(Reading time: 22 - 44 minutes)

"மன்னர் இந்த ஓலையை உங்களிடம் கொடுக்க சொன்னார்."

மந்திரி ஓலையை வாங்கிப் படித்து விட்டு, "மன்னர், அவசரமாக இப்போதே என்னை சந்திக்க விரும்புகிறாரே. என்ன விசயமாக இருக்கும்" என்று முணுமுணுத்தார்.

பிறகு, ஓலை கொண்டு வந்தவனிடம், "நீ செல். நான் பின்னே வருகிறேன்" என்று கூறி இருக்கையில் இருந்து எழுந்தார்.

அவன் மறுபடியும் மந்திரியை பணிவாக வணங்கி அங்கிருந்து சென்று விட்டான்.

மந்திரி தன சேவகனிடம், "நாம் உடனே அரண்மனைக்கு செல்ல வேண்டும். சீக்கிரம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்" என்று கூறினார்.

சிறுது நேரத்திலேயே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இரண்டு குதிரைகள் பூட்டிய ரதத்தில் மந்திரி நரசிம்மனும் சேவகனும் ஏறி சென்றார்கள். ரதத்தின் உள்ளே மந்திரி சற்று படபடப்பாக காணப்பட்டார்.

"என்ன ஆயிற்று ஐயா?" என்று அவருடைய சேவகன் கேட்டான்.

"இந்த நேரத்தில் மன்னர் பார்க்க விரும்புகிறார் என்றால், ஏதாவது அவசர காரியமாகத் தான் இருக்கும். அது என்னவென்று என்னால் யூகிக்க முடியவில்லை. அதனால் தான் படபடப்பாக இருக்கிறது"

ரதம் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது நான்கு வழிச் சாலை வந்தது. வலப்புற சாலையிலிருந்தும் இடப்புற சாலையிலிருந்தும் கையில் தீப்பந்தங்களுடன் குதிரைகளில் வந்த சிலர், ரதம் மேற்கொண்டு செல்லமுடியாதபடி அதை மடக்கினர். ரதம் நின்று விட்டது.

மந்திரி தன சேவகனிடம், "ஏன் ரதம் நின்று விட்டது?" என்று கேட்டார்.

"இருங்கள் ஐயா, பார்க்கிறேன்" என்று கூறி திரையை விலக்கி பார்த்தான். நிலைமையைப் புரிந்துகொண்ட அவன் மந்திரியிடம், "ஐயா, யாரோ சிலர் நம் ரதத்தை வழி மறித்திருக்கிறார்கள். கொள்ளைகாரர்கள் என்று நினைக்கிறேன்" என்று பதற்றத்துடன் கூறினான்.

அதைக் கேட்ட மந்திரி திடுக்கிட்டு ரதத்திலிருந்து கீழே இறங்க முற்பட்டார். அப்போது பின்னாலிருந்து வந்த சிலர், அவர்கள் ரதத்திலிருந்து கீழே இறந்காதவாறு தடுத்தனர். வந்தவர்களில் ஒருவன் ரதம் ஒட்டியவனைத் தாக்கி கீழே தள்ளி விட்டு, அந்த ரதத்தை ஓட்டிச் சென்றான். மற்றவர்கள் குதிரைகளில் அந்த ரதத்தை சூழ்ந்தவாறு செல்ல, அந்த ரதம் காட்டுப் பகுதியை நோக்கி சென்றது. மந்திரியும் அவருடைய சேவகனும் நடப்பது ஒன்றும் புரியாமல் படபடப்போடு இருந்தனர். சிறிது தூரம் பயணித்த அந்த ரதம், ஓர் இடத்தில் நின்றது. ஒருவன் ரதத்தின் திரைச் சீலையை விலக்கி மந்திரியையும் அவருடைய சேவகனையும் கீழே இறங்கச் சொன்னான்.

மந்திரி கோபத்துடன், "நான் யாரென்று தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள். நான் நினைத்தால் உங்களை ஒரே நொடியில் அழித்து விடுவேன். நான் யார் தெரியுமா?" என்று கேட்டார்.

அப்போது அக்கூட்டத்தை விலக்கியவாறு ஒருவன், "நீங்கள் இந்நாட்டு மந்திரி என்று தெரிந்து தான் உங்களைக் கடத்தியிருக்கிறோம்" என்று புன்னகைத்தவாறே அவர்களை நோக்கி வந்தான்.

அவனைப் பார்த்து மந்திரி ஒரு நிமிடம் மூச்சடைத்துப் போனார். அவர் மனம், 'இவன் ஓலை கொண்டு வந்தவன் தானே...ஆம் ..ஆம்..அவனே தான்' என்று சொன்னது. ஏதோ சதி என்னும் சிலந்திவலையில் ஒரு பூச்சியாய் தான் சிக்கிக்கொண்டதை கண்டுபிடிக்க அவருக்கு நீண்ட நேரம் ஆகவில்லை.

அப்போது அவன், "என்னை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, "நான் தான் இச் சிறிய கூட்டத்திற்குத் தலைவன். எனக்கு உங்களிடம் இருந்து ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது. அதை நீங்கள் மறுக்காமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன்"

மந்திரி மெளனமாக கோபப் பார்வையை வீசிக்கொண்டிருந்தார்.

"சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்கு வந்து விடுகிறேன். மன்னர் தங்களிடம் ஒரு ரகசிய வேலை கொடுத்திருக்கிறார் அல்லவா. அது என்ன வேலை என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்".

"நீங்கள் எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களா?"

"அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். ஒழுங்காக ரகசியத்தைக் கூறி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வழியைப் பாருங்கள். உங்களுக்கு சிறிது அவகாசம் தருகிறேன். நன்றாக யோசித்துவிட்டு உங்கள் முடிவைச் சொல்லுங்கள். அவகாசம் ஒரு முறை தான் வழங்கப்படும். உயிரும் ஒரு முறை தான் உடலில் தங்கும் என்பதை மறந்து விட வேண்டாம்."

எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

மந்திரி கோபத்தின் உச்சியில், 'இந்நேரம் நம் வீரர்கள் இருந்திருக்ககூடாதா, இவர்கள் தலைகள் பூமியில் உருண்டோடிக்கொண்டிருக்குமே' என்று மனதிற்குள் அடிபட்ட புலியைப் போன்று சீறிக் கொண்டிருந்தார்.

மந்திரியின் சேவகனின் முகம் பயத்தில் பேயறைந்ததைப்போல் காணப்பட்டது. அது அவன் உயிரின் மீது வைத்திருக்கும் ஆசையை அப்பட்டமாக வெளிக்காட்டியது.

சிறிது நேர அமைதிக்குப் பின் மந்திரியே அந்த அமைதியைக் கலைத்தார். "என்னால் எதுவும் சொல்ல இயலாது. உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்" என்று சினம் கொண்டு சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.