அது மற்றவர்களைக் கவரும்வண்ணமாக இருப்பது.. மனதில் பயத்தை உண்டு செய்யவே செய்தது.. எல்லாப் பெண்ணைப் பெற்றவர்களுக்கு வரும் இயற்கையான உணர்வுதான்..
காதில் இருந்த அழகிய பெரிய குடை ஜிமிக்கி ஊஞ்சலாட.. நல்ல ரோஜாப்பூ நிறத்தில் சல்வாரணிந்து இருந்தவளைப் பார்க்கப்பார்க்கத் தெவிட்டவில்லை அந்தத் தாய்க்கு..
"மா.. நீயெல்லாம் காலேஜ் போனாலும் வேஸ்டுதான்மா.. இன்னமும் டி.ஆர் காலத்திலேயே இருக்க.. கொஞ்சம் இறங்கிவாம்மா.. ஆத்தா.. போதுமாத்தா உன் அட்வைஸ் மழை.. உன்னோட இந்த டயயக்ராம் வேணா.. நீ சொல்லறதே வேத வாக்குன்னு கேக்கும்.. ஆனா நான்லாம் அப்படி இல்லை தெரிஞ்சிக்கோ.. இப்போ நீ இதைப் பிடிச்சிக்கோ.. ஹெய் டண்டனக்கா.. டனக்குனக்கா..", என்று டேபிளில் இருந்த ஆப்பிளை டக்கென்று அம்மாவை நோக்கி எறிந்தாள்..
அதை லாவகமாய்க் கேட்ச் பிடித்த தமயந்தி.. "என்ன குறும்பு இது..?", என்று மகளைக் கடிந்து கொள்ள..
"ஸ்டாப் ஸ்டாப்.. அம்மா.. இந்தக் குறும்புக்காரப் பொண்ணு கேரக்டரெல்லாம் எனக்குச் செட் ஆகாது.. இந்தக் காலத்தில், லேடஸ்ட் டிரெண்டில் குறும்புக்காரப் பொண்ணுன்னா கொஞ்சம் அரை லூசுன்னு சொல்லுவோம்.. அதனால்.. உன் கம்பேரிசன் ராங்க்..", என்று தாயைப் பார்த்துக் கண்ணடித்தாள் மகள்.
"ஏய்.. சண்முகசுந்தரி.. போதுண்டி.. இதெல்லாம் ஓவர்.. நிறுத்திக்கோ.. இவ்வளவு பேசறீயே.. அப்ப எதுக்குடி எங்க காலத்துப் பாட்டைப் பாடிட்டு திரியுறே.. ரா ரா ரஸ்புட்டின்னு..", என்றாள் தமயந்தித் தடாலடியாய்..
"ஹேய்.. மாம்.. ஸ்டாப்.. இப்பல்லாம் பழையகாலப் பாட்டை ரீமிக்ஸ் செய்யுறது தான் ஃபேஷன்..புரியுதா?.. அப்புறம் என்ன சொன்னே.. ச..சு…சீ தூ.. என்னை அப்படிக் கூப்பிடாதேன்னு எத்தனை முறைச் சொல்லுவது.. உன்னைச் சொல்ல என்ன இருக்கு.. என் தாத்தா பாட்டி.. அந்தச் சானா சூனா.. என்ன பார்க்கிறே.. அந்தச் சண்முகசுந்தரமும், சுந்தரவடிவும் செய்தச் சதி.. என் பெயர் ரூபத்தில் இன்னமும் அவங்களைத் தினமும் திட்டும் படியா செய்யுது..", என்று பற்களை நற நற வென்று கடித்தபடி இரண்டு உள்ளங்கைகளையும் நம்பியார் பாணியில் தேய்த்துக் கொண்டாள்.
"ஏய் போதுண்டி உன் அலப்பறை.. அடங்குடி.. உன் பாட்டி என் அத்தை.. தன்னைப் போலவே வெள்ளை வெளேர்னு தன் பேத்திப் பிறந்த சந்தோஷத்தில் உனக்கு அவங்க ரெண்டுப் பேர் பேரையும் கலந்து வெச்சாங்க.. நல்லாத்தானே இருக்கு.. சுந்தரின்னு தானே எல்லாரும் சொல்றாங்க.. என்னவோ அலட்டிக்கறே.."
"ஏம்மா சுந்து குட்டி.. எங்கப்பாம்மா பேருடா அது.. அதையெல்லாம் குறைச் சொல்லக் கூடாது தப்புத் தப்பு..புத்தி போட்டுக்கோ..", என்ற தந்தையைப் பார்த்தவள்,
"ஜய்ன் ஜக்....ஆரம்பிச்சிட்டாரு ஜால்ராவை.. ரொம்பப் பலமாத்தான் இருக்குச் சத்தம்.. தூபம் இன்னிக்கு அதிகமோ?..", என்று தந்தையைக் கிண்டலடித்தவள்,
"அதில்லை டாட்.. எல்லாம் அழகா ஸ்டைலா பேர் வெச்சிருக்கும் போது எனக்கென்னமோ அரதப் பழசா ஒரு பேரு.. இதைச் சுருக்கவும் முடியலை.. சுந்தரியைச் சூரின்னு சொல்லவும் பிடிக்கலை.. சண்முகம்னு ஆண்பெயரும் கலந்துருக்கு.. போங்கப்பா.. என்ன இருந்தாலும் அஃபிஷியலா.. கொஞ்சம் ஸ்டைலா வெச்சிருக்கலாம் இல்லை.." என்று செல்லமாய்ச் சிணுங்கிய மகளைத் தோளைச் சேர்த்து அணைத்து ஆறுதலளித்த ஜெயராமன்..
"பரவாயில்லைடா.. இதிலே என்ன இருக்கு.. உன் பேரில் எவ்வளவு பிசினெஸ் இருக்கு நமக்கு.. இதெல்லாம் பெருமைடா..", என்று முடிக்கக் கூட இல்லை..
"சூரி..சூரி..", என்று கத்தியபடி உள்ளே வந்தாள் மோஹிதா.
"சூரியாவது கீரியாவது", என்று முகம் கடுத்தாள் தமயந்தி..
மோஹிதா ஒரு பெங்காலிப் பெண்.. பிறந்து வளர்ந்ததெல்லாம் நம் சிங்காரச் சென்னையில் தான்.. நன்றாய் தமிழ் தெரிந்தவள்.. இவர்களுடன் இன்னுமொருத்தியும் உண்டு.. அவள் தான் சாந்திபானு.. மூவரையும் சேர்த்து 'சமோசா', என்று காலேஜில் அனைவராலும் அன்பாகக் கூப்பிடும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.. மூவரில் இருவர் சற்றுப் பூசிய உடலமைப்பு.. மோஹிதா ஒட்டடைக் குச்சிபோல் வத்தலும் தொத்தலுமாய் இருப்பாள்.
"ஹாய் மோஹி.. இதோ கிளம்பிட்டேண்டி.. என்றவள், மோஹிதாவைப் பார்த்து,
"மோஹி இந்த ஸ்கர்ட் நல்லா இருக்குடி.. சூப்பர்.. அன்னிக்கு ஸ்கை வாக்கில் வாங்கியதுதானே?.." என்று அந்தக் கிரேகலரில் அழகிய பிங்க் வண்ணத்தில் பூக்களிட்ட ஸ்கர்ட்டை ஆசையாய் நோக்கினாள்..
"யெஸ் டி.." என்ற மோஹிதாவிடம்,
"மோஹிதா பாப்பா.. அது எந்தக் கடைம்மா.. சொல்லு நம்ம பாப்பாவுக்கும் அப்படியே ஒன்னு வாங்கிடலாம்.. இல்லாட்டி நீயே வாங்கிடு.. நான் பணம் தந்துடறேன்..", என்ற ஜெயராமனை முறைத்த தமயந்தி..
"போதும்.. அப்புறம் மாவு அரைக்கிற மிஷினில் டிரம்முக்கு துணிக் கட்டியிருப்பாங்களே அது போல இருக்கும்.. உனக்கெல்லாம் செட் ஆகாதுடி.. ஒழுங்காச் சல்வார் சுடிதார் இல்லை புடவைக் கட்டு.. போதும்..", என்று கண்டிப்பாய்ச் சொன்னாள்..