(Reading time: 22 - 44 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 05 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.5 : சம்யுக்தனின் மனக்கலக்கம்

நாகவனம் : கோர வனத்தின் நடுவே அழகு பொருந்திய ஒரு பேரரசு. அக்காட்டில் நாகங்கள் அதிகமாக இருப்பதால் அதற்கு நாகவனம் என்று பெயர் வந்தது. பகலிலும் அதிபயங்கரமாக காட்சி தரும் அந்த காட்டில் கோட்டான்களும், வௌவ்வால்களும், நரிகளும், ஓநாய்களும் வலம் வந்துகொண்டிருந்தன. ஆங்காங்கே சாதுவான , தாவரங்களை உட்கொள்ளும் மிருகங்களின் எலும்புகள் சிதறிக் கிடந்தன. நல்ல மிருகங்கள் வாழத் தகுதியற்ற ஒரு கொடூரமான காடு அது. மார்த்தாண்டனின் மனதைப் போல தான் அந்த வனமும் இருந்தது.

மார்த்தாண்டன் : அசுர குலத்தின் கடைசி வித்தாக விளங்கியவன். நினைத்ததைச் சாதிக்கத் துடிக்கும் ஒரு ராஜ தந்திரி; அதி புத்திசாலி; குடிமக்களை கொத்தடிமைகளாக வைத்திருக்கும் இரக்கமற்றவன். எதிர் கேள்வி கேட்பவனின் நாவை அறுத்து நகைப்பவன். அதனாலேயே அவனை எதிர்த்து கேள்வி கேட்கும் எண்ணம் எவருக்கும் உதிப்பதில்லை. ஒருவனின் உயிரைக் குடிப்பது பழரசத்தைக் குடிப்பது போன்ற இனிப்பானது என்று அவனாகவே ஓர் உவமையை உருவாக்கி அதைக் கடைபிடிப்பவன். தான் நினைத்தது நிறைவேற எத்தனை உயிர்கள் போனாலும் அதை துச்சமாக நினைப்பவன். அவன், "ராஜாங்கமே என்னை விட்டு சென்றாலும் எஞ்சியவற்றை வைத்து ஒரு புதிய, பெரிய ராஜாங்கத்தையே உருவாக்குவேன்" என்று தன் மீது உள்ள அதீத நம்பிக்கையை வார்த்தைகளாய் அடிக்கடி வெளிப்படுத்துவான்.

இப்போது நாம் அந்த நாகவனத்திற்குள் செல்லலாம்...

இடம் : மார்த்தாண்ட அரசவை மந்திரியின் வீடு

ந்திரியின் வீடு ஓர் அரண்மனையைப்போல் இருந்தது. முன்வாசல் ஒரு தெருவிலும் பின்வாசல் அடுத்த தெருவிலும் இருக்கும் அளவுக்கு பரந்து விரிந்த வீடு. விசாலமான திண்ணைகள். அம்மாளிகையைத் தாங்கிப் பிடிக்க பெரிய பெரிய கற்தூண்கள் இருந்தன. அவ்வீட்டின் நடுவே ஒரு பெரிய மைதானம் போல் கூரையில்லாமல் திறந்தவெளியாக ஒரு கூடம் இருந்தது. அக்கூடத்தில் நின்று இரவு நேரத்தில் வானின் அழகை ரசிப்பது மனதிற்கு சற்று நிம்மதி கலந்த தென்றல் தழுவியது போலிருக்கும்.

அக்கூடத்தில் இருந்த ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்திருந்த மந்திரி நரசிம்மன் வானத்து விண்மீன்களை பார்த்தவாறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவருடைய அந்தரங்க சேவகன் தரையில் அமர்ந்துகொண்டு அவருடைய கை கால்களை மெதுவாக பிடித்து விட்டுக்கொண்டிருந்தான்.

"என்ன எஜமான், இன்றைக்கு முழுவதும் நீங்கள் யோசனையிலேயே கழித்துக் கொண்டிருக்கிறீர்களே"

"ஒரு வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அது தான் சற்று கலக்கமாக இருக்கிறது"

"கவலையை மறக்க சற்று கண்ணயரலாமே"

"இந்த மனக் கலக்கத்தில் எப்படி உறங்க முடியும். அது கனவாக பிரதிபலித்து இன்னும் கலக்கத்தை உண்டாக்குமே"

"மன்னர் தங்களுக்கு வேலை மேல் வேலை குடுத்து தங்களை உறங்க விடாமல் செய்கிறாரே."

"மன்னர் இட்ட பணியை செய்வது தானே மந்திரியின் பணி. நான் நினைத்தது மட்டும் நிறைவேறி விட்டால், நானும் ஒரு ராஜா தான்."

"என்ன ஐயா சொல்கிறீர்கள், எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே"

"நம் எதிரி நாடான வீரபுரத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். அந்த நாட்டை கையகப்படுத்துவதற்கு ராஜதந்திர வேலைகள் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டும் நிறைவேறிவிட்டால் வருங்கால வீரபுர அடிமைகளுக்கு இந்த நரசிம்மன் தான் அரசன்."

"ஐயா, உங்கள் அளவுக்கு எனக்கு புத்திகூர்மை கிடையாது. விளக்கமாக சொன்னால் தான் இந்த மரமண்டைக்கு புரியும்."

"வீரபுரத்தில் நம் ஒற்றர்கள் நான் திட்டம் தீட்டிய சதி வேலைகளை துரிதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அது சீக்கிரத்தில் நடந்தேறி விடும். எனது பொற்காலம் ஆரம்பமாகி விடும்"

"ஐயா, நீங்கள் சொல்வது இன்னும் விளங்கவேயில்லையே"

"நடக்கும்போது நீ அதை பார்ப்பாய். அது வரை பேசாமல் இரு" என்று அவன் வாயை அடைத்தார்.

அப்போது மந்திரியின் வீடு இருந்த வீதியில் தலையில் தலைப் பாகையும் கையில் ஒரு தடியுடனும் ஒருவன் வந்து கொண்டிருந்தான் .அவனுடைய உடை அலங்காரம் மற்றும்  தோற்றம் ஓர் அரண்மனைச் சேவகன் போல் இருந்தது. அந்த கடுங்குளிரில் அவன் சிறு நடுக்கம் கூட இல்லாமல் வந்து கொண்டிருந்தான். வெகு விரைவிலேயே அவன் மந்திரியின் வீட்டை அடைந்தான். மந்திரியின் வீட்டு காவலர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினர்.

அவன்,  "மன்னர் மார்த்தாண்டன் அவசர காரியமாக மந்திரியைப் பார்த்து வரச் சொன்னார்" என்று விசயத்தைச் சொன்னான்.

உடனே காவலர்கள் உள்ளே சென்று மந்திரியிடம் விசயத்தைச் சொன்னதும், "அவனை உள்ளே அனுப்பு" என்று மந்திரி கட்டளையிட்டார். வந்தவன் மந்திரியை பணிவாக வணங்கி நின்றான்.

"என்ன விசயத்தைக் கொண்டுவந்திருக்கிறாய்" என்று மந்திரி வினவினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.