(Reading time: 20 - 40 minutes)

சம்யுக்தன் அவளைக் கண்காணித்துக்கொண்டே, பார்த்திபனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். சிறிது நேரத்தில், சந்தைக்கு குதிரையில் வந்த பார்த்திபன் சம்யுக்தனைத் தேடினான். அப்போது, சம்யுக்தன் அக்குதிரையை நோக்கி ஒரு வினோத ஒலியை எழுப்பினான். அக்குதிரை உடனே அந்த ஒலி வந்த திசையை நோக்கி சென்றது. பார்த்திபன் சம்யுக்தனைப் பார்த்து கீழே இறங்கி வந்தான்.

"எதற்காக என் குதிரையில் வந்தாய்?" என்று சம்யுக்தன் கேட்டான்.

"உன்னைக் கண்டுபிடிக்க வேண்டுமே" என்றான் பார்த்திபன்.

"நான் சொன்னதை செய்துவிட்டாயா?"

"செய்துவிட்டேன். ஒவ்வொரு குடிசையையும் நீ சொன்னது போல் இரண்டு பேர் வீதம் ரகசியமாக கண்காணிக்கிறார்கள். இங்கே இந்த பெண் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?"

"அவள் வேலையை செய்து முடித்துவிட்டு மோர் விற்றுக் கொண்டிருக்கிறாள்"

பார்த்திபன் அவளைப் பார்த்தான். அவளிடம் இரண்டு பேர் சின்ன பானையில் மோர் வாங்கி குடித்துக்கொண்டிருந்தார்கள்.

"சம்யுக்தா, நாமும் சென்று மோர் குடிப்போமா?"

சம்யுக்தன் அவனை முறைத்துப் பார்த்தான்.

"சரி, வேண்டாம்" என்று கூறிய பார்த்திபன், "தாகமாய் இருக்கிறது. அதனால் தான் கேட்டேன்" என்றான்.

இரண்டு பேரும் அங்கு வெகுநேரமாக ஒளிந்து கொண்டிருந்தார்கள்.

மேற்கில் சூரியன் மறைந்து கீழ்வானம் சிவந்து கொண்டிருந்தது. சந்தை முடியப் போகும் நேரம்.

அந்தப் பெண்மணி, தான் கொண்டு வந்த மோர்ப் பானையில் மோர் தீர்ந்தவுடன் சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து மோர் விற்ற காசை எண்ணி முடித்துவிட்டு அதைத் தன் மடியில் கட்டிக் கொண்டாள். பிறகு, பானையைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

பார்த்திபன், "அப் பெண்மணி போகிறாள் பார்" என்றான்.

"அப்பெண்மணி முக்கியமில்லை. அந்த குடிசைக்கு யார் வருகிறார்கள் என்று பார்க்கவேண்டும். அப்பெண்மணி நம்மை மீறி எங்கும் சென்று விட மாட்டாள்" என்று சம்யுக்தன் கூறினான்.

அவர்கள் அக்குடிசைக்கு யார் வருகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

பகல் முடிந்து இரவு எட்டிப் பார்த்தது. வயலில் வேலை பார்த்த ஆண்கள் ஏர் கலப்பையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அகல் விளக்குகள் வீட்டின் வாசப்படியிலும் வீட்டினுள்ளும் எரியத் தொடங்கின. எங்கிருந்தோ ஓர் ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டது.

குடிசையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இரண்டு பேர் பிள்ளையார் தெருவில் இருந்த குடிசையைக் கண்காணித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அக் குடிசையின் அருகே காலடி சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் தங்களை மறைத்துக்கொண்டு இன்னும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அந்த குடிசைக் கதவைத் திறந்து கொண்டு ஓர் ஆண் உருவம் உள்ளே சென்றது. உள்ளே சென்று நேரமாகியும் ஒரு விளக்கு கூட ஏற்றப்படாதது அவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. சிறிது நேரம் கழித்து அவ்வுருவம் வெளியே வந்தது. அவ்வுருவம் திடகாத்ரமான தோற்றத்துடனும் கூரிய விழிகளுடனும் காணப்பட்டது. அந்த விழிகளில் வஞ்சகம் குடியிருந்தது மங்கிய நிலவொளியில் நன்றாகவே தெரிந்தது. வலது கையிலே ஒரு காப்பு கட்டப்பட்டு ஒரு கம்புடன் அந்த உருவம் நடந்து சென்றது.

அந்த பெண்மணி இரண்டாவதாக சென்ற குடிசையிலும் அதே போன்று சம்பவம் நிகழ்ந்தது. அந்த இரண்டு உருவங்களும் வெவ்வேறு வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருந்தன. அந்த இருவரையும் அவர்கள் அறியாவண்ணம் வீரர்கள் பின் தொடர்ந்தனர்.

வீதியெங்கும் இருள் சூழ்ந்து இருந்தது. அந்த இருளில் அவர்கள் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வந்ததும் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த அந்த இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். அந்த உருவங்கள் பேசிக்கொண்டன.

"உன்னை யாரும் பார்க்கவில்லை தானே?" என்று ஒருவன் கேட்டான்.

அதற்கு இன்னொருவன், "யாரும் பார்க்கவில்லை, வா, சீக்கிரம் செல்லலாம், நேரமாகிறது" என்றான்.

இருவரும் வேகமாக சந்தை இருந்த திசையை நோக்கி சென்றார்கள். அவர்களை பின்தொடர்ந்து வீரர்களும் சென்றார்கள். சந்தைக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு குடிசையை அந்த இருவரும் அடைந்தார்கள்.

சம்யுக்தனும் பார்த்திபனும், அந்த இருவரும் குடிசையில் நுழைவதையும்   அவர்களைப் பின்தொடர்ந்து வீரர்கள் வந்ததையும் பார்த்தார்கள். பிறகு, வீரர்கள் மரத்திலும், நதிக்கரை ஓரத்திலும் ஒளிந்து கொண்டதையும்  பார்த்தார்கள் .

"இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி ஒளிந்து கொண்டிருப்பது?"என்று பார்த்திபன் கேட்டான்.

"சற்று பொறுமையாக இரு. இன்னும் ஒருவன் வரவேண்டியிருக்கிறது" என்றான் சம்யுக்தன்.

அப்போது ஓர் உருவம் சந்தை வழியாக நடந்து சென்றது. அவ்வுருவம் யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றது. அவன் கண்ணிலே அகப்படாமல் இருக்க சம்யுக்தனும், பார்த்திபனும் கீழே குனிந்து கொண்டார்கள்.

அவ்வுருவம் அக்குடிசையில் நுழையும்போது மறுபடியும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தது. சிறிது நேரத்தில், தீபத்தின் வெளிச்சம் அக்குடிசையில் தெரிந்தது.

சம்யுக்தனும் பார்த்திபனும், ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்தனர். இருவரும் அக்குடிசையை நோக்கி மெதுவாக சென்றனர்.

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 02

பாகம் - 01 - அத்தியாயம் 04

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.