கரிய மேகங்கள் நிலவை விழுங்க மெதுவாக நகர்ந்து சென்றன. ஆனால் நிலவோ மேகங்களை ஏமாற்றிவிட்டு மெல்ல நழுவி வந்தது. நட்சத்திரங்கள் வைரங்களைப்போல ஜொலித்துக்கொண்டிருந்தன. இருளின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் நரியும் ஓநாயும் ஊளையிட்டுக்கொண்டிருந்தன.
அப்போது, வீரபுரத்தை நோக்கி, ஓர் அடர்ந்த கானகத்தின் வழியே ஒரு குதிரை களைப்புடன் மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தது. நீண்ட தூர பயணம் அதைக் களைப்படையச் செய்திருந்தது. அதன் மேல் ஒருவன் பயத்தோடு வந்துகொண்டிருந்தான். அவன் குதிரையின் வயிற்றில் தன் குதிகால்களால் அழுத்தி அதை வேகமாக செல்லும்படி அதட்டினான். ஆயினும் அக்குதிரை மெதுவாகவே சென்றது.
அந்த அமைதியான கானகம் அவனை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. வானளாவிய உயர்ந்த மரங்கள், புதர்கள், ரீங்காரமிடும் வண்டுகள் முதலியன அந்த கானகத்தை இன்னும் பயங்கரமாக சித்தரித்தது. நெடிய மரங்களின் பக்கத்திலிருந்த சிறிய மரங்கள் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. பகலில் பார்ப்பவர்களுக்கு, அக்கானகம் இன்பமாகவும் இரவில் ஒரு கொடிய அரக்கனிடம் சிக்கியிருப்பது போலவும் தோற்றமளிக்கும் .
குதிரை வந்த வழியில் கோரைப்புற்கள் வளர்ந்திருந்தன. அவற்றை மிதித்தபடியே மெதுவாக அது நடந்து கொண்டிருந்தது .இரவின் பயங்கர முகம் குதிரையில் பயணம் செய்தவனின் மனதில் ஒரு வித பீதியை உண்டாக்கினாலும், அவன் இதயத்தில் குடிவைத்திருக்கும் தன்னுடைய அத்தை மகள் பூங்கொடியை நீண்ட நாட்கள் கழித்து காணப் போகும் ஆசை, பயத்தை போக்கி ஒரு வித குதூகலத்தை உண்டாக்கியது. குதிரையில் வந்தவன் வேறு யாரும் அல்ல, பூங்கொடியின் மாமன் மகன் பூபதி தான் அவன்.
பூபதி நிலவைப் பார்த்தான். அந்நிலவு அவன் கூடவே வருவது போல அவனுக்குத் தோன்றியது. நிலவை மட்டும் இறைவன் படைக்காமல் இருந்திருந்தால், எத்தனை கவிஞர்கள் கவிதை எழுத முடியாமல் தவித்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டே அந்நிலவின் அழகை ரசித்தான். அப்போது அந்நிலவில் பூங்கொடியின் முகம் தெரிந்தது போலவும் அது அவனைப் பார்த்து கண்சிமிட்டுவது போலவும் கற்பனை செய்துகொண்டு வந்துகொண்டிருந்தான்.
காளிதாசன், தெய்வானை தம்பதிகளின் ஒரே மகன் பூபதி. பூபதியின் தந்தை அந்நாளில் மாணிக்க கற்களை விற்று வணிகம் செய்து, பெரும் செல்வத்தை சேர்த்தவர். வயது முதிர்ந்த காரணத்தால், அவருடைய வணிகத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு பூபதிக்கு வந்தது. வெவ்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து விட்டு வெகு நாட்கள் கழித்து திரும்பி வருகிறான். எப்படியாவது பூங்கொடியை மணப்பதே அவன் ஆசை. பூபதிக்கோ பூங்கொடி மேல் பித்து. பூங்கொடிக்கோ சம்யுக்தன் மேல் பித்து. பூபதியின் தாய், பூங்கொடி தான் அவன் மனைவி என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அது அவன் ஆசையை மேலும் வளர்த்து ஆலமரமாக்கியது.
எல்லாவற்றையும் மனதில் அசை போட்டுக்கொண்டே பூபதியின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் நினைவில் சம்யுக்தனின் முகம் மின்னலைப் போல் வந்து வந்து சென்றது. அவன் இதயம் அனலாகக் கொதித்தது. தன் ஆசைக்கு இடையூறாக இருந்த சம்யுக்தனை அவன் அறவே வெறுத்தான். இருந்தாலும் அவனுக்குள் ஓர் இறுமாப்பு இருந்தது. பொன், பொருள், மாட மாளிகை இவை அனைத்தும் இருக்கும் தான் எங்கே? சம்யுக்தன் எங்கே? தன்னுடன் அவனை ஒப்பிடுவதே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இருந்தும் எல்லாருக்கும் சம்யுக்தனைப் பிடிக்கிறதே. அதற்கு காரணம் என்ன? அவனைப்போல நானும் அழகாகத்தானே இருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அவன் மனசாட்சி. 'ஏன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய். நிறுத்து' என்று அவன் சிந்தனையைக் கலைத்தது. அப்போது அவன் ஆற்றங்கரையை நெருங்கி இருந்தான்.
சம்யுக்தனும் பார்த்திபனும் வாளை கையில் பிடித்தபடி மெதுவாக அந்த குடிசையை நோக்கி வந்துகொண்டிருந்தனர். சம்யுக்தனும் பார்த்திபனும் வருவதைப் பார்த்து மரத்தில் ஒளிந்திருந்த வீரர்கள் கீழே இறங்கி ஆற்றங்கரையில் ஒளிந்திருந்த வீரர்களுக்கு சமிக்ஞை செய்தனர். அவர்களும் அந்த குடிசையை நோக்கி மெதுவாக வந்தனர்.
அப்போது, குதிரையின் காலடி சத்தம் கேட்டு சம்யுக்தனும் வீரர்களும் ஒரு கணம் திகைத்தார்கள். சம்யுக்தன் மற்ற வீரர்களிடம் ஒளிந்து கொள்ளுமாறு சமிக்ஞை செய்து விட்டு, அவனும் பார்த்திபனும் அக்குடிசையின் பின்புறமாக சென்று ஒளிந்து கொண்டனர். இரு வீரர்கள் மரத்தின் பின்னாலும் இருவர் நதிக்கரை நாணல்களின் இடையேயும் ஒளிந்து கொண்டனர். குதிரையில் வருவது யாரென்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
குதிரையில் வந்தவன் வேறு யாருமல்ல, பூபதி தான். அக்குதிரை தண்ணீரைப் பார்த்ததும் நதிக்கரையை நோக்கி சென்றது. அப்போது நதிக்கரையில் ஒளிந்திருந்த வீரர்கள் மெதுவாக தண்ணீருக்குள் இறங்கி ஒளிந்து கொண்டனர்.
சம்யுக்தன், பார்த்திபனைப் பார்த்து, "அது யாரென்று தெரிகிறதா?" என்று கேட்டான்.
"தெரியவில்லை, ஆனால் யூகிக்க முடிகிறது" என்று பார்த்திபன் சொன்னான்.
சம்யுக்தன் புரியாதது போல் பார்த்திபனைப் பார்த்தான்.
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!
Antha marma manithan yaar endru therinthu kolla Adutha paguthiyai miga aavalaaga ethir paarkkirom.
Kathai viruvirupa poguthu.