(Reading time: 20 - 40 minutes)

"நான், பூங்கொடி, சகுந்தலை மற்றும் இளவரசர் நால்வரும் விளையாடுவோம்"

"இளவரசர் கூடவா?" என்று சற்றே ஆச்சர்யத்துடன் பார்த்திபன் வினவினான்.

"ஆம், நம் இளவரசருடன் தான். அப்போதெல்லாம் இங்கே இருக்கும் மாங்காய்களைப் பறித்து, அதில் மிளகாயைத் தடவி சாப்பிடுவோம். மிகவும் காரமாக இருந்தால், இந்த வாய்க்காலில் ஓடும் தண்ணீரை குடிப்போம். இப்போது நினைத்தாலும் நாவில் அந்த ருசி வருகிறது. அப்போதே இளவரசர் பயங்கர பிடிவாதக்காரர். அவர் ஒன்றை ஆசைப்பட்டால் அது நடந்தே தீரவேண்டும். இல்லையென்றால், அது நடக்கும் வரை ஓய மாட்டார். அந்த பிடிவாத குணமே எங்கள் நட்பில் விரிசல் விழ காரணம் ஆயிற்று" என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே பார்த்திபன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான்.

'என்னைத் தனியாக பேசவைத்து விட்டானே' என்று மனதுக்குள் நினைத்த படியே இலைகளுக்கு இடையே தெரிந்த நீல வானத்தைப் பார்த்தான் சம்யுக்தன். இலைகள் அசைந்தபோது, சூரிய ஒளி அவன் முகத்தில் பட்டு கண்கள் கூசின. ஒரு நிமிடம் கண்களை மூடியபோது, இளவரசருடன் தான் சிறு பிராயத்தில் விளையாடிய நினைவுகள் மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன.

இரவு நேரக் காவல் பணி செய்த களைப்பினால் சம்யுக்தன் கண்ணயர்ந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவன் ஒரு விசித்திரமான கனவு கண்டான்.

மாட்டு வண்டியில் பார்த்த அந்த பெண்ணுருவம், அவன் முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பெண் முகத்தை மூடிக்கொண்டு நடந்து சென்றார். சம்யுக்தன் அவரிடம், யாரம்மா நீங்கள்? என்று கேட்க, அவரோ எதுவும் சொல்லாமல் நடந்து சென்றார். நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன், நீங்கள் பதில் ஒன்றும் சொல்லாமல் சென்று கொண்டிருக்கிறீர்களே என்று அவர் முன்னால் சென்று கேட்டான். அவருடைய கண்கள் விகாரமாக காட்சியளித்தன. என்னை ஏன் பின்தொடர்ந்து வருகிறாய்? என்று கேட்டுக்கொண்டே சம்யுக்தனின் கழுத்தைப் பிடித்தார். அவன், அவருடைய பிடியிலிருந்து விடுபட முயன்றான். ஆனால், முடியவில்லை. அவன் கண்கள் இருளடையத் தொடங்கின. அவனுடைய சுவாசமே நின்று போய்விட்டது போல் தோன்றியது. அந்த இக்கட்டான நொடியில், அவனால் கத்தவும் முடியவில்லை. அந்நேரத்தில் ஏதோ ஒரு பெண்ணுருவம் வேகமாக ஓடி வருவதைப் போல் தோன்றியது. தன்னை காப்பாற்றத்தான் அவள் வருகிறாள் என்று அவன் நினைத்தான். அந்த பெண்ணுருவம் ஒரு கல்லை எடுத்து எறிந்தது. அது சம்யுக்தனின் மார்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. அது அருகில் வர வர ஒரு பெரிய பாறாங்கல்லைப் போன்று அவனுக்கு தோன்றியது. அது மிக அருகில் வரவும், பயத்தினால் கண்களை மூடிக்கொண்டான்.

திடீரென்று சம்யுக்தனின் மார்பின் மேல், ஒரு மாங்காய் விழுந்தது. பயத்தில் அலறிக்கொண்டே எழுந்து உட்கார்ந்தவன். கழுத்தைப் பிடித்துக்கொண்டே இருமினான். பக்கத்தில் மாங்காய் கிடந்தது. நடந்தது கனவா நனவா என்று யோசிக்கக்கூட அவனால் முடியவில்லை.

அப்போது, பெண்களின் சிரிப்பொலி கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். பூங்கொடியும் சகுந்தலையும் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள். சம்யுக்தன் அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தான். எதுவும் பேசவில்லை. கனவில் நடந்த பயங்கரத்திலிருந்து அவன் மீளாமல் இருந்தான்.

சகுந்தலை, "என்ன அண்ணா, அப்படி மலைத்துப்போய் பார்க்கிறீர்கள்?" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

"உன் அண்ணா ரம்பை, ஊர்வசி, மேனகையுடன் கனவில் இன்ப உலா சென்றுகொண்டிருக்கும்போது எழுப்பி விட்டாயே. அதனால் தான் கனவு கலைந்த கோபத்தில் நம்மை முறைத்துப் பார்க்கிறார்" என்று பூங்கொடி கிண்டலாக கூறினாள்.

அதைக் கேட்டு சம்யுக்தன் பூங்கொடியை ஒரு முறை முறைத்தான். எழுந்து நின்று, ஏதோ ஒரு யோசனையுடன் அவர்கள் அருகில் சென்றான்.

பூங்கொடியிடம், "நேற்று, மாட்டு வண்டியில் சில வயதான பெண்மணிகளை ஏற்றினாயே, அவர்களை எங்கே ஏற்றினாய்?" என்று கேட்டான்.

"எதற்கு அத்தான்?"

"கேட்டதற்கு பதில் கூறு"

"எல்லாரும் பூஜை முடிந்து வந்தவர்கள் தான். கோவிலுக்கு சற்று தொலைவிலுள்ள பெரிய ஆலமரத்தின் அருகே தான் அவர்களை ஏற்றினோம். அதில் ஒரு பெண்மணி மட்டும் வண்டியில் ஏறுவதற்கு முதலில் சற்று தயக்கம் காட்டினார்"

"எந்த பெண்மணி?"

"அரண்மனைக்கு பக்கத்து வீதியில் இறங்கினாரே, அவர் தான்"

அதைக் கேட்டதும் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் சம்யுக்தன்.

"எதற்கு இதையெல்லாம் கேட்கிறீர்கள்"

"ஒன்றுமில்லை, தெரிந்துகொள்ளத்தான். எனக்கு ஒரு சிறிய வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறிக்கொண்டே சென்று பார்த்திபனை எழுப்பினான்.

பார்த்திபன், "என்ன, அதற்குள் விடிந்துவிட்டதா?" என்று அலறியடித்துக் கொண்டே எழும்பினான்.

"இல்லை, நமக்கு முக்கியமான வேலை ஒன்று வந்திருக்கிறது. வா, போகலாம்"

"என் வாழ்நாளில் நான் செய்த மிகப் பெரிய தவறு எது என்று தெரியுமா, சம்யுக்தா?"

"என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.