(Reading time: 16 - 32 minutes)

ப்ரனிஷ் சென்றதும் சில நிமிடங்கள் படபடக்கும் இதயத்தை இயல்புக்குக் கொண்டுவரப் போராடினாள் ப்ரியா.  தன் இருதயம் எக்ஸைட்டட் நிலையில் இருந்து கிரவுண்ட் ஸ்டேட்டிற்கு வந்ததும் தான் அவளால் யோசிக்கவே முடிந்தது.  ப்ரனிஷ் கூறியது பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து உரைத்தது போல் தெளிவில்லாமல் அவள் மூளையில் சென்று அமர, ரெடியாக எழுந்து சென்றாள் ப்ரியா.

காலையில் விழித்த ப்ரனிஷ், ப்ரியாவைக் காணாது, எங்கே சென்றிருப்பாள் எனத் தேடி, அவளை மாடியில் கண்டான்.  விடியற்காலையிலேயே அவளிடம் ஒரு பத்திரிக்கையாளனாக மாறி குடைய வேண்டாம் என்ற எண்ணத்தில் அதனை விடுத்து அடுத்த வேலைகளைப் பார்க்கலானான்.  ஆனால், அதன் பின் நடந்தவற்றால் அவனுக்கு அது சுத்தமாக மறந்தே போனது.

ஒரு மணி நேரம் கழித்து ப்ரனிஷ் “ப்ரியா… ரெடியா??” எனக் கேட்டவாறே உள்ளே வந்தான்.  அதே நேரம், படிகளில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த ப்ரியாவைக் கண்டவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.  சிகப்பு வர்ணத்தில் பச்சை பார்டர் கொண்ட பனாரஸ் சாரியை உடுத்தி, முடியை பின்னலிட்டு மெல்லிய ஒப்பனையோடு வந்து நின்றாள் ப்ரியா.

பொதுவாக ஒப்பனையில் அதிக நாட்டமில்லாதவள் ப்ரியா.  இன்றும் அதேபோல் தான் இருந்தாலும், ஏதோ புதியதாகத் தெரிந்தது அவளிடத்தில்.  அதன் காரணம் என்னவென்று அடித்துக் கூற முடியாவிடினும், எதுவாக இருக்கலாம் என்ற யூகம் இருந்தமையால் ஒன்றும் கூறாமல் கிளம்பிச் சென்று காரில் அமர்ந்தான் ப்ரனிஷ்.  ப்ரியாவும் வர, கார் திருச்சியை நோக்கிப் பறந்தது.

சிறிது நேரத்திற்குப் பின் வண்டி நின்ற இடத்தைக் கண்ட பிறகே அவர்கள் எங்கு வந்திருக்கிறார்கள் என்று கண்டாள் ப்ரியா.  மலைக்கோட்டைக்கு வந்திருந்தனர் இருவரும்.  ப்ரியா ப்ரனிஷைப் பார்க்க, “கல்யாணமானதும் ஏதாவது கோவிலுக்கு போவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன்.  அதான், இங்கே அழைத்து வந்தேன்.  உனக்கு இங்கே வேண்டாம்னு நினைச்சா, வேற எங்கேயாவது போகலாம்” என்றான்.

“பரவாயில்லை. இங்கேயே போகலாம்” என ப்ரியா கூற, இருவரும் அடிவாரத்தில் இருந்த மாணிக்க வினாயகரை தரிசித்து, பின் தாயுமானவரையும் வணங்கி, திருச்சியின் நாயகனாம் உச்சிப் பிள்ளையாரை வணங்கச் சென்றனர்.

தரிசனம் முடிய, இதுவரை அங்கே சென்றிடாத காரணத்தால், கோவிலின் உள்ளே இருந்து சுற்றி சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள் ப்ரியா.  ஏனோ, அவளுக்கு காற்றோட்டமாக முழு திருச்சியையும் பார்க்குமாறு கட்டப்பட்டிருந்த கோவில் மிகவும் பிடித்திருந்தது.

மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு இடமாகப் பார்க்கும் ப்ரியாவுடனேயே நடந்தான் ப்ரனிஷ்.  “ப்ரனிஷ்… இங்கே பாருங்க… ஆறு நல்லா தெரியுது… அதன் கரையில் இருக்கே… அது தான் ஸ்ரீரங்கமா?”

‘ஆம்’ எனப் ப்ரனிஷ் உரைக்க, “வாங்க… அங்கேயும் போகலாம்” என அவன் கையைப் பற்றி செல்ல அடியெடுத்தாள் ப்ரியா.

“ஹே… நில்லும்மா… ஸ்ரீரங்கம் பார்க்க ரொம்ப நேரம் வேணும்.  நாம இப்போ போனா முடியாது.  இன்னொரு நாள் உன்னை கூட்டிட்டு போறேன்” என்றான்.

“ம்ம்…” என்று சிறு சோகத்தோடு தலையசைத்தாள் ப்ரியா.

“நீ இதுவரைக்கும் இங்கே வந்ததே இல்லையா?” – ப்ரனிஷ்.

“இல்லை..” என்றவள் சிறிது யோசித்துவிட்டு, “நம்ம வீடு எங்கே இருக்கு ப்ரனிஷ்”” எனக் கேட்டாள்.

ப்ரியாவின் கேள்வியைக் கேட்டு அவளைப் பார்த்தான் ப்ரனிஷ்.  ‘நம் வீடு!’ – அவ்வாறு தானே கூறினாள் ப்ரியா?  நேற்றே திருமணம் நடந்தது.  அதுவும் எதிர்பாராத வகையில்.  அப்படியிருந்தும் எப்படி இவளால் இவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்தது?

“ப்ரனிஷ்… என்ன யோசிக்கறீங்க? வீடு எங்கே இருக்கு? எந்த வழியா வந்தோம்?” – ப்ரியா.

“ஒன்னும் இல்ல… அதோ… அந்த ஆற்றுக்கு மேலே பாலம் இருக்கு பார்த்தியா… அதன் வழியே போனா 15 km-ல நம்ம வீடு வந்துடும்”

இருவரும் இன்னும் சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு, பின் சாப்பிட்டு செல்ல, உத்தமர் கோவில் திறந்திருந்தது.  படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைப் புரியும் முப்பெரும் தெய்வங்களுக்குமான கோவில் அது.

இருவரும் மூலவரை வணங்கிக்கொண்டிருக்க, இவர்கள் புதுமணத் தம்பதிகள் எனக் கண்டுகொண்ட அர்ச்சகர், ப்ரனிஷிடம் குங்குமம் அளித்து ப்ரியாவின் நெற்றியில் வைத்துவிடக் கூறினார்.

அவர் சொன்னவாறே செய்தவன் அவள் முகம் பார்க்க, அஞ்சனம் தீட்டிய அவள் நயனங்கள், ‘இனி எல்லாம் நீயே!’ எனக் கூறாமல் கூறிக்கொண்டிருந்தன.  அதனைக் கண்டுகொண்டவன் வேறுபுறம் திரும்பிக்கொண்டான்.  ப்ரனிஷின் இந்த இறுதி செய்கையை கவனிக்காததால் ப்ரியா காதல் வானத்தில் பறந்துகொண்டிருந்தாள்.  இருவரும் ஒன்றாக பிரகாரத்தை சுற்றி வர, அவள் மனம் இனிமையாக பாடல் படித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.