(Reading time: 21 - 42 minutes)

அதைக்கேட்டதும் சம்யுக்தனின் முகம் தெளிவடைந்து, அவன் மனதில் ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு விடை தெரிந்தது போல் ஒரு கம்பீரப் பார்வையோடு பார்த்திபனை நோக்கினான். "இன்னொரு உயிருக்கும் ஆபத்து. சீக்கிரம் வாருங்கள், செல்லலாம்" என்று புதிர் போட்டு விட்டு வேகமாக சென்றான்.

மற்றவர்கள் எதுவும் பேசாமல் அவன் பின்னே சென்றனர். பூபதியும் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

சம்யுக்தன் நாணல்களை விலக்கியவாறு முன்னேறிக்கொண்டிருந்தான். அவன் தோள்கள் வழக்கத்திற்கு மாறாக முறுக்கேறிக்கொண்டிருந்தன. அவன் கண்கள் வான்நிலவு குருதியால் நனைந்தது போல் சிவந்திருந்தன. அவனுடைய முகம் சினம் கொண்ட சிறுத்தையைப் போல் சீற்றம் கொண்டிருந்தது. எல்லாரும் ஆற்றங்கரையைக் கடந்து சந்தையை அடைந்தார்கள்.

சம்யுக்தனைப் பார்த்த அவனுடைய குதிரை அவனை பிரிந்திருந்த ஏக்கத்தை, அவனை பார்த்துக் கனைத்துக்கொண்டே முன்னங்கால்களைத் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தியது. அந்த சந்தையில் இருந்த ஓர் ஆலமரம் காற்றோடு உறவாடி, அதன் இலைகள் அசைந்துகொண்டிருந்தன. எங்கும் ஒரே நிசப்தம். இரவின் இனிமையை ரசிக்க முடியாதவர்களாய் வீரகள் இருந்தனர்.

சம்யுக்தன் வீரர்களைப் பார்த்து, "ரகசியம் தெரிந்த எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்கள், ஒருவரைத் தவிர..." என்று கூறி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான்.

அப்போது பார்த்திபன், "மோர் விற்பவள் தானே" என்று மெதுவாக கேட்டான்.

"ஆம். அவளைக் கொல்ல கண்டிப்பாக அவன் வருவான். நாம் அவளைக் காப்பாற்ற வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ரகசியம் அழிந்துகொண்டிருக்கிறது. எல்லோரும் துரிதமாய் செயல்படுங்கள். நான் முன்னே செல்கிறேன். நீங்கள் விரைவாக அந்த மோர் விற்பவளின் குடிசைக்கு விரைந்து வந்து சேருங்கள்" என்று சொல்லி சம்யுக்தன் குதிரையில் ஏறி அமர்ந்தான்.

குதிரையில் அமர்ந்ததும், "அது சரி, நீங்கள் எப்படி அங்கு வரப்போகிறீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு வீரர்களில் ஒருவன், "என் மாமாவின் குதிரை லாயம் சந்தைக்கு அருகில் தான் உள்ளது. நாங்கள் அங்கே சென்று குதிரைகளை எடுத்துக்கொண்டு விரைந்து வந்து சேருகிறோம்" என்றான்.

சம்யுக்தனும் சரி என்று சொல்லிவிட்டு குதிரையை வேகமாக செலுத்தினான். அவனுடைய வெறியைப் புரிந்துகொண்ட அந்த குதிரை ஆகாயம் மிரள, பூமி நடுங்க, தென்றல் புயலாக மாறி மரங்களை வேரோடு சாய்ப்பது போல் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வேகமாக ஓடியது. அது சிறிது நேரத்தில் இருட்டில் கலந்து மறைந்தது.

பார்த்திபனும் வீரர்களும் குதிரை லாயத்திற்கு செல்ல முற்பட்டபோது ஒரு குதிரை கனைக்கும் சத்தம் கேட்டது. பார்த்திபன் சத்தம் வந்த பக்கம் திரும்பி, "இது யார் குதிரை?" என்று கேட்டான்.

"பார்த்தால் தெரியவில்லை, என் குதிரை தான்" என்று பூபதி கூறினான்.

உடனே, பார்த்திபன் மனதில், 'கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். இந்தக் குதிரையையே எடுத்துச் சென்றால், நேரம் விரயமாகாது. பூபதியை கழற்றி விட்டு போவதற்கும் ஓர் அரிய வாய்ப்பு. ஒரே கல்லிலே இரண்டு மாங்காய். இவனைக் கூட்டிச் சென்றால், வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்த கதையாகி விடும்.' என்று எண்ணியவாறே, பூபதியைப் பார்த்து, "ஆற்றங்கரையில் உன் கள்ளங் கபடமற்ற மனத்தைக் காயப்படுத்திவிட்டேன். அதற்கு மன்னிப்பு கோருகிறேன்" என்றான்.

"நீ திமிர் பிடித்தவன் ஆயிற்றே, உண்மையாகத்தான் மன்னிப்பு கேட்கிறாயா?" என்று கேட்டான் பூபதி.

"ஆமாம் பூபதி, இதில் நடிப்பதற்கு என்ன இருக்கிறது. நான் சொல்வது எல்லாம் என் ஆழ்மனதில் உருவாகிய வார்த்தைகள்" என்றான் பார்த்திபன்.

பூபதி வேறு பக்கமாக திரும்பி, "சரி, மன்னித்துவிட்டேன். போ!" என்று சொல்லி முடிக்கவும் குதிரை ஓடும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த பூபதி அதிர்ச்சி அடைந்தான். பார்த்திபன் பூபதியின் குதிரையில் சென்றுகொண்டிருந்தான்.

அதைப் பார்த்த பூபதி குதிரையின் பின்னால் ஓடிக்கொண்டே "ஏய், சண்டாளா! என் குதிரையை ஏனடா ஓட்டிச் செல்கிறாய்?" என்று கேட்டான்.

பார்த்திபன், "அவசர வேலை பூபதி. இதற்கு, பின்னால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், கணக்கில் வைத்துக்கொள்" என்று சொல்லிக்கொண்டே வேகமாக சென்றான்.

வீரர்கள் அக்காட்சியைக் கண்டு நகைத்தவாறே குதிரை லாயத்தை நோக்கி விரைந்தனர்.

கரிய இருளைக் கிழித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்தது சம்யுக்தனின் குதிரை.

சம்யுக்தனின் எண்ணத்தில், 'அவன் யார்? அவன் யார்?' அதே கேள்வி திரும்ப திரும்ப எழும்பிக் கொண்டேயிருந்தது. ஏதோ ஓர் ஆபத்து என்னும் கொடிய மிருகம் நம் நாட்டை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் அவனால் யூகிக்க முடிந்தது. அந்த ஆபத்தை வளர விடாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டான்.

சம்யுக்தனின் குதிரை, இன்னும் இரண்டு வீதிகளைத் தாண்டினால் மோர்க்காரியின் குடிசை வந்துவிடும்.

அதே நேரத்தில், வேறொரு வீதி வழியாக அந்த மர்ம மனிதன் மோர்க்காரியின் குடிசையை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தான்.

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 03

பாகம் - 01 - அத்தியாயம் 05

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.