(Reading time: 10 - 20 minutes)

அதே நேரம் அங்கே கணேஷ் ராம் அந்த தடுப்பு கம்பிகள் மீது கரம் பதித்து அருவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

“ஸ்ரீதர் இன்னும் கொஞ்சம் முன்னடி வா. க்ளோஸ் அப் ஷாட் எடு” தேனாக காதில் அக்குரல் பாய திரும்பிப் பார்த்த கணேஷ்க்கு ஆச்சரிய ஆனந்தம்.

“மாலை வெயிலின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் எந்தன் நெஞ்சில்” அவனின் வாய் முணுமுணுக்க இதயமோ எகிறி குதித்துக் கொண்டிருந்தது.

மூன்று வாரங்களாக மனதிற்குள் இருந்து கொண்டு ஆட்டுவித்துக் கொண்டிருந்தவளை மீண்டும் நேரில் காணவும் தான் ஒரு மருத்துவன் என்பதையும் எத்தனையோ சீனியர் டாக்டர்ஸ் கூட அவனைப் பெயர் சொல்லி அழைகக்காமல் டாக்டர் என்றே மரியாதையாய் குறிப்பிடுவதையும் மறந்து போனான்.

துள்ளித் திரியும்  டீன்ஏஜ் பருவ விடலை பையனைப் போல மனது சிறகை விரித்துப் பறந்தது.

அவளை பார்த்தபடியே சிலையாய் கணேஷ் நின்று கொண்டிருக்க ஸ்ரீதரின் குரலில் சுற்றுப்புறம் அறிந்தான்.

“வேண்டாம் வர்ஷினி. அது மேல எல்லாம் ஏறக் கூடாது. போலீஸ் பிடிச்சிருவாங்க”

“ஸ்ரீதர் இங்க யாருமே இல்ல. அப்படியே அருவியை நான் தொடுற மாதிரி ஒரே ஒரு போஸ்” என்றவள் அந்த தடுப்புக் கம்பிகள் மீது சாய்ந்து குனிந்து அருவியை தொடுவது போல பாவனை செய்ய எத்தனிக்க அடுத்த நிமிடம் அவள் காற்றில் மிதந்து கொண்டிருந்தாள்.

அவள் அவ்வாறு தடுப்புக் கம்பிகள் மீது சாய போனதுமே கணேஷ் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் எதையும் யோசிக்கமால் விரைந்து சென்று அவளது இடையில் தனது கரத்தை செலுத்தி அப்படியே தூக்கி விட்டிருந்தான்.

அவன் தரையில் இறக்கி விடும் வரை வர்ஷினிக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. எவன் அவன் என்னை இப்படி தொட்டு தூக்கியது என்று கோபமாக சண்டையிட அவள் நிமிர்ந்து பார்க்கும் முன் கணேஷின் கோபக் குரல் அவள் செவிகளை அதிரச் செய்தது.

“அறிவு இருக்கா உனக்கு. எவ்வளவு டேஞ்சரஸ். விழுந்து வச்சா. உனக்கு உன் உயிர் மேல ஆசை இல்லாம இருக்கலாம். பெரிய சாகசம் செய்கிறோம்ன்னு இருக்கலாம். ஆனா உன் மேல அன்பும் அக்கறையும் இருக்கவங்கள நினச்சு பார்க்க வேண்டாம். ஏதும் ஆச்சுன்னா  உன் அம்மா அப்பா எவ்வளவு தவிச்சு போவாங்க” கணேஷ் பொரிந்து தள்ளவும் வர்ஷினி பேச்சிழந்து நின்றாள்.

“அட அன்னிக்கு ட்ரைன்ல பார்த்த ஹீரோ தானே இவரு” மனசுக்குள் நினைத்துக் கொண்டாலும் இப்படி யாருமே அவளிடம் இது வரை இவ்வளவு கோபமாக பேசியது இல்லை என்பதால் அவளை அறியாமலே அவள் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

அதை கண்டுகொண்ட கணேஷ் அப்போது தான் தான் என்ன செய்தோம் என்று சுரணை பெற்றான்.

“ஐ ஆம் சாரி. நான்...” எதுவும் பேசத் தோன்றாமல் என்ன சொல்வது என்றும் புரியாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டிருந்தான் கணேஷ் ராம்.

தன்னிச்சையாக தான் வர்ஷினியின் கண்கள் கலங்கிப் போனதே ஒழிய அவள் மனம் சற்று முன் தன்னிடம் கோபமாக மொழிந்த அந்த ஹீரோ மீதே படர்ந்திருந்தது.

“யார் இவர். அவருக்கு ஏன் இவ்வளவு கோபம் எனக்கு ஏதாச்சும் ஆனா இவருக்கு என்ன. அந்த கண்ணுல என்னவோ இருந்ததே அது என்ன.முதல்ல ஒரு பரிதவிப்பு இருந்துச்சு. அப்புறம் சாரின்னு சொல்லும் போது ஒரு வலி தெரிஞ்சதே” இப்படி ஆராய்ந்து கொண்டிருந்தாள் அவள்.

“வர்ஷினி யாரு அது. உனக்கு தெரிஞ்சவங்களா”

“இல்ல ஸ்ரீதர் யாருன்னே தெரியல. ப்ளீஸ் இங்க நடந்ததை வீட்ல சொல்லிடாத. ப்ளீஸ் ப்ளீஸ்”

“சரி சரி சொல்ல மாட்டேன். போட்டோஸ் எடுக்கவா”

“இல்ல வேணாம். எனக்கு ஏதாச்சும் சில்லுன்னு வாங்கிட்டு வாயேன். தொண்டை எல்லாம் காய்ந்து போச்சு” ஸ்ரீதரை அனுப்பி வைத்தாள்.

கத்தியது அவன் இவளது தொண்டை வறண்டு போனதாம். அவள் அருகில் இருந்த ஒரு பெஞ்ச் மீது அமர்ந்து கொண்டு இரு கைகளையும் குறுக்கே கட்டிக் கொண்டாள்.

அருவியைத் தழுவி வந்த காற்று  அவள் மீது நீர்த்துளிகளை தெளிக்க சிலிர்த்தாள் அவள். ஏனோ அவனது கண்கள் அவளை பாடாய் படுத்தி எடுத்தன. அவனது கோபம் இப்போது அவள் இதயத்தின் ஆழம் வரை இறங்கியது தித்திப்பாய்...

இதயம் துடிக்கும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.