(Reading time: 22 - 44 minutes)

நான் சென்று நம் வீரர்களின் நிலைமை என்னவாயிற்று என்று  பார்த்து வருகிறேன்" என்று கூறிவிட்டு கிளம்ப எத்தனித்தபோது ஒரு குதிரை மிதமான வேகத்துடன் வருவதைக் கண்டான்.

குதிரையில் இருப்பவன் அக்குதிரையின் கழுத்தில் படுத்துக்கொண்டு வருவதைப் பார்த்தான். அந்த குதிரை அவர்களை நெருங்க நெருங்க குதிரையில் வந்தவன் தன் வீரர்களில் ஒருவன் என்பதை அறிந்து சம்யுக்தனின் இதயத்தில் ஒரு சிறிய வலி உண்டாயிற்று. இதயத்தை கூரிய ஈட்டியால் குத்துவது போன்ற வலி அது. குதிரையில் மேல் குற்றுயிரும் கொலையுயிருமாய் இருந்த தன் நண்பனை கீழே இறக்கினான். பார்த்திபனும் ஓடி வந்து தன் நண்பனின் மேல் இருந்த காயத்தைப் பார்த்து அதிர்ந்தான்.

சம்யுக்தன், "என்ன ஆயிற்று?" என்று அவன் கன்னத்தைத் தட்டினான். அவன் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து சம்யுக்தனைப் பார்த்தான். சம்யுக்தன், "என்ன நடந்தது,...என்ன நடந்தது?" என்று கேட்டுக்கொண்டே இருந்தான். அவனால் பேச முடியாத அளவுக்கு ஒரு பேராபத்தை எதிர்கொண்டு வந்திருப்பவனைப் போலிருந்தது. சிறிது நேரம் கழித்து அவன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.

"நாங்கள் அனைவரும் குதிரை லாயத்திலிருந்து வந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஓர் உருவம் எங்களைக் கடந்து காட்டுப்பாதையை நோக்கி சென்றது. நாங்கள் அவ்வுருவத்தைப் பின்தொடர்ந்து சென்றோம். சிறிது தூரம் நாங்கள் சென்று பார்த்த பின் அவ்வுருவத்தைக் காணவில்லை. நாங்கள் பிரிந்து சென்று தேடுவது என்று முடிவெடுத்தோம். நாங்கள் அவ்வாறு தேடிக்கொண்டிருந்தபோது திடீரென்று தூரத்தில் ஓர் அலறல் சத்தம் கேட்டது. நான் உடனே அந்த சத்தம் வந்த திசையை நோக்கி குதிரையை வேகமாக விரட்டினேன். அங்கு சென்று பார்த்தால் நம் நண்பன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் மாண்டு கிடந்தான். பேரதிர்ச்சியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மேலும் இரு ஓலங்கள் கேட்டன. சம்யுக்தா, ஒன்று கவனிக்கவும். இரு ஓலங்களும் வெவ்வேறு திசைகளில் ஒரே நேரத்தில் கேட்டன. அப்போது தான் தெரிந்தது, நாங்கள் அனைவரும் பொறி வைத்து இழுக்கப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது சில குதிரைகளின் காலடி சத்தம் கேட்டது. நான் யாரென்று பார்க்க முன்னேறிச் சென்றேன். அப்போது மூன்று குதிரைகளில் சிலர் வந்தார்கள். அவர்கள் என்னைத் தாக்கினார்கள். நானும் பதிலுக்குத் தாக்கினேன். ஆனால் என்னால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. நானும் இறந்து விட்டால் இந்த விஷயத்தை யாருக்கும் தெரியப்படுத்த முடியாமல் போய்விடுமே என்று என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி வந்தேன்." என்று சொல்லி முடித்து மயக்கத்தில் கண்களை மூடினான்.

சம்யுக்தன் பார்த்திபனிடம், "சீக்கிரம் இவனை வைத்தியரிடம் அழைத்துச் செல். வைத்தியரிடம் இவனை ஒப்படைத்து விட்டு அரண்மனைக்கு சென்று விசயத்தைச் சொல்லி அரண்மனைக் காவலர்களை அழைத்து வா" என்று கூறினான். பார்த்திபன் அவனை வைத்தியரிடம் ஒப்படைக்க குதிரையில் கொண்டு சென்றான்.

சம்யுக்தன் கனத்த மனதோடு அமைதியாக இருந்தான். சிந்தனை செய்ய முடியாத அளவுக்கு அவன் துக்கம் பெருக்கெடுத்தது. இவன் சொல்வதைப் பார்த்தால் மற்ற நண்பர்களும் உயிரை விட்டிருப்பார்கள் என்று நினைக்கும்போது அவன் உள்ளம் வலியால் துடித்தது. நம் நண்பர்களைக் கொன்றவர்களை பழி வாங்கியே தீரவேண்டும் என்று மனதிற்குள் சபதம் எடுத்துக்கொண்டான். அவர்களின் இறப்பு வெறும் கதையாகப் போய்விடக்கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு சலசலப்பு கேட்டது. சலசலப்பு வந்த திசையை சம்யுக்தன் நோக்கினான். அங்கே யாருமே இல்லை.

பிறகு எதையோ யோசித்தவன், பார்த்திபன் விட்டுச் சென்ற தீப்பந்தத்தை எடுத்துப் பார்த்தான். அது கொழுந்துவிட்டு எரிந்தது. கிட்டத்தட்ட அது அவன் மனதின் நிலைப்பாட்டைக் காட்டியது. தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு அந்த சல சலப்பு வந்த திசையை நோக்கி சென்றான். அங்கு சென்று தீப்பந்த வெளிச்சத்தில் நிலத்தைப் பார்த்தான். அதில் ஒரு காலடி சுவடு இருந்தது. அதைப் பார்த்து சம்யுக்தன் குடிசையின் அருகில் சென்று யாராவது இருக்கிறார்களா என்று தீப்பந்தத்தை சற்றே உயர்த்திப் பார்த்தான். அங்கே யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு சில அடிகள் முன்னே சென்றான்.

திடீரென்று பின்னால் திரும்பி அத் தீப்பந்தத்தை அங்கிருந்த வைக்கோற்போரில் வீசி எறிந்தான். அந்த வைக்கோற்போரில் தீ பரவி சிறிது நேரத்தில் தக தக வென்று எரிய ஆரம்பித்தது. அப்போது அந்த வெளிச்சத்தில் ஓர் உருவம் சம்யுக்தனை கொடிய கண்களோடு முறைத்தவாறு நின்றுகொண்டிருந்தது.

தொடரும்...

பாகம் - 01 - அத்தியாயம் 04

பாகம் - 01 - அத்தியாயம் 06

{kunena_discuss:1135}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.