(Reading time: 16 - 32 minutes)

‘இன்னும் 3 மணி நேரம் இருக்கு.  இப்போவே கிளம்ப சொல்றாளே!’ என நொந்தவாறு குளியலறை நோக்கி சென்றவன், நினைவு வந்தவனாக திரும்பி “ப்ரியாவிடம் பேசினாயா?” என வினவினான்.  அவ்வாறு கேட்ட யாதவைப் பார்த்து ‘இல்லை’ என்னும் விதமாய் தலையசைத்தாள் வர்ஷினி.

ப்ரனிஷும் ப்ரியாவும் திருச்சிக்கு செல்ல, யாதவும் வர்ஷினியும் அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே இவர்கள் இருவரும் சென்னையை நோக்கி பயணப்பட்டனர்.  அவர்கள் பயணத்தைத் துவக்கிய நேரம் பிற்பகலாதலால் சென்னையை அடைய அதிகாலையாகி விட்டது.  அதனால் இருவருமே புதுமணத் தம்பதிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

“நான் அரை மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்.  பின்பு நாம் அவர்களிடம் பேசலாம்” என்று கூறி அவளை அனுப்பிவைத்தான் யாதவ்.

யாதவ் சிறிது நேரம் கழித்து வரவேற்பறைக்கு செல்லவும், அவன் அன்னை அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து உள்ளே சென்றார்.  தன் எதிரில் அமர்ந்த காதலனை கேள்வியோடு நோக்கிய வர்ஷினியிடம் ஒரு புன்னகையை வீசியவாறு ப்ரனிஷுக்கு கால் செய்தான் யாதவ், அவனது whatsapp-ன் availability கண்ட பின்பு.

வர்ஷினிக்கு ஒரு சிறு தயக்கம் இருந்தது, நேற்று நடந்தவற்றையெல்லாம் நினைத்து; கூடவே அதனால் என்ன நடக்கப்போகிறதோ என்ற பயமும்.  எனவே, யாதவ்மூலமாக அங்குள்ள நிலவரத்தையும் ப்ரனிஷின் மனநிலையையும் அறிந்துகொள்ள முயன்றாள்.  உயிர் தோழியல்லவா ப்ரியா அவளுக்கு!

ப்ரனிஷ் போனை அட்டெண்ட் செய்ததும் ஸ்பீக்கரை ஆன் செய்தவன், ‘எப்படி இருக்கீங்க?’ எனக் கேட்க எத்தனிக்க, அதனைத் தடுத்தது மறுபக்கம் இருந்து வந்த “என்னை காப்பாத்து மச்சான்” என்ற குரல்.

பதறிய யாதவ், “என்னடா நடந்தது?” எனக் கேட்க, “உன் தங்கச்சி discus disc மாதிரி ஒன்றை செய்து சப்பாத்தி என்று கூறி என்னை சாப்பிட சொல்லி படுத்தறாடா” என்றான் ப்ரனிஷ்.

அதனைத் தொடர்ந்து “உங்களை…” என்ற ப்ரியாவின் குரலும், அவன் மீது அவள் எதையோ எறியும் ஓசையும் கேட்டது.  அதற்கு ப்ரனிஷ் விலகிச் சென்று சிரிக்க, “Enjoy the match” என அழைப்பைத் துண்டித்தான் யாதவ், சிரித்தவாறே.  யாதவின் மனதிலும் வர்ஷினியின் மனதிலும் குழப்பம் சூழ்ந்திருந்தாலும், ப்ரனிஷின் இந்த இயல்பான பேச்சால் அவர்கள் இருவரினிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது புரிய, மகிழ்ச்சியுடனேயே தங்கள் பணிகளில் ஈடுபட்டனர்.

எலியும் பூனையுமாக இருப்பார்கள் என்று நினைத்தால் இருவரும் எதுவுமே நடக்காதது போல் சாதாரனமாக உள்ளனரே! எப்படி?  அதனை அறிந்துகொள்ள செல்லலாம் ஐந்து மணி நேரத்திற்கு முன்பு.

திகாலையிலேயே விழிப்பு தட்டியது ப்ரியாவிற்கு.  அதற்குமேல் படுக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்தவள், குளித்து முடித்து ஒரு jeans-tops அணிந்து மாடிக்குச் சென்றாள், தலையைக் காயவைக்க.

நேற்றிலிருந்தே அவளை அலைக்கழிக்கும் எண்ணம் அவளை சூழ்ந்தது.  அவள் பெற்றோரைப் பற்றி.  அன்றைய தினம் வரை அவள் சம்பந்தப்பட்ட முடிவுகள் அனைத்துமே அவள் தந்தை எடுத்தவையே.  ப்ரியாவின் முடிவென்று ஒன்று இருந்தால் அது அவள் சென்னைக்கு வந்ததே, அதுவும் அவர் கண்டிஷனுக்கு கட்டுப்பட்டு.  தற்போது, முற்றிலும் அவள் விருப்பத்தில் நடத்தப்பட்டது இந்த திருமணம்!  அவள் விருப்பத்தால் மட்டுமே!

அதனால் எத்தனை பேர் வேதனைப்படுவர் என்பதை மறந்து போனாளே!  ஆனால், அக்கணம் தன் காதல் மட்டுமே முக்கியமாய் தோன்றியது அவளுக்கு.  பாவம் இந்த மங்கை!  காதலை நினைத்தவள், தான் காதல் கொண்டவன் நிலையை எண்ணிப்பார்க்கவில்லை.

பிறந்த வீட்டை நினைத்தும் புகுந்த வீட்டை நினைத்தும் வருந்திக்கொண்டிருந்தது அவள் மனம்.  அங்கே அவள் வீட்டில் என்னென்ன நடக்கிறதோ?  அம்மாவிற்கு அவள் வாங்கவேண்டிய மண்டகப்படி விழும் என்பது மட்டும் நிச்சயம்.

சரி, புகுந்த வீட்டைப் பற்றி நினைக்கலாம் என்றால், ப்ரனிஷின் நிலைபாடே இன்னும் ஒன்றும் விளங்கவில்லை.  இதில் அவன் வீட்டினரைப் பற்றி என்ன கணிக்கமுடியும்?  அவளுக்குத் தெரிந்தது எல்லாம் அவன் வீட்டில் அப்பா, அம்மா, அவன், அக்கா தன் கணவருடன் வெளிநாட்டில் இருக்கிறார்.  அவ்வளவே!  அவனும் எதுவும் சொன்னதில்லை.  இவளுக்கும் கேட்கும்படியான சமயம் வாய்த்ததில்லை.  இப்போது அவர்கள் என்ன நினைப்பர், என்ன செய்வர்?  எதுவும் யோசிக்க முடியவில்லை அவளால்…  அவன் தன் வாய் திறந்து ஏதேனும் திட்டியிருந்தாலேனும் அவள் மனம் லேசாகியிருக்குமோ??

இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டே மேலே சென்றவள், அங்கே கண்ட காட்சியில் அப்படியே அசந்து நின்றுவிட்டாள்.  சுற்றியும் தென்னந்தோப்பு, தொலைவில் இருளும் ஒளியும் கலந்து தெரியும் மலைத் தொடர், இரை தேடி விரையும் பறவைக் கூட்டம் என அவள் கண்முன்னே ஒரு எழில்மிகு ஓவியம் விரிந்தது.

எத்தனை நேரம் நின்றிருந்தாளோ!  அவள் மோனநிலையைக் கலைத்தது ப்ரனிஷ் நீட்டிய காஃபிக் கோப்பை.  ப்ரியா கேள்வியோடு நோக்க, “நானே கலந்தது.  எப்படி இருக்கு என்று குடித்து பார்த்து சொல்லு” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.