(Reading time: 20 - 40 minutes)

"வா சம்யுக்தா, இலந்தம் பழம் சாப்பிடுகிறாயா?"

"நான் செய்யச் சொன்ன காரியம் என்னவாயிற்று?"

"செய்து முடித்து விட்டுத்தான் இங்கு வந்து இலந்தம் பழம் சாப்பிடுகிறேன்"

"அதற்குள்ளாகவா முடித்துவிட்டாய்?"

"என் பார்வை தான் கழுகுப் பார்வையாயிற்றே. இரை மட்டும் தான் என் கண்ணிற்கு தெரியும். வேறு எதுவும் என் கண்ணுக்குத் தெரியாது"  

"ஆகட்டும், எத்தனை வீடுகள் நான் சொன்னது போல் காணப்பட்டன"

"இரண்டு வீடுகள் நீ சொன்னது போல் இருந்தன. ஒன்று பிள்ளையார் கோவில் வீதியிலும், மற்றொன்று மாட்டுச் சந்தைக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றங்கரையின் அருகேயும் இருந்தன"

"அவர்களைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தாயா?"

"விசாரித்தேன்"

"அவர்களின் பெயர்களைத் தெரிந்துகொண்டாயா?"

"அதை விசாரிக்கவில்லையே"

சம்யுக்தன் அவனை முறைத்துப் பார்த்தான்.

பார்த்திபன், "முறைக்காதே, அவர்கள் இரண்டு பேருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவருமே இங்கு புதிதாக வந்தவர்கள். அக்கம் பக்கத்தில் அதிகம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. காலையில் சென்று இரவில் வெகு நேரம் கழித்து வீடு திரும்புபவர்கள். நீ ஏதாவது கண்டுபிடித்தாயா?" என்று கேட்டான்.

"நான் ஒரு குடிசையைக் கண்டு பிடித்தேன்"

இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே, அந்த பெண்மணி மோர்ப் பானையை தலையில் சுமந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அதைப் பார்த்த பார்த்திபன், சம்யுக்தனைப் பார்த்து, "அந்த பெண்மணி வந்து கொண்டிருக்கிறாள்" என்றான்.

சம்யுக்தன் "மறைந்து கொள். அவளைப் பின் தொடர்ந்து சென்று என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்" என்று கூறினான்.

அந்தப் பெண்ணிற்கு தெரியாமல் இருவரும் அவளைப் பின் தொடர்ந்தார்கள். அந்தப் பெண்மணி பிள்ளையார் வீதியை நோக்கி சென்றாள், அங்கு சென்றதும் ஒரு குடிசையின் முன் நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அப்போது பார்த்திபன், "சம்யுக்தா, நான் சொன்ன குடிசை இது தான்" என்று கூறினான்.

சம்யுக்தன் அதைக் கேட்டுக்கொண்டே, அந்த பெண்மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்ட அவள், அந்தக் குடிசையின் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

அதைப் பார்த்த சம்யுக்தன், அந்த குடிசையின் அருகே சென்று, அக்குடிசையின் சின்ன சன்னல் வழியே அந்த பெண் என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.

அவள் தான் கொண்டு வந்த மோர்ப் பானையிலிருந்து ஓர் ஓலையை எடுத்து அங்கிருந்த ஓர் உரியில் இருந்த பானையில் அதை போட்டுவிட்டு , தன்னை யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். அதன் பிறகு அவள் நேரே சம்யுக்தன் கண்டுபிடித்த குடிசைக்குள் சென்றாள்.

சம்யுக்தன் பார்த்திபனிடம், "இது தான் நான் பார்த்த குடிசை" என்றான்.

பார்த்திபன், "இந்தப் பெண் ஏன் இப்படி செய்துகொண்டிருக்கிறாள்?" என்று கேட்டான்.

"அதைக் கண்டுபிடிப்போம். முதலில் நீ சென்று நம் நண்பர்கள் சிலரை அழைத்து வந்து இந்த இரண்டு குடிசைகளையும், குடிசைக்கு இருவராக கண்காணிக்கச் சொல். என் யூகம் சரியென்றால், இவள், அடுத்து நீ சொன்ன அந்த மாட்டுச் சந்தைக்குப் பக்கத்தில் உள்ள குடிசைக்குத்தான் செல்வாள். அதன் பிறகு கொண்டு வந்த மோரை விற்க மாட்டுச் சந்தைக்கு செல்வாள். நான் இவளை பின்தொடர்ந்து சென்று சந்தையில் காத்துக் கொண்டிருக்கிறேன். நீ, நான் சொன்ன ஏற்பாட்டை செய்து முடித்துவிட்டு சந்தைக்கு வந்து விடு" என்று கூறி விட்டு அப் பெண்மணியைத் தொடர்ந்து சென்றான் சம்யுக்தன்.

ந்தப் பெண் மூன்று வீதிகளைக் கடந்து ஒற்றையடிப்பாதையில் சென்று கொண்டிருந்தாள். சம்யுக்தன் செடிகளின் மறைவில் அவளைக் கண்காணித்துக்கொண்டே சென்றான். சிறிது தூரம் சென்று, யாராவது வருகிறார்களா என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் வரவில்லை என்று தெரிந்தவுடன் ஆற்றங்கரையோரமாக இருந்த குடிசையை அடைந்தாள். சம்யுக்தன் சற்று தள்ளி நின்று அதைப் பார்த்தான். அவள் அந்த குடிசையினுள் நுழைந்தாள். சிறுது நேரம் கழித்து வெளியே வந்து சந்தையை நோக்கிச் சென்றாள்.

சந்தை மிகவும் பரபரப்பாக இருந்தது. சந்தையில் காளை மாடுகள், பசு மாடுகள், கன்றுக் குட்டிகள் ஆகியன விற்பனைக்காக நின்று கொண்டிருந்தன. அதை வாங்குபவர்கள் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு எதிர்புறத்தில் குதிரைகளும் விற்பனைக்காக இருந்தன.

அந்தப் பெண்மணி ஒரு மரத்தடி நிழலில் பானையை இறக்கி வைத்து விட்டு, அமைதியாக சந்தையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். அவ்வப்போது அங்கிருந்தவாறே அக் குடிசையையும் நோட்டமிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.