(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 02 - ஸ்ரீலக்ஷ்மி

SS

போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம்.

எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்..!’

**********************************

"ரா ரா ரஸ்புட்டின்

லவ்வர் ஆஃப் தெ ரஷியன் குயின்.."

காதைப் பிளந்தது அந்த மயில் போன்ற குரல்..

தினமும் ஒரு டவ் சோப்பை செல்லில் பாட்டைக் கேட்டபடிக் கூடவே தானும் கொடுமையாய்ப் பாடியபடிக் கரைப்பதுதான் நம் நாயகியின் வழக்கம்.. இதோ கொஞ்சம் நேரம் தான் சீக்கிரம் அந்தச் சோப்புகட்டித் தீர்ந்துவிடும்.. அப்புறம்தான் அவள் வெளியே வருவாள்.

அவளுக்கு மட்டும் என்ன இப்படிக் கத்துவதற்கு ஆசையா என்ன.. பாவம் பாட்டுதான் வர மாட்டேன் என்கிறது அவளைப் பார்த்து..

"ஏம்மா தமா.. நீயாவது கொஞ்சம் சொல்லக்கூடாதா.. உன் பொண்ணுக்கு.. எதுக்கு இப்படி ரா ரா பாட்டை இங்கிலீஷிலே பாடிக் கொலைச் செய்யுறா..", என்றபடித் தன் அறையிலிருந்து கிச்சனுக்குள் நுழைந்த வண்ணம் கேட்டார் ஜெயராமன்.

கிச்சனில் இருந்த மேஜையில் அமர்ந்தவண்ணம் கீரையை ஆய்ந்தபடி இருந்த தமயந்தி நிமிர்ந்துத் தன் கணவனை இப்போது நன்றாகவே முறைத்தாள்.

"ஏங்க நீங்கள்ளாம் காலேஜுக்குப் போனீங்கன்னு சொன்னால் எவனாவது சிரிப்பான் அசிங்கமாய்.. இந்தப் பாட்டுக் கூடவா உங்களுக்குத் தெரியலை.. நம்மக் காலத்துப் பாட்டுங்க.. போனீஎம்.. மறந்துட்டீங்களா.. எத்தனை முறை நான் இதை நம்மக் கல்யாணம் ஆனப் புதுசிலக் கேட்டிருப்பேன்.. பாடியிருப்பேன்.. அப்பல்லாம் என்னவோ உங்களுக்குப் போனீஎம் தான் பிடிச்சப் பேண்டுங்கிற மாதிரி எல்லாம் பேசுவீங்க?.." என்று கணவனைச் சற்றே ஏளனமாய்ப் பார்த்தவளின் பார்வையில் அசடு வழிந்தவர்..

"இல்லடா செல்லக் குட்டி.. நம்ம சின்னக் குட்டி அந்தப் பாட்டை.. இப்போ கொஞ்சம் ஜோதிகா ஸ்டையிலில் பாடுதா.. அதான் கொஞ்சம் கன்பியூஸ் ஆகிட்டேன்.. மத்தபடி நீ எவ்வளவு நல்லா இங்க்லீஷ் பாட்டெல்லாம் பாடுவே..", என்று மெல்லச் சந்தடிச் சாக்கில் தன் மனைவியின் அருகில் சென்றவர் அவள் எதிர்பார்க்காத முறையில் சட்டென்று கன்னத்தில் முத்தமிட்டவர்..

"கன்னத்தில் முத்தமிட்டால்..

நெஞ்சில் ஜில் ஜில்ல்.."

கணவனின் இந்தத் திடீர்ச் செயலில் லேசாய் அதிர்ந்துப் பின் சட்டென்று பெண்மைக்கே உரிய நாணத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடிக் கன்னத்தைத் துடைத்துக்கொண்டு அவரைப் பிடித்துத் தள்ளியவள்..

"சீ சீ.. என்ன இது.. வயசு நல்லா பத்துக் கழுதைக்கு ஆகுறது ஆகுது.. இப்போ போயி கன்னத்தில் முத்தமிட்டால்னு.. பாட்டு வேற.. சகிக்கலை.. நம்ம பொண்ணுக்கே இப்போ கல்யாண வயசாகிடுச்சு.. நீங்க என்னடான்னா.. அம்பதிலும் ஆசை வரும்.. ரொமான்ஸ் செய்யறீங்க.. இப்போ டி.வீ சீரியல்ல தான் இந்தக் கிழங் கட்டைகளின் ரவுசுத் தாங்கலைன்னா.. அதைப் பார்த்து.. நீங்கள்ளாமும் ஆரம்ப்பிச்சிடீங்களா?.. போங்கப் போயி வேலையைப் பாருங்க..” என்று கையை நீட்டிச் சொன்னவளிடம்,

"பார்த்தியா பார்த்தியா.. ஏதோ ஒரு நடிகை இப்படித்தான்.. போய்யா..ந்னு கையை நீட்டிச் சொல்லும்.. உன்னைப் பார்த்தா அதுக்கு அக்கா மாதிரியே இருக்கடி.. லட்டுகுட்டி..", என்று மீண்டும் வழிந்தார்.

கணவனின் காதல் பார்வையின் கடுமையைத் தாங்க முடியாமல்.. முகம் சிவந்தவள்.. மெல்ல அவர் தலைமுடியைக் கலைத்துவிட்டு, சற்று வெட்கத்துடன் தன் முத்திரையை அவர் கன்னத்தில் பதித்தவள்.. "போதுங்க..ச்சு.. ஏங்க.. உங்க பொண்ணுத் தன் கானமழையை நிறுத்திட்டா.. எப்ப வேணா வந்துருவா.. போங்க.. போயி வெளியே நில்லுங்க அவப் பார்த்துட்டா.. ஒரு வழிச் செஞ்சிடுவா.. போங்க..", என்று செல்லமாய்ச் சிணுங்கியபடி அடுப்பை நோக்கி விரைந்தாள் தமயந்தி..

அவள் மனதுள் தன் கணவனின் செய்கையை ரசித்தாலும், வயதும் சூழலும் இடங்கொடுக்காததால் சற்று அடக்கியே வாசிப்பாள்.

மனைவியின் தவிப்பை ரசித்தவர் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு, 'என்ன இருந்தாலும் அன்னிக்கு மாதிரியே இருக்காளே என்னுடைய லட்டு..', என்று புளங்காகிதமடைந்தவர் மாடிபக்கம் பார்த்தபடி,

"ஏய்.. குழந்தைக்குப் பாதாம் ஊற வெச்சுத் தரச் சொன்னேனே.. எங்கடி.. மறந்துட்டியா..?" அப்படியே அது கூட நாலு பிஸ்தா, அக்ரூட், முந்திரி எல்லாம் எடுத்து வச்சியா..", என்று விரட்டினார் மனைவியை..

கழுத்தைத் திருப்பி 'ம்க்கூம்'' என்று நொடித்தவள்.. அருகே மேடையில் ஊற வைத்திருந்த பாதாமையும் கூடவே ஒரு சிறு பீங்கான் கின்னத்தில் போட்டு வைத்திருந்த ஓட்ஸ், மற்றும் இதரத் தானியக் கலவையான முசுலியையும் எடுத்து அவர் அருகே இருந்த டேபிளில் நங்கென்று வைத்தவள்,

"இதோ பாருங்க.. இந்தப் பாதாம் பிஸ்தால்லாம் கொஞ்சம் ஒவருங்க.. இவ வயசிலே இதெல்லாம் இப்போ அளவாகத்தான் சாப்பிடணும்.. விட்டா கால் கிலோ பாதாமை அரைச்சுப் பாலிலே கலந்து அவளுக்குக் குடுப்பீங்க போல..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.