(Reading time: 16 - 32 minutes)

“கேட்டிருந்தால் நானே கலந்து தந்திருப்பேனே” என்று முனுமுனுத்தவாறே வாங்கிக்கொண்டாள் ப்ரியா.  அதனைக் கேட்ட ப்ரனிஷின் முகத்தில் இளநகை எட்டிப்பார்த்தது.

அவன் அளித்த காஃபியை சுவைக்கப் போனவள், அவன் முகத்தைக் கண்டு ‘என்ன சிரிப்பு?’ எனக் கண்களால் வினவினாள்.  “ஒன்றுமில்லை” என்று ப்ரனிஷ் கூறியும் ப்ரியாவின் பார்வை மாறாதிருக்க, “நீ ப்ரூ டீ போட்ட கதையை நினைத்தேன்… சிரித்தேன்” என்றான்.  ப்ரனிஷின் இந்த இயல்பான பேச்சு அவளுள் சிறு நம்பிக்கையைத் தோற்றுவிக்க, அவனுடன் மனம் விட்டுப் பேசிட வேண்டும் என குறித்துக்கொண்டாள்.  அந்த முடிவினால் மடியில் இருந்த பாரம் சிறிது குறைந்தது போல் தோன்ற, ப்ரியாவின் துடுக்குத்தனம் வெளிப்பட்டது.

பாவம் ப்ரனிஷ்!  தன் வாயால் தானே மாட்டிக்கொண்டான்.  அவன் சொல் கேட்டு கிளர்ந்தெழுந்த ப்ரியா, அன்று காலை உணவை தானே சமைப்பதாக சபதமெடுத்து சமையலறையிலும் புகுந்து கொண்டாள்.

பல மணி நேர தேடலுடன் கூடிய போராட்டத்திற்குப் பிறகு, அங்கே இருந்த கோதுமை மாவையும் உருளைக்கிழங்கையும் கொண்டு தயாரானது சப்பாத்தியும் உருளைக்கிழங்கு வறுவலும்.

அதனை செய்துமுடித்தபின் ப்ரனிஷை வற்புறுத்தி சாப்பிட வைக்கவும் தவறவில்லை ப்ரியா.  சுவைத்த ப்ரனிஷும் அசந்துதான் போனான்.  முதல் முறை செய்திருந்தாலும் நன்றாகவே இருந்தன அவை.  தன்னவனுக்காக செய்ததாலேயே சுவை கூடிற்றோ என்னவோ?  அந்த ரகசியம் ப்ரியா மட்டுமே அறிந்தது.

இருந்தும் ப்ரியாவை கலாய்க்காவிட்டால் ப்ரனிஷைப் பற்றி வரலாறு தப்பாக பேசாதா?  ஆதலால் அவளிடம் சிறிது விளையாடிப் பார்க்க எண்ணம் கொண்டான்.  அந்த நிமிடம் சரியாக ஒலித்தது ப்ரனிஷின் அலைபேசி, யாதவின் பெயரோடு.  அதனையே சரியாக உபயோகப்படுத்திக்கொண்டான் ப்ரனிஷ்.

இப்போது, “உனக்கு disc மாதிரி தெரியுதா நான் செஞ்ச சப்பாத்தி?” என்று ப்ரனிஷின் முன் கொலைவெறியுடன் நின்றிருந்தாள் ப்ரியா.  “இத சொல்லித்தான் தெரியனுமா?” என ப்ரனிஷ் பாவமாக கேட்க, அவனை அருகில் இருந்த புத்தகத்தைக் கொண்டு அடித்தாள் ப்ரியா.  அதனை ப்ரனிஷ் தடுப்பதற்காக அதனை புத்தகத்தைப் பறிக்க, அவனிடம் இருந்து மீட்பதற்காக ப்ரியா முற்பட, இருவரும் எப்போது அருகருகே வந்தனர், அறிகிலர்.

“புக்கை குடுடா…” என்றவாறு எட்டியவள் தடுமாறி விழப்போக, அவளை தாங்கிப்பிடித்தான் ப்ரனிஷ்.  அவன் கையில் இருந்த புத்தகம் விடைபெற்று அவள் இடையில் வந்து நின்றது கரம்.

காதலனின் முதல் ஸ்பரிசம் அந்த மங்கையினுள் எண்ணற்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  அதனைத் தாங்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.  அவள் இதயம் படபடவெனத் துடித்தது.  ஒரு விதமான மாயலோகத்தில் உலவிக்கொண்டிருந்தாள் பெண்ணானவள்.

ப்ரியாவை சீராக நிற்க வைத்தவன் அவள் முகம் நோக்க, திகைத்து நின்றான் அவன்.  காற்றில் படபடக்கும் கூந்தல், அதனை கட்டுப்படுத்த ஒரு சிறிய கிளிப், அதையும் மீறி அவளது பிறைபோன்ற நெற்றியுடன் உறவாடும் குழல், வில்லென வளைந்திருக்கும் புருவங்கள், அதன் கீழே இரு முயல் குட்டிகளாய் ஓடும் கண்மணிகள், கூரிய நாசி, செம்பவள இதழ் என அவள் முகத்தின் வடிவத்தையே தன்னையும் அறியாமல் அளந்து கொண்டிருந்தான் ப்ரனிஷ்.

அப்போது ப்ரியாவின் மதிமுகத்தினை இந்த ஆதவனானவன் காண்பதற்கு தடையென வந்தது அவள் முகத்தை மறைத்த முடிக்கற்றை ஒன்று.  அதனை நீக்கி ப்ரியாவின் காதின் ஓரம் சேர்த்தவன் கண்ணின் விழுந்தது அவள் வகிட்டில் சூட்டியிருந்த குங்குமம்.  அதனைக் கண்ட நொடி அவனுள் பொங்கிய அந்த உணர்வை அவனால் இனம் காண முடியவில்லை.  ‘இவள் என்னவள்’ என்னும் எண்ணம் மட்டுமே அவன் மனதின் அனைத்து இடுக்குகளிலும் வியாபித்திருந்தது.  அது அவன் மனதிற்கு ஒரு மகிழ்ச்சியைத் தந்ததை அவன் அறியவில்லை.

ப்ரனிஷின் விரல் பட்டு தன் கண்களைத் திறந்தவள் அவ்வளவு அருகில் அவன் முகம் கண்டு தடுமாறினாள், பின், அவனைக் காண வெட்கம் தடுக்க, மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டாள். ப்ரியாவையே பார்த்தவாறு இருந்த ப்ரனிஷிற்கு அவள் விழிகளில் கசிந்த நாணம் தெரிய, அவன் கைகள் மெதுவாக அவள் கண்ணத்திற்கு இடம் மாறின.

தன் முகத்தில் கணவனின் விரல்களை உணர்ந்ததுமே கண்களை அழுந்த மூடியிருந்தாள் ப்ரியா.  அவள் கயல்விழிகள் வெட்கத்தில் மிதப்பதை அவன் காண தடை செய்த இமைகளின் மீது இனிய தண்டனையை வழங்கின அவன் இதழ்கள்.  மெல்ல விழி திறந்து பார்த்தவள் முன் புன்னகைத்து நின்றான் அவள் கண்ணன்.

அந்த நேரம் தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்க, இருவரும் தன்னிலை உணர்ந்து விலகி நின்றனர்.  இவ்வளவு நேரமும் விழி விலகாமல் முகம் நோக்கியவர்கள் இப்போது முதுகைக் காட்டிக்கொண்டு நின்றனர்.

அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வேண்டுமென்று இதயம் நினைக்க, முயன்று இயல்பான குரலில் வெளியே செல்ல கிளம்பச் சொல்லிவிட்டு அகன்றான் ப்ரனிஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.