறேன் குருவே" 

குரு யோசனையோடு பெருமூச்சு விட்டபடி சம்யுக்தனை நோக்கினார். 

"சம்யுக்தா! நீ இன்று இளவரசரோடு மோதவேண்டும்" 

ரவிவர்மனின் முகத்தை சில நொடிகள் நோக்கிய சம்யுக்தன், "ஆகட்டும் குருவே" என்றான்.

உள்ளமெல்லாம் குமுறியபடி களத்தில் நின்றான் ரவிவர்மன். தன் வீரத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய குருவிற்கு தக்க பாடத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று எண்ணினான்.

சம்யுக்தனும் ரவிவர்மனும் நேரெதிராக களத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். சம்யுக்தன் முகத்தில் புன்னகை. இளவரசனின் கண்களில் வெறுப்பு கலந்த அதீத கோபம்.

அவ்விடமே ஆழ்ந்த அமைதியில் நிரம்பி ஒருவித படபடப்பு சூழ்ந்திருந்தது. ஒரு பூவிதழின் மேல் உள்ள பனித்துளி கீழே விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது.   

போட்டி தொடங்குவதை அறிவிக்கும் விதமாக வீரன் ஒருவன் வட்டமான பெரிய மணியை ஒலிக்கத் தயாராக நின்றுகொண்டிருந்தான். இளவரசனின் கைகள் வாளை வலுவாகப் பிடித்துக்கொண்டிருந்தன. ஆனால், சம்யுக்தனோ வாளை உறையிலிருந்து எடுக்காமல் நின்றுகொண்டிருந்தான்.

குருதேவர் மணி அடிப்பவனைப் பார்த்து தலையசைத்தார். அவன் போட்டி தொடங்குவதற்கு அறிகுறியாக அந்த மணியை ஓங்கி ஓர் அடி அடித்தான்.

போட்டி தொடங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தன் வாளை உறையிலிருந்து எடுத்த சம்யுக்தன் இளவரசனைத் தாக்கிக் கீழே விழ வைத்தான். சமாளித்து எழும்பிய இளவரசனை மீண்டும் சம்யுக்தன் தாக்க முற்பட்டான். சண்டை தீவிரம் அடைந்தது. சுற்றி நின்று கொண்டிருந்த வீரர்கள் இருவருக்கும் ஆதரவாக குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இளவரசன் என்னதான் திறமையோடு சண்டையிட்டாலும் சம்யுக்தனிடம் எதுவும் எடுபடவில்லை; மெல்ல மெல்ல சோர்ந்துகொண்டே வந்தான்.

அப்போது, அந்த வீரர்களின் கூட்டத்தில் திடீரென்று கொலுசு சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்டதும் சம்யுக்தனின் கவனம் ஒரு நொடி சிதறியது. அத்தருணத்தை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் விதமாக இளவரசன் தன் பலத்தை எல்லாம் கூட்டி சம்யுக்தனை தாக்கினான். நிலைதடுமாறி கீழே விழுந்த சம்யுக்தன், அடுத்த நொடியே சுதாரித்து எழுந்து நின்றான்.

மீண்டும் போட்டி கடுமையாக நடந்தது. இருவரும் சரி சம பலத்துடன் மோதினார்கள். இறுதியில், சம்யுக்தன் இளவரசனை வீழ்த்தி அவரின் மார்புக்கு நேரே வாளை நீட்டி, தான் வெற்றியடைந்ததை நிரூபித்தான்.

சம்யுக்தனின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக எல்லாரும் கைதட்டினர். ஆனால், ரவிவர்மனுக்கோ ஆத்திரமும் வேதனையும் முட்டிக்கொண்டு வந்தாலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

தோல்வியுற்ற முகத்தோடு குருவை நோக்கினான். 'நான் சொன்னது இப்போதாவது புரிந்ததா' என்பது போலிருந்தது குருவின் பார்வை.

இளவரசன் ரவிவர்மனின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்து சமாதானப்படுத்தினார்கள்.

ரவிவர்மன் தன் நண்பர்களிடம், “இங்கே யாராவது பெண் இருக்கிறாளா?” என்று கேட்டான்.

“இல்லை இளவரசே, எல்லாருமே ஆண் மகன்கள் தான்" என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்.

“இல்லை, இந்தக் கூட்டத்தில் நிச்சயமாக ஒரு பெண் இருக்கிறாள், போய் தேடுங்கள்!” என்று இளவரசன் கூறினான்.

அவர்களும் பெண் யாரேனும் அங்கே இருக்கிறாளா என்று தேடினார்கள். அப்போது, ஒரு பெண்ணுருவம் அந்த இடத்தை விட்டு சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தார்கள்.

உடனே, ரவிவர்மனிடம் சென்று, “நீங்கள் சந்தேகித்தது சரிதான் இளவரசே. இவ்வளவு நேரம் அவள் இங்கு தான் இருந்திருக்கிறாள். நாங்கள் தேடுவதை அறிந்ததும் அவள் இந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள்” என்று கூறினார்கள்.

“அந்தப் பெண் யாரென்று விசாரியுங்கள்!” என்ற இளவரசன் அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

வெற்றி பெற்ற சம்யுக்தனை ஓடி வந்து அணைத்துக்கொண்டான் சம்யுக்தனின் உற்ற தோழன் பார்த்திபன். "சம்யுக்தா! இன்று உன் வாள் சண்டை அபாரம். உன்னை தோற்கடிப்பது நடக்காத காரியம் என மற்றவர்களுக்கு நீ புரியவைத்து விட்டாய்"

சம்யுக்தன் சிரித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.