(Reading time: 22 - 44 minutes)

தொடர்கதை - சாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 06 - சிவாஜிதாசன்

Samrat Samyukthan

அத்தியாயம் 1.6 : அரச சபை

பார்த்திபன் குருதி வெள்ளத்தில் மிதந்திருந்த தன் நண்பனை வைத்தியரிடம் ஒப்படைத்துவிட்டு குதிரையில் அரண்மனையை நோக்கி விரைந்துகொண்டிருந்தான். அவனுடைய மனது படபடத்துக்கொண்டிருந்தது. தன் உயிருக்கு உயிரான நண்பன் சம்யுக்தன் தனியாக இருக்கிறான். சதிகாரக் கும்பலால் அவனுக்கு எந்த ஆபத்தும் நேரக் கூடாது என்ற படபடப்பும், அரண்மனைக் காவல் தளபதியிடம் நடந்ததைச் சொன்னால், அவ்வளவு பெரிய பேராபத்தை, அனுபவமற்றவர்கள், அதிலும் வயதில் மிகவும் சிறியவர்கள் எதிர்கொண்டிருப்பதைக் கேட்டால் சினம் கொண்டு சீறி விடுவாரோ என்ற சிறு அச்சமும் குடிகொண்டிருந்தன.

'எல்லாம் இந்த சம்யுக்தனால் வந்தது; இந்த மாதிரி விசயங்களை அரண்மனையில் உள்ளவர்களிடம் கூறியிருந்தால், அவர்கள் பார்த்துக் கொள்ளப்போகிறார்கள். அதை விடுத்து எல்லா வேலையும் தானே முடித்து விட்டு சோதனையை மட்டும் என் தலை மேல் வைத்து என்னை பலிகடாவாக அனுப்புகிறான். ஒழுங்காக எல்லையில் காவல் புரிந்தோமா, விடியலில் வீட்டிற்கு சென்றோமா, அறுசுவை உணவை உண்டோமா, படுக்கையில் துயில் கொண்டோமா என்றில்லாமல் எல்லாம் தெரிந்த அதிமேதாவி போலவே நடந்துகொள்கிறான். இப்போது நான் காவல்தளபதியிடம் விசயத்தைச் சொல்ல....அவர் கோபம் கொப்பளிக்க....நான் செத்தேன்'. அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும்போதே அரண்மனை வந்து விட்டது.

பார்த்திபன் குதிரையில் இருந்து கீழே இறங்கி அரண்மனை நுழை வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம், "அரண்மனை காவல் தளபதியைக் காண வேண்டும். மிக அவசரம்" என்றான். "என்ன விஷயம்" என்று கேட்டனர். "அதை அவரிடம் தான் கூறவேண்டும். என்னைத் தடுக்காதீர்கள். சீக்கிரம் அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்" என்றான். உடனே, காவலர்கள் பார்த்திபனை அரண்மனைக் காவல் தளபதியிடம் அழைத்துச் சென்றனர்.

அரண்மனை வாசலில் காவல் புரிந்தவர்களும் அரண்மனை மேல் மாடத்தில் காவல் புரிந்தவர்களும் பார்த்திபனைப் பார்த்ததும், இவன் ஏன் இந்நேரத்தில் வந்திருக்கிறான் என்று விசித்திரமாகப் பார்த்தார்கள். பார்த்திபன், 'என்ன இது,.எல்லாரும் என்னை ஏன் இப்படி பார்க்கிறார்கள்? இவர்கள் பார்வையே, நான் ஏதோ குற்றம் செய்து விட்டதைப் போல் என்னை குடைகிறதே' என்று மனதில் எண்ணிக்கொண்டே சென்றான். சில நொடிகளின் நழுவலில் காவல்தளபதி இருக்கும் இடத்தை அடைந்தார்கள்.

காவல் தளபதி, ஆறடி உயரமும் ஆண்களுக்கே உரித்தான வீரம் கொண்ட தேகமும் உடையவராயிருந்தார். பார்த்திபனும் காவலர்களும் வந்திருப்பதைப் பார்த்து , பார்வையாலேயே என்ன விஷயம் என்று கேட்டார். "இவன் தங்களிடம் ஏதோ அவசரமாக கூறவேண்டுமாம்" என்று பார்த்திபனை அழைத்து வந்த காவலன் கூறினான். காவல்தளபதி கூரிய விழியால் பார்த்திபனை துளைத்தெடுக்கும் வண்ணம், "என்ன விசயம்" என்று கேட்டார்.

பார்த்திபன் காய்ந்திருந்த தொண்டையை எச்சில் விழுங்கி சரி செய்து கொண்டான். உதடுகளை நாக்கினால் ஈரப்படுத்திக் கொண்டான். ஒருவித பயத்தோடு நடந்தவற்றை அதிக நேரம் கடத்தாமல் சுருக்கமாக சொல்லி முடித்தான். அதைக் கேட்ட காவல் தளபதியின் கண்கள் எரிமலைக் குழம்பு போல் சினத்தில் சிவந்தன. பார்த்திபன், பயத்தில் காவல் தளபதியின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க தைரியம் இல்லாமல் குற்றம் புரிந்தவனைப் போல் தலை கவிழ்ந்து நின்றான். தளபதி, குத்தீட்டியால் வார்த்தைகளைத் தீட்டி சொல் அம்புகளை அவன் மேல் எய்தினார். பார்த்திபன் மனதில், உயிரோடு இங்கிருந்து திரும்புவோமா என்று நினைத்தபடியே பூமியை நோக்கிக்கொண்டிருந்தான்.

அப்போது, துயில் கலைந்த இளவரசர் தன் அறையை விட்டு வெளியே வந்து மாடத்தில் தென்றலை தழுவிக்கொள்ள அங்கே வந்தார். அப்போது தீபத்தின் வெளிச்சத்தில் காவல் தளபதி யாரிடமோ கோபத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்ததைப் பார்த்து, அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க விரும்பி மாடத்திலிருந்து கீழே இறங்கி சென்றார். அந்த இடத்தை நெருங்க நெருங்க தளபதியின் அனல் கக்கும் வார்த்தைகளை அவரால் கேட்க முடிந்தது.

"உங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் எதற்காக இருக்கிறோம்" என்ற வார்த்தைகள் அவர் காதில் விழுந்தன. இவ்வளவு வசைகளை வாங்கும் அந்த மனதைரியம் கொண்டவன் யாராக இருக்கும் என்று அறியும் ஆவலோடு சென்று பார்த்தபோது, வசைகள் வாங்குபவன் பார்த்திபன் என்று அறிந்ததும் மேலும் ஆச்சர்யமாக இருந்தது. ஆச்சர்யம் தாள முடியாமல் காவல்தளபதியிடம், "என்ன ஆயிற்று" என்று கேட்டான்.

அப்போது பார்த்திபன் ஓரக்கண்ணால் இளவரசனை நோக்கி, 'ஐயோ! இவரும் கூட்டு சேர்ந்து விட்டாரா, ஏற்கனவே சம்யுக்தனுக்கும் இவருக்கும் மனதிற்குள்ளாகவே ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது. நான் வேறு சம்யுக்தனின் பக்கம். சம்யுக்தன் மேலிருக்கும் கோபத்தை எல்லாம் என் மேல் கொட்டி பழி தீர்த்துக்கொள்வார் போலிருக்கிறதே. நிச்சயமாக நமக்கு பாதாளச்சிறை தான். என் வாழ்க்கை இதோடு முடிந்துவிடப் போகிறது' என்று மனதில் நினைத்தான்.

காவல்தளபதி இளவரசரைப் பார்த்து, "மன்னியுங்கள் இளவரசே! தாங்கள் வந்திருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன்" என்றார். இளவரசர், "அது, நீங்கள் அவனை வசை பாடிக் கொண்டிருக்கும்போதே தெரிகிறது" என்றார். தளபதி, பார்த்திபன் கூறியவற்றை இளவரசரிடம் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.