(Reading time: 21 - 42 minutes)

அப்போது மூவரில் ஒருவன் "ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று கூக்குரலிட்டான். அவர்கள் கையிலிருந்த தீப்பந்தத்தை கீழே போட்டுவிட்டு ஓட எத்தனித்தார்கள். உடனே, சம்யுக்தன் பாய்ந்து சென்று ஒருவனைப் பிடித்துக்கொண்டான். மற்ற இருவரும் ஓடிச்சென்று ஆற்றில் குதித்தார்கள். அப்போது ஆற்றில் ஒளிந்து இருந்தவர்கள் அவர்களைப் பிடித்தார்கள். ஆனால், அவர்களால் சமாளிக்க முடியவில்லை; போராடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த மற்ற இரு வீரர்கள் தண்ணீரில் குதித்து அவர்களைப் பிடித்து கரைக்கு கொண்டுவந்தார்கள்.

சம்யுக்தன் தான் பிடித்தவனை பார்த்திபனிடம் ஒப்படைத்து விட்டு, மூவரையும் பார்த்து "யார் நீங்கள்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.

மூவரும் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள்.

"இவர்களை அரசரிடம் ஒப்படைத்து விடுவோம்" என்று பார்த்திபன் சொன்னான்.

சம்யுக்தன் மூவரிடமும், "அது என்ன ஓலை?" என்று கேட்டுக்கொண்டே, அவற்றை பிடுங்க முற்பட்டான்.

அப்போது திடீரென்று அங்கு வந்த ஓர் உருவம், கண்ணிமைக்கும் நேரத்தில் சம்யுக்தனைத் தாக்கி கீழே விழவைத்தது  பார்த்திபனையும் மற்ற வீரர்களையும் தாக்கி அம்மூவரையும் தப்பிக்க வைத்தது. அம்மூவரும் உடனே கீழே கிடந்த தீப்பந்தத்தில் ஓலையைப் போட்டுவிட்டு ஓடினார்கள். அந்த உருவமும் அவர்களை பின்தொடர்ந்து ஓடியது.

அவ்வுருவம் ஆறடி உயரமும், ஆஜானுபாகுவான உடலும் கொண்டிருந்தது; ஒரு துணியால் முகத்தை மறைத்திருந்தது.

சம்யுக்தன், "அவர்களைப் பிடியுங்கள் !" என்று கூறிக்கொண்டே, தீப்பந்தத்தில் எரிந்துகொண்டிருந்த ஓலைகளை எடுக்க முயற்சி செய்தான். அவை முழுவதுமாக எரிந்துபோவதற்குள் தீயை அணைத்து ஓலைகளை எடுத்தான். அவற்றை இடுப்பில் செருகிக்கொண்டு, அந்த தீப்பந்தத்தை கையில் எடுத்துக்கொண்டு ஓடியவர்களைத் துரத்தினான்.

அவன் ஓடிய போது காலில் ஏதோ தடுக்கி கீழே விழுந்தான். கையிலிருந்த தீப்பந்தமும் கீழே விழுந்தது. அவன் எழுந்து தீப்பந்தத்தை எடுத்து காலில் தடுக்கியது என்ன என்று பார்த்தான். அவன் கண்ட காட்சி குலை நடுங்க வைத்தது. அது குடிசைவாசிகளில் ஒருவனின் உயிரற்ற உடல். அவன் வயிற்றில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சியோடு மீண்டும் ஓடினான் சம்யுக்தன்.

சிறிது தூரத்தில் வீரர்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களை விலக்கி பார்த்தபோது அங்கும் ஒரு குடிசைவாசி இறந்து கிடந்தான். "நீங்களா இவனைக் கொன்றீர்கள்?" என்று கேட்டான்.

"இல்லை சம்யுக்தா, நாங்கள் இவர்களைத் துரத்திய போது, வழியில் ஒவ்வொருவராக மாண்டு கிடக்கிறார்கள். முதலில் இவனுக்கு உயிர் இருந்தது. நாங்கள் இவனிடம் உண்மையைக் கேட்க முயற்சி செய்தோம், அதற்குள் மாண்டுவிட்டான். இன்னொருவனைத் துரத்திக்கொண்டு பார்த்திபனும் இன்னும் இரு வீரர்களும் சென்றிருக்கிறார்கள்" என்றனர்.

சம்யுக்தன் அதைக் கேட்டு விட்டு மறுபடியும் ஓடினான். சிறிது தூரத்தில் பாதை மூன்றாக பிரிந்தது. சம்யுக்தன் ஒரு கணம் யோசித்து விட்டு, இடது பக்கமாக சென்றான். அப்பொழுது தூரத்தில் ஒருவனின் ஓலம் கேட்டது. அதைக்கேட்டு சம்யுக்தன் இன்னும் வேகமாக ஓடினான்.

சற்று தூரத்தில் அவன் கண்ட காட்சி அவன் உயிரையே உறைய வைத்தது. முகத்தை துணியால் மூடியிருந்தவன், குடிசைவாசியை கத்தியால் குத்திக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த சம்யுக்தன் கத்திக்கொண்டே அவர்களை நோக்கி ஓடினான். சம்யுக்தன் வருவதைப் பார்த்ததும், கத்தியை அவனை நோக்கி வீசி எறிந்தான். அதைப் பார்த்த சம்யுக்தன் மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டான். அந்த கத்தி பின்னாலிருந்த மரத்தில் பாய்ந்தது. முகத்தை மறைத்திருந்தவன் அங்கிருந்து ஓடிவிட்டான்.

சம்யுக்தன் கத்தியால் குத்தப்பட்டவனை ஓடிச் சென்று பார்த்தான். அவனுக்கு உயிர் இருந்தது. அவனிடம், "நீ யார்? நீங்களெல்லாம் என்ன செய்யத் திட்டமிட்டிருந்தீர்கள்?"என்று கேட்டான். அவன் எதையோ சொல்ல முயற்சித்தான். ஆனால், அதற்குள் அவன் உயிர் பிரிந்து கண்கள் தானாகவே மூடிக்கொண்டன.

சம்யுக்தன் தன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்தான். தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் ஓலையைப் படித்தான். பாதி எரிந்திருந்த அந்த ஓலையில், "உங்களை யாராவது சந்தேகித்தால், நீங்கள் உயிரோடு இருக்கக் கூடாது" என்ற ஒரு வரி மட்டுமே எஞ்சியிருந்தது. அதைப் பார்த்து, ஏதோ ஒரு யோசனையில் அங்கேயே நின்றான்.

அப்போது, பார்த்திபனும் மற்ற வீரர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். பார்த்திபன், அங்கே கிடந்த குடிசைவாசியின் உடலைப் பார்த்து, "இவனும் இறந்து விட்டானா? இவர்களைக் காப்பாற்றியவனே இவர்களைக் கொன்றது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்களை வெவ்வேறு திசையில் சென்று தேடினோம். உன் குரல் கேட்டு தான் இங்கே வந்தோம். இவன் இறப்பதற்கு முன் இவனிடமிருந்து ஏதும் தகவல் பெற முடிந்ததா" என்று கேட்டான்.

சம்யுக்தன் இல்லை என்று தலையசைத்துக் கொண்டே அவர்களை விலக்கிக்கொண்டு, தன்னை கொல்வதற்காக எறியப்பட்ட கத்தியை மரத்தில் இருந்து எடுத்து அதன் கூர்மையை தன் விரல்களால் மெல்லத் தொட்டுப் பார்த்து தன இடுப்பில் செருகிக் கொண்டான்.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் யோசனையிலேயே ஆழ்ந்திருந்தான். அவன் மனது ஏதோ ஒன்றுடன் போராடிக்கொண்டிருந்தது அவன் நண்பன் பார்த்திபனுக்கு புரிந்தது. வீரர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். வழியே இல்லாத வாழ்க்கையில் அகப்பட்டது போல உணர்ந்தனர் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.