(Reading time: 22 - 44 minutes)

மன்னர் அரச சபையில் நுழைந்தார். எல்லோரும் மன்னருக்கு சிரம் தாழ்த்தி தங்கள் வணக்கங்களை தெரிவித்தனர். மன்னர், எல்லாரையும் அமரும்படி சமிக்ஞை செய்து விட்டு தன் அரியாசனத்தில் அமர்ந்தார். அவருடைய முகம் களையிழந்து இறுக்கத்தோடு இருந்தது. ராஜகுருவை ஒரு முறை நோக்கினார். ராஜகுருவோ மன்னரைக் கவனியாமல் சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார்.

இளவரசன், சம்யுக்தன், பார்த்திபன் மற்றும் சில வீரர்கள் அப் பெண்மணியோடு அரச சபையில் நுழைந்தனர். அரசரை வணங்கிய சம்யுக்தன் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். சம்யுக்தன் கூறியவற்றைக் கேட்டு அரச சபை மட்டுமன்றி அப் பெண்மணியும் அதிர்ச்சியை அவள் முகத்தில் காட்டினாள். சம்யுக்தன் தன்னிடமிருந்த ஓலையை அரசரிடம் ஒப்படைத்தான். அந்த ஓலையைப் பார்த்த அரசர் அவ் வாக்கியத்தைப் படித்துவிட்டு திடுக்கிட்டார். இருந்தும் தன் அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை,

"அரசே ! நடந்தவற்றையெல்லாம் ஒன்று விடாமல் கூறி விட்டேன். இனி தாங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்" என்றான். அரசர் முன் கூனிக் குறுகி நின்றிருந்த சம்யுக்தனைப் பார்த்த இளவரசன், 'பாவம் சம்யுக்தன்' என்று முதலைக் கண்ணீர் வடித்தான்.

அரச சபை பதற்றத்துடன் இருந்தது. மன்னன் குலசேகரவர்மன் அந்த பெண்மணியை உற்று கவனித்துக்கொண்டிருந்தார். அவள் ஒரு பெண்ணாக இல்லாமல் ஓர் ஆணாக இருந்திருந்தால் இந்நேரம் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். பெண்ணாகப் போய்விட்டாளே. என்ன செய்வதென்று மன்னர் யோசித்துக்கொண்டிருந்தார்.

ராஜகுரு கருத்து ஏதும் கூறாமல், நடப்பவற்றை எல்லாம் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார். ராஜகுருவின் அமைதியைப் பார்த்த மன்னரும் அவரிடம் எதுவும் ஆலோசனை கேட்கவில்லை.

மன்னர் எல்லோரையும் பார்த்து விட்டு, "இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்குவது சற்று சிக்கலான காரியமாக இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரோ ஒரு பெண். அது தான் சிக்கலுக்கு முழுக் காரணமும் கூட. பெண்களை ஒற்று வேலைக்கு அனுப்பும் மார்த்தாண்டனின் நிலையை நினைத்தால் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. நம் நாட்டில் பெண்களைக் கொடுமைப்படுத்துவதோ கழுமரத்தில் ஏற்றுவதோ இல்லை" என்று கூறி சற்று யோசித்துவிட்டு, "பெண்ணாக இருப்பதால் இவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்று என் மனது சொல்கிறது. யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால், தெரிவியுங்கள்" என்று கூறிவிட்டு, எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். ராஜருவையும் நோக்கினார். ராஜகுருவோ வழக்கத்திற்கு மாறாக பொறுமையைக் கடைபிடித்துக் கொண்டிருந்தார்.

அரசர் அப் பெண்ணைப் பார்த்து, "நீங்கள் செய்ய வந்த சதி வேலை தான் என்ன? என்னென்ன திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்தீர்கள்? எல்லாவற்றையும் நீ கூறிவிட்டால், நீ உயிரோடு இருக்கலாம். உன்னைச் சேர்ந்தவர்களே உன்னைக் கொல்ல வந்தபோது நாங்கள் தான் காப்பாற்றினோம். உன் நாட்டு மன்னனைப் போல் நாங்கள் கொடூரமானவர்கள் அல்ல. உண்மையைச் சொல்" என்று கூறி விட்டு அப் பெண்மணியை நோக்கினான்.

அவள் தலை கவிழ்ந்து கொண்டே, "அரசே, அவ்வோலையில் எழுதி இருந்தது என்னவென்று எனக்குத் தெரியாது. அவ்வோலையை அம்மூவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டும் தான் எனக்குக் கொடுக்கப்பட்ட பணி" என்றாள்.

"அந்த ஓலை உனக்கு எப்படி வந்து சேருகிறது? எந்த வழியில், யார் கொண்டு வந்து சேர்ப்பது?"

"அது எனக்குத் தெரியாது அரசே. காட்டுப் பகுதியில் ஒரு பட்டுப்போன மரம் உள்ளது. அம்மரப் பொந்தில் ஓலையை வைத்து விடுவார்கள். நான், காட்டிற்கு விறகு பொறுக்குவது போல் சென்று விறகுக் கட்டிற்கு நடுவே ஓலையை மறைத்து எடுத்து வந்து மூவரிடமும் சேர்ப்பேன்."

"நீ வீரபுரத்தில் எவ்வளவு காலமாக இருக்கிறாய்?"

"சில காலம் தான் அரசே!"

"அப்படியானால், அவர்களின் சதித் திட்டம் என்னவென்று உனக்குத் தெரியாது. அப்படித்தானே?"

"ஆம், அரசே "

மன்னர் ராஜகுருவைப் பார்த்து, "என்ன செய்யலாம், ராஜகுருவே" என்று கேட்டார். அது வரை அமைதியைக் கடைப்பிடித்து வந்த ராஜகுரு நீண்ட பெருமூச்சை விட்டு தன் அமைதிக்கு முற்றுப் புள்ளி வைத்து பேச ஆரம்பித்தார்.

"மன்னா, தங்களின் இரக்க குணத்தை நான் மெச்சுகிறேன். இப் பெண் செய்ததோ மாபெரும் தவறு. இவள் முகத்தைப் பார்த்தால் இவளுக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட்டாள் போல் தான் தெரிகிறது. நீங்கள் கொடுத்த அந்த ஒரு வாய்ப்பினை இவள் தவற விடவில்லை. பயன்படுத்திக் கொண்டாள். இவள் பெண் என்பதற்காக துன்புறுத்தாமல், மன்னித்து விடுதலை செய்வது எனக்கும் சரி என்று தான் படுகிறது. ஆனால், ஒரு சில கேள்விகளுக்கு எனக்கு விடையே தெரியவில்லை. இவள் செய்த தவற்றுக்கு தண்டனையில்லை. அதற்கு இவள் பெண் என்பதை ஒரு காரணமாக நீங்கள் முன் வைக்கலாம். இவளை மன்னித்து விட்டாலும் கூட இவளை நாம் வீரபுரத்தில் வைத்துக்கொள்ள முடியாது; இவளுக்கு வேறு வழியே கிடையாது; இவளுடைய நாட்டிற்குத் தான் திரும்ப செல்ல வேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.