(Reading time: 21 - 42 minutes)

பார்த்திபன், "குதிரை எஜமான் கட்டுப்பாட்டில் இருந்தால் எப்படி வரும், அதுவே சுய கட்டுப்பாட்டில் இருந்தால் எப்படி வரும் என்று நமக்குத் தெரியாதா. குதிரையை அவன் ஓட்டி வரவில்லை. குதிரை தான் அவனைக் கொண்டு வந்திருக்கிறது. அப்படியென்றால், அது யாராக இருக்கும்?" என்று கேட்டான்.

சம்யுக்தன், "பூபதியா?" என்று கேட்டான்.

பார்த்திபன், "அவனே தான். சிவபூஜையில் கரடி நுழைந்திருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது எப்படி சரியாக பூஜை நேரத்தில் நுழையும் என்று வெகு நாட்களாகவே என் மனதில் ஒரு கேள்வி இருந்தது. இன்று அதை பூபதி புரிய வைத்து விட்டான்." என்று சொன்னான்

அப்போது தண்ணீரைக் குடித்த சந்தோசத்தில் குதிரை கனைத்தது.

அதைக்கேட்டு சம்யுக்தன், "பூபதி ஒரு உதவி செய்தான், அவன் குதிரையும் தன்னால் முடிந்த உதவியை செய்து விட்டது" என்று கூறி சிரித்தான்.

"நம் காரியத்தைக் கெடுத்தது உனக்கு உதவி போல தெரிகிறதா?" என்று பார்த்திபன் கேட்டான்.

குதிரை கனைத்த சத்தம் கேட்டு, குடிசையில் இருந்தவர்கள் திகைத்தனர். அவர்களில் ஒருவன், "அது என்ன சத்தம் என்று பார்த்து வருகிறேன்; நீங்கள் இங்கேயே இருங்கள்" என்று கூறி குடிசையை விட்டு வெளியே வந்தான். வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது குதிரையில் பூபதி இருந்ததைப் பார்த்து, அவன் யாராக இருக்கக்கூடும் என்றெண்ணி ஒரு சிறிய கத்தியை எடுத்து பின்னால் மறைத்துக்கொண்டு பூபதியை நோக்கி சென்றான்.

அதைப் பார்த்த பார்த்திபன், "பூபதிக்கு ஆபத்து நிகழப்போகிறது, வா, சென்று காப்பாற்றலாம்" என்றான்.

"பொறுமையாக இரு" என்று கூறிய சம்யுக்தன், என்ன நடக்கப்போகிறது என்பதை உற்றுக் கவனித்தான்.

குடிசையிலிருந்து வந்தவன் பூபதியை நெருங்கியதும், மரத்திலிருந்த வீரர்கள், அவன் தங்களைப் பார்க்காத வண்ணம் மறைந்து கொண்டனர்.

"யாரப்பா நீ?" என்று குடிசையிலிருந்து வந்தவன் கேட்டான்.

குதிரையை தடவிக் கொடுத்துக்கொண்டே திரும்பிய பூபதி, அவனை ஏளனமாகப் பார்த்தான்.

"ஏன் அப்படிப் பார்க்கிறாய்?" என்று வந்தவன் கேட்டான்.

"இல்லை, என்னைப் பார்த்து யாரென்று கேட்டாயே, அது தான் வியப்பாக உள்ளது" என்ற பூபதி, அவனிடம், "நான் இதுவரை உன்னை பார்த்ததே இல்லையே, நீ யாரென்று முதலில் சொல்" என்றான்.

"நான் பிழைப்பிற்காக இந்நாட்டில் தஞ்சம் அடைந்தவன்"

"ஓ, புதிதாக வந்தவனோ! அப்போது என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வூரில் பெரிய செல்வந்தர்களுள் ஒருவரான காளிதாசனின் புதல்வன் நான்" என்றான் பூபதி.

"நல்லது தம்பி, இந்த நேரத்தில் இங்கே எதற்காக நின்றுகொண்டிருக்கிறாய்?"

"நீண்ட தூரம் பிரயாணம் செய்த களைப்பில் என் குதிரை இருந்தது. அதன் தாகத்தைத் தணிக்க இங்கே வந்தேன்"

குடிசையிலிருந்து வந்தவன் குதிரையின் முகத்தை மெதுவாக தடவி கொடுத்தான். .அது விட்ட அனல் மூச்சில், அது நீண்ட தூரம் பயணம் செய்திருந்தது தெரிந்தது. பூபதி சொன்னது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும், "சரி தம்பி, நான் என் குடிசைக்கு செல்கிறேன்" என்று கூறி விடைபெற்றான்.

குடிசைக்கு சென்றதும், அதன் வாசலில் நின்று திரும்பி பூபதியைப் பார்த்தான். பூபதி குதிரையில் ஏறி சந்தையை நோக்கி சென்றதைப் பார்த்தான்.

பிறகு, குடிசையில் நுழைந்த அவன், "நாம் இங்கு பேசுவது உசிதமல்ல. இன்னும் பாதுகாப்பான இடத்திற்கு சென்று பேசலாம் "என்றான். மற்ற இருவரும் அதை ஆமோதித்தனர். மூவரும் விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்து ஆற்றங்கரையை நோக்கி சென்றனர்.

மூவரும் ஆற்றங்கரை ஓரமாக வளர்ந்திருந்த நாணல்களின் இடையே நடந்து சென்றார்கள். தண்ணீரில் இருந்த வீரர்கள் உள்நீச்சல் அடித்துக்கொண்டு, நாணலின் சலசலப்பு ஒலியைக் கேட்டு, மூவரையும் பின்தொடர்ந்தனர். சம்யுக்தனும் பார்த்திபனும் சிறிது நேரம் கழித்து அவர்கள் மிதித்து சென்ற நாணல்களை அடையாளம் கண்டு பின்தொடர்ந்தனர். மரத்தின் மேலிருந்த வீரர்கள், நிலவின் ஒளியில் நாணல்கள் அசைவதை நன்றாக கவனித்தார்கள்.

குடிசைவாசிகள் மூவரும் சற்று தூரம் நடந்து சென்று அங்கிருந்த நாவல் மரத்தை அடைந்தார்கள். நிறைய கிளைகளைக் கொண்டு ஓங்கி வளர்ந்த அந்த நாவல் மரத்தில் நிறைய பறவைகள் கூடு கட்டி வாழ்ந்தன. அதனடியில் உட்கார்ந்து மூவரும் ஒரு சிறிய தீப்பந்தத்தை ஏற்றினார்கள்.

அப்போது மரத்தில் இருந்த வீரர்கள், தீப்பந்தத்தின் ஒளி எங்கும் நகராமல் ஓரிடத்திலேயே இருப்பதைப் பார்த்து, அவர்கள் அங்கே தான் இருக்கிறார்கள் என்று யூகித்து கீழே இறங்கினார்கள். பிறகு மெதுவாக அந்த வெளிச்சத்தை நோக்கி நடந்தார்கள்.

சம்யுக்தனும் பார்த்திபனும் மெதுவாக நாணலை விலக்கி குடிசைவாசிகள் மூவரும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தார்கள். மூவரும் தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் தாங்கள் கொண்டு வந்த ஓலைகளைப் பிரித்து படித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, பார்த்திபன் பக்கத்தில் ஒரு கீரி சென்றது. அதைப் பார்த்து அவன் பயந்து கீழே விழுந்தான். அமைதியாக இருந்த அந்த இடத்தில் அவன் கீழே விழுந்த சத்தம் நன்றாக கேட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.