(Reading time: 20 - 40 minutes)

"உன்னை நண்பனாக்கியது தான். உன்னை நண்பனாக்கியதிலிருந்து நான் தூங்குவதை மறந்து வெகுநாட்களாகி விட்டன"

"அதற்கு பிறகு வருத்தப்பட்டுக் கொள்ளலாம், சீக்கிரம் வா"

வேறுவழியில்லாமல் பார்த்திபனும் அவன் பின்னே புலம்பிக்கொண்டே சென்றான். கட்டி வைத்திருந்த குதிரையை அவிழ்த்து அதன் மேல் ஏறி குதிரை ஓடுவதற்கு தயார்படுத்தினான். "என்னைப் பின்தொடர்ந்து வா" என்று கூறி சம்யுக்தன் முன்னால் சென்றான்.

பார்த்திபன், "என்ன வேலை என்று கூறாமலேயே அழைத்துச் செல்கிறானே" என்று முணுமுணுத்தவாறே சென்றான்.

குதிரை வேகமாக சென்றுகொண்டிருந்தது. அரண்மனைக்கு பக்கத்து வீதியில் குதிரையை நிறுத்தி விட்டு, பார்த்திபன் வருவதற்காக காத்திருந்தான் சம்யுக்தன். பார்த்திபனும் மெதுவாக வந்து சேர்ந்தான்.

"நான் எப்போதோ வந்து விட்டேன். நீ வந்து சேர இவ்வளவு நேரமா?"

"கிளம்பும்போது எங்கே போகிறோம் என்று சொல்லிவிட்டு சென்றிருக்க வேண்டும். இல்லை, மெதுவாகவாவது சென்றிருக்கவேண்டும். நீ இரண்டையுமே செய்யாமல் இப்படி கேள்வி கேட்பது முறையல்ல. சரி, இங்கே எதற்காக வந்திருக்கிறோம்?"

"பொறு, சொல்கிறேன்" என்று கூறிவிட்டு சம்யுக்தன் அந்த வீதியில் நடந்தான்.

பார்த்திபன் மனதுக்குள், 'இவனுடன் இன்னும் சிறிது காலம் இருந்தால், பைத்தியம் பிடிப்பது உறுதி' என்று எண்ணிக்கொண்டான்.

சம்யுக்தன், அந்த பெண்மணியின் வீட்டைத் தேடிக்கொண்டிருந்தான். சற்று தூரத்தில், ஒரு குடிசை புது ஓலை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டினருகே சென்று கதவின் ஓரமாய் நின்று மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான். அந்த பெண்மணி, ஒரு பானையில் மோர் கடைந்து கொண்டிருந்தார். அதை சம்யுக்தன் பார்த்துக்கொண்டே அந்த வீட்டை மெல்ல நோட்டமிட்டான். பரண் மீது ஒரு துணி மூட்டையும் கொடியில் சில துணிகளும் சமையல் செய்ய சில பாத்திரங்களும் இருந்தன.

சம்யுக்தன் மீண்டும் அந்த பெண்மணி மோர் கடைவதைப் பார்த்தான். அந்த பெண்மணி, பலமுறை மத்துடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை நழுவ விட்டார். அதை பார்த்ததும், சம்யுக்தனுக்கு அவர் மோர் கடைவதில் அனுபவமில்லாதவர் என்று புரிந்தது.

அப்போது அங்கே வந்த பார்த்திபன், "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான். பார்த்திபனின் பேச்சு சத்தத்தைக் கேட்டு அந்த பெண்மணி மோர் கடைவதை நிறுத்திவிட்டு வாசல் பக்கம் திரும்பினார்.

உடனே, சம்யுக்தன் பார்த்திபனை அழைத்துக்கொண்டு அந்த குடிசையின் பின்பக்கமாக சென்று ஒளிந்து கொண்டான். அந்த பெண்மணி வாசலில் வந்து எட்டிப் பார்த்து, யாருமில்லை என்று தெரிந்ததும் மறுபடியும் உள்ளே சென்று விட்டார்.

பார்த்திபன் சம்யுக்தனிடம், " என்னவாயிற்று?" என்று கேட்டான்.

சம்யுக்தன் அந்த குடிசை ஓலையைத் தொட்டுப் பார்த்து, "நான் சொல்வதைக் கவனமாக கேள் பார்த்திபா. இந்த சுற்றுப்புறத்தில் தனியாக எங்காவது புது ஓலை கொண்டு வேயப்பட்ட குடிசை இருக்கிறதா என்று தேடு, நானும் தேடுகிறேன்" என்றான்.

"இதையெல்லாம் எதற்காக செய்யச் சொல்கிறாய்?"

"அதை பிறகு சொல்கிறேன். முதலில் நான் சொல்வதை செய்"

பிறகு, ஆளுக்கொரு புறமாக சென்றார்கள். இருவரும் வீதி வீதியாக சென்று தேடிப் பார்த்தார்கள். அரண்மனைக்கு இரண்டு தெரு தள்ளி, ஒரு சிறிய குடிசை தனியாக இருந்ததை கண்டு அந்த குடிசையின் அருகில் சென்று பார்த்தான் சம்யுக்தன். அது பூட்டி இருந்தது. பக்கத்திலிருந்த வீட்டிலிருந்தவர்களிடம் விசாரித்துப் பார்த்தான்.

அந்த குடிசையில் இருப்பவன் ஒரு வேட்டைக்காரன். முயல், மான்களை வேட்டையாடிக்கொண்டு வருவான். காலையில் சென்றால் இரவில் தான் திரும்புவான். சில மாதங்களுக்கு முன்னர் தான் அங்கே வந்தான். யாரிடமும் அதிகமாக பழகாமல், தானுண்டு தன் வேலையுண்டு  என்றிருப்பான் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

"அவன் பெயர் தெரியுமா?"

"பரந்தாமன்" என்று அவன் கூறியதாய் ஞாபகம் இருக்கிறது என்று ஒருவர் கூறினார்.

பிறகு, மறுபடியும் சில வீதிகளில் சென்று பார்த்த சம்யுக்தனுக்கு சந்தேகப்படும்படியாக வேறு ஏதும் குடிசை தென்படவில்லை. மறுபடியும் அரண்மனை பக்கத்து வீதிக்கு சென்றான். அங்கே ஒரு பெரிய இலந்தை மரம் இருந்தது. அங்கு சென்று அதன் நிழலில் பார்த்திபனுக்காகக் காத்திருந்தான்.

வெகுநேரமாக காத்திருந்தும் பார்த்திபன் வரவில்லை. என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துக்கொண்டே, கீழே கிடந்த இலந்தம் பழம் ஒன்றை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அப்போது பாதி தின்ற ஓர் இலந்தம் பழம் அவன் மேல் வந்து விழுந்தது. அதைப் பார்த்து விட்டு சுற்றிப் பார்த்தான். அப்போது மறுபடியும் அதே போல இன்னொரு பழம் வந்து விழுந்தது.

ஏதாவது குரங்கின் அட்டகாசமாக இருக்குமோ என்று மரத்தை அண்ணாந்து பார்த்தான். அவன் சந்தேகப்பட்டது போல குரங்கின் அட்டகாசம் எதுவும் இல்லை. பிறகு எப்படி இலந்தம் பழம் நம் மேல் விழுகிறது என்று அந்த மரத்தைச் சுற்றிப் பார்த்தான்.

அப்போது மரத்தின் பின்புறத்தில் இருந்து பார்த்திபன், இலந்தம் பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே, "என்ன பழம் இது, ஒன்று கூட சுவையாக இல்லையே" என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தான். சம்யுக்தன் முறைத்துக்கொண்டே பார்த்திபன் தோளில் கை வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.