(Reading time: 6 - 12 minutes)

08. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

பிறந்த குழந்தையின் இதயம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 140 -160 முறை துடிக்கும். இது பெரியவர்களின் இதயதுதடிப்பைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்

ன் கண்மணியை அழ வச்சுட்ட. அப்படி என்னடா கோபம் உனக்கு. நீயெல்லாம்...” கண்ணாடி முன் நின்று தனது பிம்பத்தைத் திட்டிக் கொண்டிருந்தான் கணேஷ் ராம்.

அவளது பெயர் வர்ஷினி என தெரிந்ததும் அர்ஷு அர்ஷு என்று ஜபம் செய்தன ராமின் உதடுகள்.

“உன் பேர் சொன்ன உள்நாக்கு மட்டுமில்ல அர்ஷும்மா இதயம் வரை தித்திக்கிறது” தன் போக்கில் உளறிக் கொண்டிருந்தான் காதல் கிறுக்கன்.

“அவ யாரு என்ன ஒன்னும் கேட்காம வந்துட்டோமே. மறுபடியும் சந்திப்போமா” அவளது முகத்தினை இமைத் திரைக்குள் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.

ப்போதும் துறுதுறுவென ஏதாவது கலாட்டா செய்து கொண்டு இருக்கும் வர்ஷினியோ தனது வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தாள்.

“ஹான்சம் ஹீரோ யாருடா நீ. உன் கண்ணுல ஏதோ ஒன்னு. என்கிட்ட ஏதோ சொல்லிச்சே அந்தப் பார்வை. என்னன்னு நான் கண்டுபிடிக்கும் முன்னே ஓடி போய்ட்டியே நீ” தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.

அந்த வார இறுதியில் வீடியோ சாட்டின் போது வர்ஷினியிடம் ஏதோ மாறுதலை உணர்ந்தான் வருண். என்ன தான் வர்ஷினி சாதாரணமாய் காட்டிக் கொண்டாலும் அவளைப் பிறந்ததில் இருந்து அறிந்த சகோதரன் அவளது மாற்றத்தை அறியாமல் போவானோ.

“அம்மு என்ன ஒரு மாதிரி டல்லா இருக்க. ஏதாச்சும் பிரச்சனையா” வருண் வினவ ஒரு நொடி வர்ஷினி திகைத்தாள்.

‘என் முகத்தில் அப்படி அப்பட்டமாக தெரியுதா என்ன’ என்று நினைத்தவள் உடனேயே தனது மனதினை மறைத்து வருணை சீண்ட ஆரம்பித்தாள்.

“ஐயே... யாருக்கோ பார்க்கும் இடமெல்லாம் காயத்ரி மயமா இருக்காம். அந்த பிரகாசத்தில் மத்தவங்க எல்லாம் டல்லா தான் தெரிவோம்” வர்ஷினிக்கு சமாளிக்க சொல்லியா தர வேண்டும்.

“குரங்கு எப்போ பாரு உனக்கு கேலி தான்” வருண் லேசாக வெட்கப்பட வர்ஷினி அவனை இன்னும் அதிகமாக கலாய்த்தாள்.

“அண்ணி பேரைச் சொன்னா போதுமே. எப்படி ப்ளஷ் அடிக்கிற. முகம் எல்லாம் சிவந்து போச்சு. ஐயோடா”

“ரொம்ப தான் ஒட்டாதே. உனக்கும் என்னிக்காச்சும் காதல் வந்தா தெரியும்” வருண் சொன்னவுடன் வர்ஷினி தனது மனதினை முகம் பிரதிபலிக்காமல் இருக்க வெகு சிரமப்பட்டாள்.

அவள் தேகமெங்கும் மல்லிகை முகை விரித்து மலர்ந்தது போல, நயாகரா அருவியில் திகட்ட திகட்ட நனைவது போல் ஒரு உணர்வு ஏற்பட வருணிடம் அப்புறமாய் பேசுவதாக சொல்லிவிட்டு வீடியோ காலை கட் செய்தாள்.

“யாரோ அவன் யாரோ என்ன பேரோ எந்த ஊரோ” உதடுகள் முணுமுணுக்க மனமோ அந்த இனிமையான உணர்வினில் சுகமாய் குளிர் காய்ந்தது.

யார் என்ன என்ற விவரம் ஏதும் தெரியாமலே தங்கள் மனதிலே தோன்றிய உணர்வின் முழு அர்த்தம் புரியாமலே மூன்று மாதங்களை கடத்தியிருன்தனர் கணேஷ் ராமும் வர்ஷினியும்.

இந்நிலையில் ஸ்ரீதரின் பெரியப்பா பெண்ணின் நிச்சயதார்த்த விழா நியூஜெர்சியில் நடைபெற இருக்க வர்ஷினியை வருமாறு அழைத்தான்.

“எனக்கு அங்க யாரையும் தெரியாது ஸ்ரீதர். ஒரே போர் அடிக்கும்” என மறுத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

சென்னையில் எப்போதாவது நண்பர் தெரிந்தவர் வீட்டு திருமணம் போன்ற நிகழ்சிகளுக்கு லக்ஷ்மி வர்ஷினியை அழைத்தால் மறுத்து விடுவாள்.

“அத்தை அங்க கல்யாணம் நடக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் இலவச மாட்ரிமோனி சர்வீஸ் தான் தூள் பறக்கும். நமக்கு சரி வராது” என்று பெரிய கும்பிடு போட்டு விடுவாள்.

“வர்ஷினி, ப்ளீஸ் நீ வாயேன். அங்க நிறைய கேம்ஸ், அந்தாக்ஷரி எல்லாம் உண்டாம். பொண்ணு வீட்டு சைடுக்கும் மாப்பிள்ளை வீட்டு பக்கத்திற்கும் போட்டி நடக்குமாம். சின்ன அக்கா கிட்ட என் பிரண்ட் வர்ஷினியை கூட்டிட்டு வரேன் கண்டிப்பா நாம தான் வின் அபப்டின்னு சொல்லிட்டேன். ப்ளீஸ் வர்ஷினி” ஸ்ரீதர் சொல்ல வர்ஷினி கண்கள் பளிச்சிட்டன.

“லூசு இதை முதல்லேயே சொல்றதுக்கு என்ன. எப்போ போகணும். நான் என்ன டிரஸ் போடுறது. மேட்சிங் ஜூவல்லரி எல்லாம் இருக்கான்னு தெரியலையே” அவள் ஆர்வத்தைப் பார்த்த ஸ்ரீதர் குதூகலமானான்.

“நீ இருக்கிறதை எடுத்துட்டு வா. அக்காஸ் கிட்ட நிறைய இருக்கும்” ஸ்ரீதர் சொல்லவும் சரி என்று உற்சாகமாய் தலையாட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.