(Reading time: 21 - 42 minutes)

அப்போது, நாணல்கள் இடையே ஒரு மெல்லிய சலசலப்பு கேட்டது. சம்யுக்தனின் கண்கள் கூரிய பார்வையோடு அந்த நாணல்களை கவனித்தன. வீரர்கள் எச்சரிக்கையுடன் வாளைப் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது சலசலப்பு சற்று அதிகமாகி அதிலிருந்து ஒரு மானிடன் வெளிப்பட்டான். அவனைப் பார்த்ததும் வாளைப் பிடித்திருந்த கைகள் தானாகவே தங்கள் பிடியைத் தளர்த்தின.

வந்தவனைக் கண்டு, புலியை எதிர்பார்த்து பூனை வந்தது போல் ஏமாற்றம் அடைந்தார்கள். அலங்கார உடை அணிந்திருந்த பூபதி அலங்கோலமாய் அங்கு காட்சி தந்தான். அவனுடைய முடி கதிர்கள் கலைந்துபோய் ஆடையெல்லாம் சேற்றை அப்பிக்கொண்டு, பரிதாபமாக அந்த சேற்றை தன கைகளால் துடைத்துக்கொண்டிருந்தான்.

"எவ்வளவு விலையுயர்ந்த ஆடை! இப்படி நாசமாகி விட்டதே!" என்று முணுமுணுத்துக்கொண்டே தன் ஆடைகளை சரி செய்துகொண்டிருந்தான்.

அந்த இக்கட்டான நிலையிலும் பூபதியைப் பார்த்து பார்த்திபனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. அதை மறைத்துக்கொண்டு சம்யுக்தனை ஒரு பார்வை பார்த்தான். சம்யுக்தன் பூபதியைப் பார்க்காமல் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தான்.

பார்த்திபன் மற்ற வீரர்களை பார்த்து, "பைத்தியம் எதற்கு இங்கே வந்தது?" என்று கேட்டான்.

அதைக் கேட்டு பூபதி தன் கோபம் முழுவதையும் கண்களில் இறக்கி வார்த்தைகளில் அனலைக் கக்கினான். "யாரைப் பார்த்துடா பைத்தியம் என்று சொன்னாய், முட்டாளே! என்னை நன்றாகப் பார்" என்று கூறி தன் நெற்றி முடியை விலக்கி தன முகத்தை முன்னால் நீட்டியவாறு காட்டினான்.

"ஓ! .பூபதியா?" என்று பார்த்திபன் பொய்யான அதிர்ச்சியை தன் முகத்தில் காட்டினான்.

"தெரிந்துவிட்டதல்லவா? பைத்தியம் என்று சொன்னதற்கு முதலில் மன்னிப்பு கேள்" என்றான் பூபதி.

"மன்னிப்பு தானே, பிறகு கேட்டுக்கொள்ளலாம். இந்த நேரத்தில் நீ எதற்கு இங்கே பரதேசியைப் போல் காட்சி தந்து கொண்டிருக்கிறாய்?" என்று பார்த்திபன் கேட்டான்.

"வார்த்தை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது, பார்த்திபா. நாவை அடக்கிக்கொள். உங்களைப் பின்தொடர்ந்து தான் நான் வந்தேன். இடையில் வழி மாறி விட்டேன். வழி மாறி அலைந்துகொண்டிருந்தபோது, திடீரென்று, ஒருவன், ஜல்லிக்கட்டுக் காளை போல் சீறிப் பாய்ந்து வந்தான். அவனை என் இரு இரும்புக் கரம் கொண்டு தடுக்க முயற்சி செய்தேன்" என்று சொல்லிக்கொண்டே தன் கையை நீட்டிய போது, பார்த்திபன் பூபதியின் கையை மெதுவாக தொட்டுப் பார்த்தான்.

"என்ன, பார்க்கிறாய்?" என்று பூபதி கேட்டான்.

"ஒன்றுமில்லை, நீ நடந்ததை கூறு" என்றான் பார்த்திபன்.

"ஓடி வந்தவனை நான் பிடித்தும் விட்டேன். அப்போது அங்கிருந்த சிறு பள்ளத்தைக் கவனிக்காமல் அதில் கால் வைத்து விட்டேன். அதனால், தடுமாறி கீழே விழுந்து விட்டேன். அந்த நேரத்தை அவன் சரியாக பயன்படுத்திக்கொண்டு என்னிடமிருந்து தப்பி விட்டான்." என்று கூறினான் பூபதி.

"நம்ப முடியவில்லையே, அவன் ஓடி வந்ததைப் பார்த்து நீயே பள்ளத்தில் விழுந்து எழுந்து வந்ததைப் போல் தெரிகிறதே" என்றான் பார்த்திபன்.

"அப்படியா தெரிகிறது?" என்று தாழ்ந்த குரலில் ஓரக்கண்ணால் பார்த்திபனைப் பார்த்துக்கொண்டே பூபதி கேட்டான்.

"ஆமாம், நீ அவன் எதிரில் இருந்திருந்தால், இந்நேரம் உயிரோடு இருந்திருக்கமாட்டாய். மூன்று கொலைகள் செய்து எங்களிடமிருந்து தப்பி விட்டான். அந்த நேரத்தில் தான் அவனை நீ கண்டிருக்கிறாய்".

பூபதி, தன் தலை கழுத்தில் தான் இருக்கிறதா என்பது போல கழுத்தை தொட்டுப் பார்த்தான்.

அப்போது சம்யுக்தன் பூபதியைப் பார்த்து, "சரி, நீ ஏன் எங்களை பின்தொடர்ந்து வந்தாய்?" என்று கேட்டுக்கொண்டே அவன் முன்னே சென்றான்.

"சந்தையில் கட்டப்பட்டிருந்த உன் குதிரையைப் பார்த்தேன். நீயும் இங்கே எங்கேயோ தான் இருப்பாய் என்று நினைத்து சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் என் கண்களுக்கு புலப்படவில்லை. அப்போது நீயும் உன் நண்பர்களும் அந்த குடிசைவாசிகளை பின்தொடர்ந்து செல்வதை பார்த்தேன். நீங்கள் ஏதோ ஒரு மர்மமான காரியத்தை செய்துகொண்டிருப்பதாய் தோன்றியது. அதனால், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று ஆவல் தூண்ட என் கால்கள் தானாகவே உங்களைப் பின்தொடந்து வந்தன. சிறிது தூரம் உங்களைத் தொடர்ந்து வந்தேன். பிறகு எப்படியோ வழி தவறி விட்டேன்" என்று சொல்லி முடித்தான் பூபதி.

சம்யுக்தன் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான். அவன் மனதிற்குள் ஏதோ ஒன்று புலப்பட்டது. அதை அவனால் சரியாக யூகிக்க முடியவில்லை.

அப்போது பார்த்திபன், "என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் சம்யுக்தா" என்று கேட்டான்.

சம்யுக்தன், "ஒன்றுமில்லை, இவர்கள் என்ன சதிவேலையில் ஈடுபட்டிருந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே" என்று சற்று கவலைதோய்ந்த முகத்துடன் சொன்னான்.

பார்த்திபன் "நீ ஏன் கவலைப்பட்டுகொண்டிருக்கிறாய். காலையில் மோர் விற்பவளைக் கைது செய்து விசாரித்தால் என்ன சதிவேலை என்று தெரிந்துவிடப் போகிறது" என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.